கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமத் அவர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் 2017.04.16 ஞாயிற்றுக்கிழமை பாசிக்குடா நட்சத்திர ஹோட்டலில் புனித அல்-குர்ஆனை மனனம் செய்த ”அல்-ஹாபிழ்” களுக்கான மாபெரும் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு பிரதேசங்களில் இருந்து ஹாபிழ்களின் விபரங்கள் முதலமைச்சரால் திரட்டப்பட்டு சகலருடைய அறிக்கைகளும் பெற்றுக்கொள்ளப்பட்ட பின்னரே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டின் போது முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
புனித அல்-குர்ஆனை மனனம் செய்தவர்களுக்கான சரியான கெளரவம் வழங்கப்படுதல், அல்-குரான் ஆராய்ச்சி மையம் உருவாக்குதல், அல்-குர் ஆன் விளக்கத்தைப் பூரனமாகப் பெற்றவர்களைக் கொண்டு அல்- குரான் விளக்கமளிக்கும் மையங்களை முக்கிய இடங்களில் உருவாக்குதல், தஜ்வீத் முறைப்படி அல்- குரானை கற்றுக்கொடுக்கும் மையங்களை உருவாக்குதல், ஹாபிழ்களுக்கான தனியான பயிற்சிகள் ஆங்கிலம், அராபிக் பேச்சுப்பயிற்சியுடன் தகவல் தொழிற்நுட்பப் பயிற்சிகள் வழங்கல், பெண்களுக்கான அல்-ஹாபிழ்களை உருவாக்குதல், போன்றவை ஏற்பாடு செய்வதுடன் சரியான துறைகளில் அவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை வழங்குதல், உயர்கல்விக்காக செல்வோருக்கு ஊக்கமளித்தல், உயர் கல்வியைத் தொடர உதவிகள் செய்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
குறித்த இம் மாநாட்டுக்கு வெளிநாடுகளில் இருந்து முக்கிய அறிஞ்சர்கள் வருகை தரவுள்ளதுடன் மத்திய கிழக்கு நாடுகளின் இலங்கைக்கான உயர் ஸ்தானிகர்கள், தூதுவர்கள் பலரும் கலந்து கொள்வதுடன் நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.