அமைச்சர் றிசாட் குடிகாரர்களை வைத்து எனக்கெதிராக வசை பாடுவது சரியா -YLS ஹமீட் கேள்வி

னது முதலாவது கேள்வி: ஜனநாயக அரசியலில் காத்திரமான விமர்சனங்கள் இன்றியமையாததாகும். ஒருவர் ஒரு விமர்சனத்தை செய்கின்றபோது அந்த விமர்சனத்திற்கு உரியவருக்கு பதிலளிக்கும் உரிமை உண்டு. உரியவர் அந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்தபின் எதிர் விமர்சனங்களையும் தொடுக்க முடியும். இதுதான் அரசியல் மரபும் அரசியல் நாகரீகமுமாகும். 

அவ்வாறாயின் நீங்கள் மட்டும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட அரசியல் வாதியா? யாராவது உங்களுக்கு எதிராக காத்திரமான விமர்சனத்தைச் செய்தால் நீங்களோ அல்லது உங்கள் ஊடகப் பிரிவோ உத்தியோகபூர்வமாக பதிலளிக்காமல், உங்கள் ஏவலாளிகளை வைத்து பொய் புனைந்து வசைபாட வைப்பது ஏன் ? நீங்கள் இதுவரை உங்களுக்கெதிரான விமர்சனங்களுக்கு எப்போதாவது பதிலளித்திருக்கின்றீர்களா? விமர்சனங்களுக்கு பதிலளிக்காமல் சம்மந்தமில்லாத பொய்களையும் படுதூறுகளையும் கூறி வசை பாடுவது ஏன் ? உங்களுக்கெதிரான விமர்சனங்கள் உண்மையானவை. அவற்றிற்கு பதிலளிக்க முடியாது. எனவே, ஏதாவது பொய்யைப் புனைந்து வசைபாட கூலியாட்களை அமர்த்துவது நாகரீகமா?


இன்று முஸ்லிம் அரசியல் உங்களால் வரலாற்றில் இல்லாத ஒரு கீழ்த்தரத்திற்கு இறங்கி இருக்கின்றது; என்பது உங்களுக்கு புரியுமா? முதலாவது இந்த நாட்டில் விமர்சனங்களுக்கு பதிலழிக்கப் பயந்து கூலிக்கு ஆள் வைத்து வசைபாடும் கலாசாரத்தை நீங்களே அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள். இரண்டாவது, ஏதாவது ஒன்றைச் செய்துவிட்டு அல்லது சிலவேளை எதனையும் செய்யாமல் அடியாட்களை வைத்து தனக்குத்தானே புகழ்பாடுகின்ற அசிங்கமான அரசியலையும்
அறிமுகப் படுத்தியது; நீங்கள்தான் என்பது உங்களுக்கு தெரியுமா? பொதுவான அரசியல் மரபு, ஒரு அரசியல்வாதி எதையாவது செய்தால் அந்தச் செய்தியை ஊடகங்கள் ஊடாக மக்களுக்குத் தெரிவிப்பார்கள் . அவ்வப்போது நடுநிலை எழுத்தாளர்கள் அரசியல்வாதிகளின் சேவைகளை ஆய்வு செய்து சிலரைப் பாராட்டியும் சிலரை விமர்சித்தும் எழுதுவார்கள் . சில நேரங்களில் அவ்வாறான எழுத்துக்களில் பக்கச்சார்பு இருந்தாலும் அது ஒரு நாகரீக எல்லைக்குள் இருக்கும் . ஆனால் கூலிக்கு ஆள்வைத்து நாளாந்தம் பொய்யாகப் புகழ் பாடுகின்ற அசிங்கமான வேலையை உங்களைப் போல் செய்யமாட்டார்கள்.


அண்மையில் சகோ: ஹுனைஸ் பாறூக் அவர்கள் அக்கரைப் பற்றில் வைத்து உங்களுக்கு எதிராக சில விமர்சனங்களை முன்வைத்தார் . அந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கத் தைரியமில்லாமல் கூலியாட்கள் மூலம் எவ்வளவு அசிங்கமாக அவரைத் திட்ட முடியுமோ அவ்வாறெல்லாம் திட்டினீர்கள். அதற்கு முன்பும் அதையே செய்தீர்கள் . அடிக்கடி அவருக்கு நன்றி உணர்வு இருக்கின்றதா? என்றும் கேட்கின்றீர்கள். உங்களுக்கு நன்றி உணர்வு இருக்கின்றதா? முதலில் அதனைக் கூறுங்கள் . நன்றி என்ற சொல்லுக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? உங்களைப்பற்றி யாராவது எதையாவது கூறிவிட்டால் வரிந்து கட்டிக்கொண்டு வசை பாடுகின்றீர்கள். இப்பொழுது உங்கள் கைவரிசையை என்னிடமும் காட்ட விளைகின்றீர்கள். உங்களுக்காக வசைபாட கிடைத்திருப்பவர்கள் குடிகாரர்களும் போதையில் மிதப்பவர்களும் உங்களைப்போன்றவர்களும் தானா?

