இர்ஷாட்-
எதற்காக பாலம் அக்குறானை விவசாயிகளுக்கு:-
மட்டக்களப்பு கல்குடா தொகுதி கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை, கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் ஆகிய நிருவாக பிரிவுகளுக்கு உட்பட்ட முறுத்தானை கிராம சேவகர் பிரிவில் கொழும்பு மட்டக்களப்பு – புணாணை பிரதான வீதியில் இருந்து பொத்தானை காரையடிப்பட்டி ஊடாக அக்குறாணையினை சென்றடையும் மூக்குறையன் குளத்தோடை பாலம் இது வரைக்கும் அமைக்கப்படாமல் மனித உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கடக்கும் நடை பாதை பாலமாக மரங்களை கொண்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டடு காணப்படுவதானது மனதினை நெகிழ வைக்கும் விடயமாக இருந்து வருகின்றது.
காஞ்சிலங்காடு, அக்குறாணை கண்டம், மினுமினுத்தவெளி கண்டம், போன்ற விவசாய கண்டங்களில் இருந்து வேளாண்மை செய்கைகளில் ஈடுபடுகின்ற விவசாயிகள் தங்களினுடைய போக்குவரத்து வசதிகள் இன்மையினால் கிரான் பொண்டுகள் சேனை ஊடாக சுமார் 25 கிலோ மீற்றர் சுற்றிவளைத்து பயணிக்க நேரிடுகின்றது. அது மட்டுமல்லாமல் மழை காலத்தில் குறித்த ஓடையினால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதினால் விவசாயிகளினுடைய பயணங்கள் முற்றாக தடைப்படுகின்றது.
மேலும் முதலைகள், யானைகள், கொடிய விச பாம்புக்களின் அச்சுறுத்தல் காரணமாகவும் விவசாயிகள் பல அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வரும் அதே நேரத்தில் மாணவர்கள், வயோதிபர்கள், நோயாளிகள் என பலரும் குறித்த பாலம் அமைக்கப்படாமையினால் உயிர் அச்சுறுத்தல்களுக்கும், இன்னோரன்ன கஸ்டங்களுக்கும் முகம் கொடுக்க நேரிடுக்கின்றது. இருந்தும் பல தசாப்தங்காளாக மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்தும் எந்த அரச நிருவாகிகள் மற்றும், அரசியல் தலைமைகளும் இதற்கான தீர்வினை பெற்றுக்கொடுக்காமல் இருப்பது குறித்த பிரதேசத்தில் வாழுகின்ற விவசாய சமூகத்திற்கு செய்கின்ற பாரிய துரோகமாகவே பார்க்கப்படுகின்றது.
ஆகவே குறித்த ஓடைக்கு மேலால் பாலம் அமைக்கப்படுமாயின் 25 கிலோ மீற்றர் சுற்றிவளைத்து பிரயாணம் செய்வது ஏழு கிலோ மீற்றருக்குள் சுருக்கப்பட்டு மக்களினுடைய நாளாந்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு அபிவிருத்தியின் வேகம் அதிக்கப்படும் என்பதில் எவரிடமும் மாற்றுகருத்திருக்க முடியாது. எனவே இந்த நல்லாட்சியில் மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல் தலைமைகள், அரச நிருவாகிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், இஸ்லாமிய அமைப்புக்களை சார்ந்த பொது நிறுவனங்கள் என்பன குறித்த பிரதேசத்து விவசாயிகளின் நீண்ட கால தேவையான அக்குறாணை – மூக்குறையன் குளத்தோடை பாலத்தினை அமைத்து கொடுப்பது காலத்தின் கட்டாய தேவையாகும்.