கஹட்டோவிட்ட ரிஹ்மி -
3 வருடங்களை உள்ளடக்கிய இத்திட்டத்தின் மூலம் அரச சேவையின் பொறுப்புக் கூறலை பலப்படுத்துவதுடன், ஜனநாயக நிர்வாகத் திட்டமொன்றை உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது மக்களுக்கான பொறுப்புக் கூறலை அதிகப்படுத்துதல், மூலோபாய திட்டமிடல் மற்றும் தொடர்பாடல், கொள்கை சீர்த்திருத்தல் மற்றும் அதன் நடைமுறையை அதிகப்படுத்துதல், இத்திட்டத்தினுள் பெண்கள் மற்றும் பிரதிநிதித்துவமற்ற ஏனையவர்களின் அரசியல் பங்களிப்புக்களை அதிகரித்தல் என்பன எதிர்பார்க்கப்படுகின்றன. இதற்காக 14 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்குவதற்கு எதிர்பார்த்துள்ள USAID, குறித்த நிதியை அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு, வெகுசன ஊடக மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, சுயாதீன ஆணைக்குழு என்பவற்றுக்கு மேற்குறித்தவற்றை செயற்படுத்துவதற்காக வழங்கத்தீர்மானித்துள்ளது.
இச்சந்திப்பில் அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சிற்கு தேவைப்படும் உதவிகள் தொடர்பாக அமைச்சர் மத்தும பண்டாரவினால் விளக்கப்பட்டதோடு, அதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாக USAID நிறுவனத்தின் இலங்கைக்கான உதவி இயக்குனர் திருமதி எலீனா டென்சே அமைச்சரிடம் தெரிவத்தார். இந்த 3 வருடசெயற்திட்டம் இம்மாதம் 23 ஆந்திகதி கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறும்.
அரசாங்க நிர்வாக அமைச்சருடனான இச்சந்திப்பில், பிரதியமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே, அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, USAID இன் ஆசிய பிராந்திய இயக்குனர் எரிக் பர்த்ஹோல்ட், இலங்கை USAID இன் உதவி இயக்குனர் எலீனா டென்சே உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.