நிங்கள் தேர்தல் மேடைகளில் ' குடிகாரர்களை சேர்த்துக் கொள்ளமாட்டேன்' என்று கூறினீர்களே, இன்று உங்களைச் சுற்றி ஒரு குடிகாரக்கூட்டமே, இருக்கின்றதே? அது எப்படி? குடிகாரர்கள்தான் நன்றாக வசைபாடுவார்கள். மட்டுமல்ல வேண்டியதை எழுதி அவர்கள் பெயரில் போடலாம் என்பதாலா?

இவைகள் ஒருபுறமிருக்கட்டும் .உங்களை ஆத்திரப்படுத்தி எனக்கெதிராக வசைபாட வைத்த அந்தப்பேட்டிக்கு வருகின்றேன் . கட்சியின் செயலாளர் YLS ஹமீட் இல்லை, என்று தேர்தல் ஆணையாளர் எங்காவது அறிவித்திருக்கின்றாரா? அல்லது வழக்கைப்பற்றி மட்டும் குறிப்பிட்டிருக்கின்றாரா? அதே நேரம் நீங்கள் போலியாக நியமித்தவரை செயலாளர் என்று தேர்தல் ஆணையாளர் ஏற்றுக் கொண்டிருக்கின்றாரா? இதைத்தானே, நான் கூறினேன் . இதில் என்ன தவறு இருக்கின்றது? பதில்தரமுடியுமா?

அடுத்தது, இன்று உங்களுக்கு எதிராக தொடர்ச்சியாக ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லையா? எதில் முன்வைக்கப்படவில்லை ? அரிசியில் ஊழல், சீனியில் ஊழல், உப்பில் ஊழல், எதனோலில் ஊழல், தையல் மெசினில் ஊழல், என்றெல்லாம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லையா? போட்ட ரோட்டைக் காணவில்லை , புனருத்தாரணம் செய்த குளங்கள் இருக்க புனருத்தாரணத்தைக்காணவில்லை, என்று FCID மற்றும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசாரணை நடைபற்றுக் கொண்டிருக்கவில்லையா? 

எனவே, நான் உண்மையைத்தானே கூறினேன். அதையும் மிகவும் சுருக்கமாகவும் நாகரீகமாகவும் தானே கூறினேன். அதற்கு உங்களவு வேக்காடு வருகின்றதே, இந்த நாட்டின் பாராளுமன்றத்திலேயே ரஞ்சன் ராமனாயக்க, உங்களை ஊழல் வாதி என்றாரே? அப்பொழுது உங்களுக்கு ரோசம் வரவில்லையா? உங்கள் அடியாட்களின் பேனைகள் அப்போது எங்கே போயின? ஏன் நீங்கள் பாராளுமன்றத்தில் எழுந்து நின்று நான் 'சுத்தத் தங்கம்' என்று கூறவில்லை. உங்கள் பருப்பு அங்கு வேகாதா? அரிசி ஊழல் குற்றச்சாட்டில் தமிழ் ஊடகங்களை மாத்திரம் அழைத்து முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கப்பார்த்தீர்களே. மறைந்துவிடுமா? இன்ஷா அல்லாஹ், எனது தொடர்கட்டுரையில் உங்கள் முழுப்பூசணிக்காய் உடைக்கப் படுவதைப்பாருங்கள்.


றிசாட் அவர்களே, எனது அரசியலில் எவருடைய தனிப்பட்ட அசிங்கங்களுக்குள்ளும் நான் சென்றதில்லை. கருத்தியல் ரீதியான விமர்சனங்களை சமூகம் பாதிக்கப்படுகின்ற விடயங்களில் முன்வைப்பேன். அந்த அடிப்படையில்தான் என்னைப் பேட்டிகாண ஒரு ஊடகம் வந்தபோது, அவர்களது பிரதான தலைப்பு அதிகாரப் பரவலாக்கல் என்றுதான் வரமுன் என்னிடம் கூறினார்கள். ஆனால் பேட்டிகண்டபோது அவர்கள் கட்சி விடயங்களுக்குள்ளும் வந்தார்கள் . அவர்களின் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கமாட்டேன், என்று கூறமுடியுமா?

