மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்தெடுக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
மாகாண சபைகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் அவற்றுக்கு அரசியல் யாப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வலியுறுத்தியுள்ளார்.
இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முதலமைச்சர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் தென்,ஊவா,மேல் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் இதன் போது தற்போது வௌியிடப்பட்டுள்ள விசேட அபிவிருத்திகள் சட்டமூலம் தொடர்பிலும் பிரதமர் விளக்கமளித்தாகவும் குறித்த சட்டமூலம் அபிவிருத்திகளை துரிதப்படுத்தவே கொணடுவரப்பட்டுள்ளதுடன் அது அதிகாரங்களை ஒருவருக்கு வழங்கும் திவிநெகும போன்ற சட்டமூலங்கள் போல் அமையாது என பிரதமர் தெரிவித்ததாக கிழக்கு முதலமைச்சர் குறிப்பிட்டார்.
எவ்வாறயினும் அரசாங்கம் மாகாண சபைகளை செயற்றிறன் மிக்கதாய் மாற்றும் சட்ட மூலங்களை கொண்டுவர வேண்டும் என்றும் மாகாணங்களில் மத்திய அரசினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மாகாண சபைகளின் பங்களிப்புடன் நடைபெற வேண்டும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் அதில் மாகாண சபைகள் தொடர்பான விடயங்களுக்கு மாகாணங்களின் ஆலோசனைகளை பெற்று அவறறை நடைமுறைப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன் போது இணக்கம் தெரிவித்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்,
அத்துடன் மாகாண சபைகளுக்கு காணி மற்றும் நிதி உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் அதிகாரப் பகிர்வை துரிதப்படுததுவதன் ஊடாகவே இவை சாத்தியப்படும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை கிழக்கு மாகாண சபைக்கான நிதியொதுக்கீட்டில் இம்முறை பாரியளவு நிதி குறைக்கப்பட்டுள்ளது என்பதுடன் அவற்றை அதிகரித்து தர வேண்டும் எனவும் 2016 ஆம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டில் மேலும் கிடைக்கப்பெற வேண்டிய நிதியை விரைவில் பெற்றுத் தர ஆவண செய்ய வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.
அத்துடன் மாகாண சபை உறுப்பினர்களுக்கான நிதியொதுக்கீடுகள் தொடர்பிலும் மாகாண சபை உறுப்பினர்களுக்கான நிதியொதுக்கீடுகளை அதிகரித்து வழங்குவதன் ஊடாக செயற்திறன் மிக்கதாய் அபிவிருத்தி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.