பறகஹதெனிய தாரூத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரியின் 25 வது கௌரவிப்பு..!

மாவத்தகம தினகரன் நிருபர்-
தூய அகீதாவை சுன்னா கொள்கை அடிப்படையில் கற்றவர்கள் இந்த நாட்டில் உருவாகுதல் வேண்டும். இதற்கு அப்பாற்பட்டவர்களுடைய கருத்துகள் மக்கள் மத்தியில்இருந்து களையப்பட வேண்டும். மக்கள் மத்தியில் குர்ஆன் சுன்னா அடிப்படையிலான வாழ்க்கை அமைய வேண்டும். முஸ்லிம்கள் அகீதா கொள்கை வழிகாட்டலின் பால் ஒன்றிணைக்க வேண்டும். சொற்ப கல்வியை வைத்துக் கொண்டு சமுதாயத்தின் கேள்விகளுக்கு தீர்ப்பினை வழங்கக் கூடாது அல்லது கேள்விகளுக்கு பதில் சொல்ல முனைந்தால் நிச்சயமாக குழப்பங்கள் அதிகரிக்கும் தவிர எங்களால் ஒரு சீரான நிலைக்கு வர முடியாது. 

துறை போகக் கற்ற பெறுமதி மிக்க மார்க்க அறிஞர்களால் மட்டுதான் மார்க்க விளக்கங்களுக்கு தீர்ப்பினை வழங்க முன்வர வேண்டும் என்று ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவரும் பறகஹதெனிய தாரூத் தவ்ஹீத் அரபுக் கல்லூரியின் அதிபருமான அஷஷெய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் மதனி தெரிவித்தார், 

பறகஹதெனிய தாரூத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரியின் 25 வது ஏழு வருட மார்க்கக் கற்கை நெறியை பூர்த்தி செய்து விட்டு வெளியேறும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் கணனி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் 20-12-2016 நடைபெற்றது இந்நிகழ்வில் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுச் செயலாளருமான ஏ. எல். கலிலுர்ரஹ்மான், கலாநிதி அம்ஜத் ராசிக், அஷ்ஷெய்க் எஸ்;. எச். எம். இஸ்மாயீல் உப அதிபர் சமீம் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட தாரூத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரியின் அதிபரும் ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவருமான அஷ்ஷெய்க் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் (மதனி) உரையாற்றும் போது இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்:-

இலங்கையில் ஏகத்துவத்தைப் போதிக்கக் கூடிய தரமான கல்வியை உருவாக்குவதற்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் அப்துல் ஹமீத் அவர்களை தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்பதை வலியுறுத்திக் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். 1947 ஆம் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் அவர் இளைஞராக இருக்கும் போது தூய இஸ்லாத்தைக் கற்றுக் கொள்வதற்காக முனைப்புடன் ஈடுபட்டார். இலங்கையிலுள்ள பல அரபு மத்ரஸாக்களுக்கச் சென்று திருப்தி அடையாத நிலையில் இந்தியாவுக்குச் சென்றார். அங்கு பல கல்லூரிகளுக்கும் சென்று ஏறி இறங்கினார். 

அதிலும் திருப்தி அடையாத நிலையில் பாக்கிஸ்தானில் உள்ள தாருஸ்ஸலாம் என்ற கல்லூரிக்குப் போய் சோந்தார்கள். அவர் பிரபல்யமான ரதலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் தம் சொத்து சுகங்களையும் வசதி வசதி வாய்ப்புக்களையெல்லாம் துறந்து தான் தூய மார்க்கத்தை கற்பதற்காகச் சென்றார். அங்கு ஓரளவு கற்பதற்கான ஆசையும் ஆர்வமும் இருந்தாலும் கூட அதை விடவும் தம் மார்க்கத்தை தூய்மையாக கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் அங்கிருந்து சென்று மதீனா நகரை சென்று அடைந்தார். 

அறிவுத் தாகத்துடன் சென்ற அவர் தூய்மையான மார்க்கத்தை அங்கு முழுமையாகக் பெற்றுக் கொண்டார். அதனைப் பெற்றுக் கொண்டு இலங்கைக்கு விஜயம் செய்து தூய்மையான இஸ்லாத்தை மூளை முடுக்கெங்கும் தவ்ஹீத் பேசக் கூடிய நிலையை உருவாக்கியவரை இந்நாளில் நினைத்துப் பார்ப்பது சிறந்த அம்சமாகும். அவருடைய வழிகாட்டலில் தான் இந்தக் கல்லூரி தோற்றம் பெற்றது.