 அல்லது எனது பதிலில் பொய்யைக் கூறியிருக்கின்றேனா? ஏன் இன்று உங்கள் ஊழல் குற்றச் சாட்டால் சமூகம் தலைகுனியவில்லையா? ISIS இன் செயற்பாட்டினால் சர்வதேச ரீதியில் முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள் . அதே போல் உங்களைப்பற்றிய அளவுக்குமீறிய ஊழல் குற்றச்சாட்டினால் முஸ்லீம்கள் என்றால் ஊழல்வாதிகள் என்ற ஒரு அபிப்பிராயம் ஏனைய சமூகங்களுக்கு மத்தியில் இன்று ஏற்பட்டிருப்பது உங்களுக்கு தெரியுமா? அதைப்பற்றியெல்லாம் உங்களுக்கு என்ன கவலை. உங்களுக்கு தொழில் நன்றாக நடந்தால் சரி.? உங்கள் எடுபிடிகளுக்கு எலும்புத்துண்டு ஒழுங்காக வீசப்பட்டால் சரி. ஆனால் உண்மை மக்களிடம் போய்விடக் கூடாது. போனால் தொழில் கெட்டுவிடும். எனவே, யாராவது உண்மையைக் கூறினால் அவருக்கு எதிராக சேறு பூசலும் வசை பாடலும். இது தானா உங்கள் அரசியல். அரசியலுக்கே ஒரு அசிங்கமாக மாறாதீர்கள் .


இன்னும் பல விடயங்களைத் தொடவிரும்பினாலும் கட்டுரையின் நீளம் இடம் தரவில்லை. உங்கள் அடியாட்கள் மூலமாக நீங்கள் எனக்கெதிராக பரப்புகின்ற ஒன்றிற்கு ஒன்று முரணான விடத்தை மட்டும் தொடுகின்றேன். அவைதான் YLS ஹமீட் 100 வாக்கும் பெறமுடியாதவர் என்பதும் YLS ஹமீட் கடந்த தேர்தலில் வேலை செய்யவில்லை, அதனால்தான் கட்சி தோற்றது என்பதமாகும். படுதூறு கூறுகின்றவர்களின் நாவுகளுக்கும் தண்டனை இருக்கின்றது என்பதை முதலில் உங்களுக்கு நினைவூட்டுகின்ற அதே வேளை, YLS ஹமீட் வாக்குப் பலம் இல்லாதவராக இருந்திருந்தால் அவர் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்க்க ஆறு மாதங்களாக ஏன் முயற்சிக்க வேண்டும்? என்ற கேள்வியை எனது தொடர் கட்டுரைக்கு ஒதுக்கி வைத்துவிட்டு உங்களிடம் கேட்க்க விரும்புவது, வாக்குப்பலம் இல்லாத ஒருவர் வேலை செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன? 

அதனால் எவ்வாறு வாக்கு பாதிக்கப்படும் . ஒன்றில் கூறவேண்டும் , ஒரு செல்வாக்குள்ளவர் வேலை செய்யாததினால் வாக்கு குறைந்துவிட்டது; என்று. செல்வாக்கு இல்லாதவரால் வாக்கு எவ்வாறு குறையும் . அவர் சதி செய்தாராம் . எப்படி செய்தார்? வாக்களிக்க இருந்தவர்களை வாக்களிக்க வேண்டாம் என்றாரா? அப்படி அவருடைய சொல்லை மக்கள் கேட்டுருக்கின்றார்கள் என்றால் அவர் செல்வாக்குள்ளவராகத்தானே இருக்க வேண்டும். பானையில் இல்லை அதே நேரம் அகப்பை அள்ளித்தர வில்லை, குற்றம் செய்து விட்டது; என்றால் என்ன அர்த்தம் றிசாட் . உங்களைப் போலவே உங்கள் அடியாட்களையும் தெரிவு செய்திருக்கிறீர்களே!


றிசாட் மீண்டும் கூறுகின்றேன் . அல்ஹம்துலில்லாஹ் உங்கள் பருப்பு YLS ஹமீட் இடம் வேகாது. அதே நேரம் YLS ஹமீட் இத்தனை ஆண்டுகள் கடைப்பிடித்து வருகின்ற நாகரீக எல்லையைத் தாண்ட வைத்து விடாதீர்கள் . நாறி விடுவீர்கள் . உங்களை ஏற்கனவே எச்சரித்திருக்கேன், ' கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கொண்டு கல்லெறியக்கூடாது, என்று. ஆனால் நீங்கள் கல்லெறிவது மட்டுமல்லாமல் ஆடை வேறு களைகின்றீர்கள், உங்கள் அம்மணம் வெளியில் தெரிவதைப் புரிந்து கொள்ளாமல்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -