சுனாமி தனது கோர தாண்டவத்தை தன் மக்கள் மீது விதைத்து இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவடைகிறது. உயிர்களையும் உடமைகளையும் இழந்து மக்கள் நிர்க்கதியானார்கள். பொத்துவிலிருந்து ஆரம்பித்த கிழக்கின் கரையோரம் எங்கும் மரண ஓலங்கள் எழுதப்பட்டது. உயிர்களை மீள உயிர்பிக்க மீட்பர் வருவதில்லை. அவர்களுக்காக பிராத்திப்பதை தவிர வேறு வழிகளுமில்லை.
உடமைகளை இழந்த குடியிருந்த மனைகளை இழந்து நிர்க்கதியான மக்கள் தொடர்பில் அந்த வேளை வீடமைப்பு அமைச்சராக இருந்த பேரியல் அஷ்ரஃப் அவர்கள் சவூதி அரசின் நிதியை கொண்டு அனைத்து வளங்களும் நிறைந்ததான வீடமைப்பு திட்டமொன்றை நுரைச்சோலை பிரதேசத்தில் உருவாக்கினார்.
இந்த இடம் அக்கரைப்பற்று பிரதேச செயலக எல்லைக்குள் அமைந்திருந்தாலும் அவற்றை மிக அண்மித்ததாக திகவாபி சிங்கள கிராமம் உள்ளிட்ட சில சிங்கள குடியேற்றங்கள் காணப்படுகின்றன. முழுக்க முழுக்க அக்கரைப்பற்று பிரதேச செயலக சுனாமி பாதிப்புக்குட்பட்ட மக்களுக்காகவே இது உருவாக்கப்பட்டது.
இனவாத வரை முறைகளில் சிக்கிய மகிந்த ஆட்சியில் பங்காளராக இருந்த ஜாதிக ஹெல உருமய என்கின்ற இன்றைய நல்லாட்சியின் முக்கிய அமைச்சர் சம்பிக்க ரணவக்க தலைமையிலான அணி நீதிமன்றம் சென்றது. அதன் விளைவாக பனிரெண்டு ஆண்டுகளாக பற்றை காடுகளாக பாம்புகளின் வசிப்பிடமாக மாறி இருக்கிறது.
மகிந்த ஆட்சியில் இருக்கும் போது நுரைச்சோலை வீட்டுத்திட்டத்திற்க்கு உரிமை கோருகின்ற சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் அக்கரைப்பற்று பிரதேச செயலகம் மாநகர சபை என்பனவற்றை மறித்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இன்று அவ்வாறான மக்கள் எழுச்சிகளைக் காண முடியவில்லை.
தமது உரிமையை பெற்றுக் கொள்ளக் கூட பின்னால் ஒழிந்திருந்த அரசியல் எம்மவர்களால் புரியாமல் போனது.
அமைச்சர் அதாஉல்லாஹ் அவ்வேளை அதிகாரத்தில் இருந்தார். பேரியல் அதாஉல்லாஹ் அமைச்சருக்கு எதிரான அரசியல் தளத்தில் மோதிக் கொண்டு இருந்தார்கள். இந்த வீட்டுத் திட்டம் வருகின்ற போது பல வழிகளிலும் குறிப்பிட்ட இடம் பொருத்தமானதாக அமையாது என்று மிக நிதர்சனமாக கூறிய விடயங்களை மற்றவர்கள் அரசியலாக பார்த்தனர்.
நடந்தது என்ன..?
இறுதியாக யாருடைய கண்களுக்கு குத்தலாக இருக்குமென்று அதாஉல்லாஹ் அச்சம் வெளியிட்டாரோ அதுவே நடந்தது. ஆனாலும் எம்மிடம் உள்ளதே அரசியல் பிழைப்பு அது அதாஉல்லாஹ் மீது தனது கரங்களை நீட்டியது.
பல முறை பல சுற்றுப் போச்சுவார்த்தைகளில் சிங்களவர்களை இந்த குடியேற்றத்தினுள் உள்வாங்க முடியாது, இது முஸ்லிம் மக்களுக்குரித்தான நன் கொடை என மகிந்த முன்னிலையில் வாதிட்ட அதாஉல்லாஹ்: இறுதியாக தனது அமைச்சினூடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற் கட்டமாக இரண்டரை லட்சம் நஸ்ட ஈடாகவும் வழங்கினார்.
இன்று அதாஉல்லாஹ் இல்லை, மகிந்தவும் இல்லை. நாம் உருவாக்கிய நல்லாட்சியும் வழக்கு போட்டவர்களும் நல்லாட்சியின் பங்காளிகள். இன்னும் என்ன வேண்டும்..?
உடனடியாக தீர்க்க வேண்டிய பிரச்சினைக்கு ஏன் இன்னும் தீர்வு காணாமல் இருக்கிறார்கள்.? நல்லாட்சி என்பதாலா மக்கள் மெளனமாக இருக்கிறார்கள்..?
சவூதி தூதரக அதிகாரிகள் சகிதம் முதலமைச்சரும் மாலை சகிதம் பாம்புகள் வசிக்கும் பற்றை காடுகளை பார்வையிட வந்தனரே...என்ன நடந்தது..?இன்னும் எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்றி விட்டல்லவா, சென்றனர்.
நல்லாட்சியின் பங்குதாரர்களே!!
நாம் இன்னும் சூழ்ச்சிகள் புரியாத சோனகர்களாக வாழ்கிறோம். உயிர் இழந்த உறவுகளுக்காக பிராத்திப்பதை போன்று எமது உடமைகளுக்காக ரப்பிடம் கையேந்துவோம்.