ஊடகப் பிரிவு-
இப்பொழுது இந்த நாட்டிலே நெல் சந்தைப்படுத்தல் சபை சம்பந்தமாகவும் நெல் வினியோகம் சம்பந்தமாகவும் பாரிய பிரச்சனைகளை சில ஊடகங்கள் கிளப்பிக் கொண்டிருப்பதோடு தனியாரும் இது சம்பந்தமாக பேசிக் கொண்டிருப்பதாக அறிய முடிகிறது.
கிராமிய பொருளாதார பிரதி அமைச்சரிடம் எதிர்காலத்தில் நாட்டிலே அரிசி பற்றாக்குறை ஏற்படும் என ஊடகங்கள் கூறும் தகவலின் உண்மைத் தன்மை பற்றி ஊடகவியலாளரால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலே மேற் கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து அது சம்பந்தமாக கருத்து தெரிவிக்கையில்,
இந்த நாட்டிலே இப்பொழுது இரண்டு இலட்சத்து ஒன்பதாயிரம் மெற்றிக் தொன் நெல் நாடு பூராகவும் இருக்கின்ற நெல் சந்தைப்படுத்தும் சபைக்கு சொந்தமான களஞ்சியசாலையிலே இருக்கின்றது.
இவற்றில் எல்லா நெற்களையும் விற்பதற்குரிய தீர்மானம் எடுத்திருக்க வில்லை.ஐம்பதாயிரம் மெற்றிக் தொன்களை எதிர்கால அவசர நிலைக்கு வைத்துக் கொண்டு ஏனைய களஞ்சிய நெற்களை அமைச்சரவையின் தீர்மானத்திற்க்கு அமைவாக விற்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
நெற் சந்நை சபையின் ஊடாக மாவட்டரீதியாக நெற்களை சந்தைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையிலே அமைச்சரவை அனுமதிக்கு ஒப்ப அண்மையிலே விலை மனுக்கள் இலங்கை பூராகவும் கோரப்பட்டது அவ்வாறு கோரப்பட்ட போது பல விண்ணப்பதாரர்கள் மிகக் கூடுதலான அளவு கொள்வனவுக்காக விண்ணப்பித்திருந்த போதிலும் அமைச்சரவையின் அனுமதியின் பேரிலே விண்ணப்பித்தவர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்ததிலிருந்து 50 வீதம் மாத்திரம் விடுவிப்பதற்கான தீர்மானத்தினை செய்து கொண்டிருக்கின்றோம்.
அது மாத்திரமல்லாமல் மாவட்டம் தோறும் இந்த வினியோகம் நடந்து கொண்டிருக்கின்றது. உயர்ந்த விலையிலே நாங்கள் கொடுப்பதை போன்று அந்த விலைக்கு கீழாக மனுக் கோரி இருந்தவர்கள் ஒவ்வொரு மாவட்டத்தில் 10 பேரை தெரிவு செய்து ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கின்ற உச்ச விலைக்கு அந்தந்த மாவட்டத்திலே பதிவு செய்யப்பட்ட அரிசி ஆலைகளுக்கு மாத்திரம் ஐந்நூறு மெற்றிக் தொன் நெற்களை நாங்கள் வினியோகம் செய்கின்றோம்.
எனவே எதிர்காலத்தில் அரிசி தட்டுப்பாடு அடைவதை தவிர்ப்பதோடு மட்டுமல்லாமல் பதுக்கல் நிலைக்கும் இடம் அளிக்கமாட்டோம். ஏனென்றால் நாங்கள் இப்போது திறைசேரியோடு பேச்சு வார்த்தை நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.எதிர்வரும் காலத்திலே ஏற்படும் எதிர்பாராத சூழல், கால நிலை மாற்றம் அல்லது மழை இல்லாத சந்தர்ப்பத்தில் அதுக்கு ஈடு கொடுக்க கூடிய அளவு வெளிநாட்டிலே இருந்து அரிசியினை இறக்குமதி செய்து இந்த நாட்டு மக்களுக்கு போதுமான அளவு அரிசியை வழங்க அரசாங்ங்கம் தயாராக இருக்கிறது. எனக் கூறினார்.