இந்தக் கல்லூரியில் கற்பிக்கப்படக் கூடிய கொள்கை வழிகாட்டலில் அமைந்துள்ள குர்ஆன் சுன்னா அடிப்படையிலான தெளிவான கொள்கை வழிகாட்டல் இந்த இரண்டும் இங்கே வழங்கப்படுகிறது. அதனை தம்பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். அதன் மூலமாக எமது சமுதாயத்தில் புரையோடிப் போய் உள்ள ஷிரிக் பித்அத் அனாசாரங்கள் , தூய இஸ்லாத்திற்கு முரணாக இருக்கக் கூடிய அனைத்து விவகாரங்களையும் களைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே பெற்றோர்கள் இந்தக் கல்லூரிக்கு பிள்ளைகளைச் கொண்டு வந்து சேர்க்கின்றார்கள். 

இதற்கு மாறாக வேறு உயர் தரப் பாடசாலைகளில் தங்களுடைய பிள்ளைகளை கொண்டு சென்று சேர்த்திருக்கலாம். எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் செயல்பாடுகள் முழுமையாகப் பூர்த்தியாகும். பிழையான எண்ணங்கள் இருந்தால் செயல்பாடுகளும் பிழையானதாகவே இருக்கும். இன்று அரசாங்கப் பாடசாலைகளின் கல்வி நிலைமை முழுக்க முழுக்க தனியார் வகுப்புகளிலேயேதான் தங்கி இருக்கிறது. எமது கல்லூரி அரபுக் கல்லூரிகளின் வரலாற்றில் புரட்சியினை ஏற்படுத்தியதொரு கல்லூரியாகும். ஏனைய அரபுக் கல்லூரிகள் உலகக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ஒரு கடுமையான கட்டுக்கோப்பை வைத்துள்ள கால கட்டத்தில் மார்க்கக் கல்வியுடன் உலகக் கல்விக்கும் முக்கியத்துவம் வழங்கி புரட்சிகரமான தொரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளோம். 

ஆயினும் பாடசாலைக் கல்விக்காகத்தான் இந்தக் கல்லூரியில் பிள்ளைகளை பெற்றோர்கள் சேர்த்திருப்பார்களாயின் அது பிழையான விடயமாகும். இங்கே போதிக்கப்படும் குர்ஆன் சுன்னா அடிப்படையிலான தெளிவான கொள்கை வழிகாட்டலுக்கு துணையாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பாடசாலைக் கல்வி இங்கு போதிக்கப்படுகிறது. பெற்றோர்கள் எந்த தூய்மையான எண்ணத்துடன் பிள்ளைகளை கல்லூரியில் கொண்டு வந்து சேர்த்தார்களோ அந்த தூய்மையான எண்ணம் இடைநடுவில் ஓய்ந்து விடக் கூடாது.

இன்று முஸ்லிம்களுடைய பிரச்சாரப் பணிகளுக்கிடையே காணப்படும் சிக்கல்கள், சமுதாயம் எதிர் நோக்கும் சவால்கள் எல்லாம் அரைகுறையாக கல்வி கற்று விட்டு வந்த மார்க்க உலமாக்களினால் ஏற்பட்டவையாகும். இங்கே ஏழு வருடம் கல்வியைக் கற்று விட்டு வெளியேறிச் செல்லும் மாணவர்கள் இன்னும் கல்வியைப் பூர்த்தி செய்யவில்லை. தொடர்ந்து படிக்க வேண்டும். தொட்டில் தொடக்கும் மண்ணறை வரை செல்லும் வரை கல்வி பயில வேண்டும். எமக்கு முன்சென்ற அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை சற்று நிதானமாகப் பார்ப்போமாயின் அவர்கள் சிறுவயதில் பெரும் ஹிதாபுகளை மனனம் செய்தார்கள். 

தொடர்ந்து படித்து நிதானமாக தெளிவான விளக்கங்களை வழங்கினார்கள். சவூதி அரேபியாவில் மதினா பல்கலைக்ககழம் தொட்டு பல பல்கலைக்கழகங்கள் உள்ளன. அங்கு சென்று எமது மாணவர்கள் கல்வியைத் தொடர வேண்டும். இப்போது நூற்றுக் கணக்கான எமது மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டு இருக்கின்றார்கள். இதைத் தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -