சிரிய உள்நாட்டுப் போர் - அரபு வசந்தம் முதல் அலப்போ வரை

மகால உலகில் அதிக கவனஈர்ப்பினைப் பெற்றுள்ள உள்நாட்டு மோதல்களுள் சிரிய உள்நாட்டுப் போர் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். அரபு வசந்தத்தினால் உந்தப்பட்ட சிரிய மக்கள், அதிபர் பஸர் அல் அஸாதின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஒன்று திரண்டதன் விளைவே இப்போராகும். சிரிய உள்நாட்டுப் போரில் அஸாதிய அரச படை, குர்தீஸ் போராளிகள், ஐ.எஸ்.ஐ.எஸ் கிளர்ச்சியாளர்கள், ஜாயிஸ் அல் பத்தஹ், நுஸ்ரா மற்றும் அஹ்ரார் அல் ஸாம் அமைப்புக்களை உள்ளடக்கிய கூட்டு முன்னணி ஆகியன முக்கிய தரப்புக்களாகப் பங்கேற்கின்றன. 

சுமார் ஐந்து ஆண்டுகளாக நீடித்து வரும் இப்போரில் இதுவரை நான்கு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர். சிரியாவின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கு மேற்பட்டோர் (சுமார் 12 மில்லியன் மக்கள்) அவர்களது சொந்த இடங்களை விட்டும் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்களுள் சுமார் 4.81 மில்லியனுக்கு மேற்பட்டோர் சிரியாவினை விட்டும் வெளி நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். சிரியாவின் இரண்டாவது மிகப் பெரிய கைத்தொழில், வர்த்தக நகரமான அலப்போ இன்று அதர்மத்தின் பூமியாக மாறியுள்ளது. 

அரபுலகில் அல் - ஸாம் என அறியப்படும் சிரியா மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஒரு குடியரசு நாடாகும். இதன் வடக்கே துருக்கியும் கிழக்கே ஈராக்கும் தெற்கில் ஜோர்தானும் உள்ளது. அதன் மேற்கு எல்லையில் லெபனான் மற்றும் மத்திய தரைக் கடலும் தென்மேற்குப் பிரதேசத்தில் இஸ்ரேலும் அமைந்துள்ளன. இதன் தலைநகர் டமஸ்கஸ் ஆகும். சிரியாவின் மொத்த சனத்தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழியினை தாய் மொழியாகக் கொண்ட சுன்னி முஸ்லிம்களாவர். குறிப்பிட்டளவு கிறிஸ்தவர்களும் அலவிக்களும் (ஷPயா கொள்கையினைப் பின்பற்றுவோர்) சிரியாவில் வாழ்ந்து வருகின்றனர்.

உதுமானிய சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டிருந்த சிரியா, முதலாம் உலக மகா யுத்தத்தினை அடுத்து பிரான்சிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1946 ஏப்ரலில் பிரான்சிய துருப்புக்கள் வெளியேறியதனைத் தொடர்ந்து சிரியா சுதந்திரத்தினைப் பெற்றுக்கொண்டது. சுதந்திரத்தின் பின்னர் தொடர்ச்சியான அரசியல் பதட்டங்களினால் அந்நாடு சிக்கித் தவித்தது. இங்கு இராணுவ சதிப்புரட்சிகளும் ஆட்சிக் கவிழ்ப்புக்களும் சர்வசாதாரணமாக நிகழ்ந்தன. 

1961 டிசம்பரில் இடம்பெற்ற மக்கள் தீர்ப்பு வாக்கெடுப்பினை அடுத்து சிரியா, ஓர் அரபுக் குடியரசாக மாற்றப்பட்டதுடன் பாத் (டீய'யவா) கட்சியினரின் சதிப்புரட்சியினையும் எதிர்கொண்டது. இப்புரட்சியினை அடுத்து நிறுவப்பட்ட அரசாங்கத்தில் பாத் அங்கத்தவர்களே அதிகம் இணைத்துக் கொள்ளப்பட்டனர். 1966 பெப்ரவரியில் பாத் கட்சி உள்ளகரீதியான பிளவினை எதிர்கொண்டதுடன் ஜனாதிபதி அமீன் ஹாபிஸ் சிறைபிடிக்கப்பட்டார். இதன் பின்னர் நசுருடீன் அல் அத்தாசி சிரியாவின் அரச தலைவரானார். எனினும் 1966 இலிருந்து 1970 வரையான சிரியாவின் அதிகாரம் பொருந்திய ஆட்சியாளராக ஸலாஹ் ஜதீத் என்பவரே செயற்பட்டார். 

1970 நவம்பரில் பாத் சோசலிசக் கட்சியின் ஹாபிஸ் அல் அஸாத் சிரியாவில் ஆட்சிக் கவிழ்ப்பினை மேற்கொண்டு அதிகாரத்தினைப் பெற்றுக்கொண்டார். இவரது ஆட்சி 2000 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவர் மரணிக்கும் வரை நீடித்தது. இவரையடுத்து அவரது மகன் பஸர் அல் அஸாத் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பஸர் அல் அஸாத் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விதம் சிரியாவின் ஜனநாயக வீழ்ச்சியினை வெளிக்காட்டியதுடன் டமஸ்கஸ் வசந்தம் ஒன்றிற்கான அழைப்பினையும் துரிதப்படுத்தியது. இதன்போது வெளிப்பட்ட ஜனநாயக எழுச்சியினை பஸர் அல் அஸாத் இரும்புக் கரம் கொண்டு அடக்கியதுடன் அதற்குக் காரணமாக இருந்த பலரை சிறைப்பிடித்தார். 

2007இல் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் பஸர் அல் அஸாத் எவ்வித எதிர்ப்புமின்றி வெற்றி பெற்றார். எனினும் அவர் அதிகாரத்தினைப் பெற்றுக்கொண்ட விதம், அதிகாரத்தின் பின்னரான அவரது செயற்பாடுகள், நீண்டகால குடும்ப ஆட்சி என்பன அஸாதின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை தோற்றுவித்திருந்தன. இந்நிலையில் 2011இல் டியூனிசியாவில் ஆரம்பித்து அரபுலகம் எங்கும் பரவிய 'அரபு வசந்தம்' சிரிய மக்களுக்கு புதிய உத்வேகத்தினைக் கொடுத்தது. அஸாதின் ஜனநாயக விரோத ஆட்சியினை மக்கள் வீரியத்துடன் எதிர்க்கும் நிலை உருவானது. இந்நிலையே சிரியாவின் உள்நாட்டுப் போருக்கும் வழிவிட்டது. 

அஸாதிய குடும்ப ஆட்சியின் கீழ் சிரிய மக்களின் ஜனநாயக உரிமைகள் பல மறுக்கப்பட்டதுடன் சிரிய நாடு பொருளாதார நெருக்கடிகளையும் சந்தித்தது. இந்நிலை சிரிய அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயகப் போராட்டங்கள் வளர்வதற்கு காரணமாக அமைந்தன. குறித்த ஜனநாயகப் போராட்டங்களை அடக்குவதற்கு அஸாதிய படைகள் கையாண்ட உத்திகள் சிரிய மக்களின் புரட்சி மனோபாவத்தினை மேலும் துரிதப்படுத்தியது. 
இந்நிலையிலேயேதான் அரபுலகம் எங்கும் ஜனநாயகத்தின் வசந்தகாலம் விருட்சமாக பிரகாசித்தது. இதன் பயனாக டியூனிசியா, எகிப்து மற்றும் லிபியா ஆகிய நாடுகளின் சர்வாதிகார ஆட்சிகளை புரட்சியாளர்கள் முடிவிற்குக் கொண்டுவந்தனர். இவ் அரபுலக எழுச்சி சிரியாவிலும் துளிர்விட ஆரம்பித்த போதே சிரிய உள்நாட்டு மோதலுக்கான பின்புலங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன. 

அரபு வசந்தத்தினை அடுத்து சிரியா எங்கும் ஜனநாயகக் கிளர்ச்சிகள் ஆரம்பித்தன. இதன் ஒரு கட்டமாக சில இளைஞர்கள் இணைந்து பாடசாலைச் சுவரொன்றில் புரட்சிச் சுலோகங்களை வரைந்து கொண்டிருந்தனர். இதன்போது குறித்த இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். இதனையடுத்து 2011 மார்ச் மாதம் சிரியாவின் தென் பகுதியில் அமைந்துள்ள டெரா எனும் நகரில் ஜனநாயகத்திற்கு ஆதரவாக பாரிய போராட்டங்கள் வெடித்தன. இப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக சிரிய பாதுகாப்புப் படைகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது திறந்தவெளித் தாக்குதல்களை மேற்கொண்டன. இத்தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டதுடன் ஆயிரக்கணக்கானோர் வீதிகளிலும் இழுத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். 

அஸாதிய அரசாங்கத்தின் இவ் ஜனநாயக விரோத செயற்பாடுகளை எதிர்த்து நாடு முழுவதிலும் அமைதியின்மை தோற்றுவிக்கப்பட்டதுடன் சிரிய அதிபர் பஸர் அல் அஸாதினை பதவி விலகக் கோரி பல போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. அரச படைகள் இப்போராட்டங்களை மூர்க்கத்தனமான முறையில் அடக்கமுற்பட்டன. இதன்படி 2011 ஜூலையில் ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் வீதிகளுக்குக் கொண்டு வரப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். அதேவேளை, 2011 ஜூலையில் சுதந்திர சிரிய இராணுவம் என்ற அமைப்பும் தோற்றுவிக்கப்பட்டது. 

சிரியாவில் நிகழ்ந்த தொடர்ச்சியான அடக்கு முறைகளின் விளைவாக அரச எதிர்த் தரப்புக்கள் உள்ளிட்ட கிளர்ச்சியாளர்கள் ஆயுதங்களை கையிலெடுத்தனர். ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களின் பாதுகாப்பிற்கென ஏந்தப்பட்ட ஆயுதங்கள், பின்னர் சிரியப் படைகளுக்கு எதிராகத் திருப்பப்பட்டன.

மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளே அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட சிரிய மக்களின் போராட்டம் சிவில் யுத்தமாக பரிணமிப்பதற்கு வழிவிட்டது. இச்சிவில் யுத்தத்தில் கிளர்ச்சியாளர்கள் தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்தி, அரச படைகளை பலமாக எதிர்கொள்வதற்காக பல பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர். இதன் போது இடம்பெற்ற சண்டைகள் தலைநகர் டமஸ்கஸ் வரை விரிவடைந்திருந்ததுடன் சிரியாவின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான அலப்போ 2012இல் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. 

தற்சமயம் சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தமானது அஸாதிய ஆதரவாளர்களுக்கும் எதிராளிகளுக்குமிடையிலான ஒரு யுத்தமாகவே பார்க்கப்படுகின்றது. அதேவேளை, மத ரீதியான பிரிவுகளை (சுன்னி - ஷPயா) உள்ளடக்கிய ஆதரவுத் தளங்களைக் கொண்டும் சிரிய மோதல் கட்டமைக்கப்பட்டுள்ளது. 

ஆரம்பத்தில் அஸாதிய அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிகள் மதப் பிரிவுகளை முன்னிறுத்தியதாக செயற்படாதிருந்தபோதிலும் ஆயுதப் போராட்டத்தின் தோற்றம் மத ரீதியான குழுக்களுக்கிடையிலான உறவில் இடைவெளிகளை ஏற்படுத்தின. இத்துருவமயமாதல் செயன்முறையினால் சிறுபான்மை மதக் குழுக்கள் அஸாதிய அரசாங்கத்தினை ஆதரிக்க, மிகப் பெரும்பான்மையான சுன்னி முஸ்லிம்கள் அஸாதிய சர்வாதிகார ஆட்சியினை எதிர்க்கலாயினர். 

சிரியாவில் மத ரீதியான பிரிவுகளுடன் கூர்மைப்படுத்தப்பட்டுள்ள உள்நாட்டுப் போர் ஷPயா பெரும்பான்மையினைக் கொண்ட ஈரான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளின் ஆதரவினை அஸாதின் அரசாங்கத்திற்குப் பெற்றுக் கொடுத்தது. அவ்வாறே ஷPயா ஆதரவு கிளர்ச்சிக் குழுக்களான லெபனானிய ஹிஸ்புல்லாக்கள் அஸாதிய அரசாங்கத்திற்கு ஆதரவு நல்கிவருவதுடன் துருக்கி, கட்டார், சவூதி அரேபியா உள்ளிட்ட சுன்னி முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அரசுகள் அஸாதிய அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சிக் குழுக்களை ஆதரிக்கின்றன. 

ஐ.நா. விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையின் படி சிரிய உள்நாட்டு யுத்தத்தில் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள், துன்புறுத்தல்கள், கற்பழிப்பு மற்றும் காணாமல்போதல் உள்ளிட்ட பாரதூரமான யுத்தக் குற்றங்கள் பல இடம்பெற்றுள்ளன. அதேவேளை, முற்றுகையில் அகப்பட்டுள்ள சிவிலியன்கள் உணவு, குடிநீர், சுகாதார சேவைகளைப் பெறுவதிலிருந்தும் தடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதுதொடர்பில் ஐ.நா. பாதுகாப்புச் சபை அவசரகால அமர்வினைக் கூட்டியுள்ளதுடன் சகல தரப்புக்களும் யுத்தத்தினை நிறுத்த வேண்டியதன் அவசியத்தினையும் வலியுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக பொதுமக்களின் வாழ்விடங்கள் மீது ஆயுதங்களைப் பிரயோகிப்பதனை நிறுத்த வேண்டும் எனவும் பாதுகாப்புச் சபை கோரியுள்ளது. 

சிரியாவில் தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரின் போது இடம்பெறும் யுத்தக் குற்றங்களுக்கு அஸாதிய அரச படைகள் மட்டுமன்றி ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட கிளர்ச்சிக் குழுக்களும் காரணமாக உள்ளன. இதுதொடர்பில் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் தடுத்து வைப்புக்கள், அவர்களது பலவந்த தண்டனைகள் என்பன ஐ.நா. வின் பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளன.

எனினும் ஐ.நா. சபையானது சிரிய உள்நாட்டு யுத்தம் தொடர்பில் ஒரு பார்வையாளராக அன்றி, ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகின்றது. குறிப்பாக சர்வதேச மற்றும் பிராந்திய அதிகார நலன்களின் பின்புலத்தில் நின்று செயற்படும் ஐ.நா. தனது செயற்பாடுகளின் மீது அக மற்றும் புற நிலையான வரம்புகளை விதித்துச் செயற்படுவது துரதிஷ;டவசமானதாகும். இதனால் ஜ.நா.வின் வரலாற்றில் மீண்டும் தவறிய ஒரு சந்தர்ப்பமாக சிரிய உள்நாட்டு யுத்தம் அமைந்தாலும் அது ஆச்சரியப்படுவதற்கில்லை. 

சிரிய உள்நாட்டு யுத்தத்தின் விளைவாக பாரிய மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பாக பல்வேறு புள்ளிவிபரங்கள் வெளிவந்த வண்ணமுள்ளன. எனினும் ஐக்கிய நாடுகள் சபை 2013 ஜூன் மாதம் மேற்கொண்ட ஒரு கணிப்பீட்டின்படி சிரிய உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டோர் தொகை 90,000 மதிப்பிடப்பட்டிருந்தது. எனினும் 2015 ஆகஸ்ட் மாதம் இத்தொகை 250,000 ஆக உயர்வடைந்ததாக ஐ.நா. அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. 

யுத்தம் ஆரம்பித்த நாட்களிலிருந்து 4.5 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் அயல் நாடுகளான லெபனான், ஜோர்தான், துருக்கி உள்ளிட்ட நாடுகளில் தஞ்சம் புகுந்தனர். இது மிக அண்மைய உலக வரலாற்றில் பதிவாகியுள்ள அதியுயர் இடப்பெயர்வாகும். அதேவேளை, சுமார் 10 சதவீதமான சிரிய அகதிகள் ஐரோப்பாவில் பாதுகாப்புக் கோரியுள்ளனர். மேலும் 6.5 மில்லியன் மக்கள் உள் நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 2015இல் சுமார் 1.2 மில்லியன் மக்கள் தமது வீடுகளை விட்டும் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். சுமார் 70 சதவீதமான மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதியுறுகின்றனர். 

அல் ஜெஸீரா செய்திச் சேவை வெளியிட்டுள்ள மதிப்பீடுகளின்படி சிரிய உள்நாட்டுப் போரில் இதுவரை நான்கு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு மில்லியனுக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர். சுமார் 12 மில்லியன் மக்கள் அவர்களது சொந்த இடங்களை விட்டும் இடம்பெயர்ந்துள்ளனர்.

ஐ.நாவின் அண்மைய மதிப்பீடுகளின்படி பாதிக்கப்பட்ட 13.5 மில்லியன் சிரிய மக்களுக்கு உதவுவதற்கு 3.2 மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. எனினும் தற்சமயம் அலப்போவில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் இந்தத் தொகையில் மேலும் பன்மடங்கு அதிகரிப்பினை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. 

சிரிய உள்நாட்டு யுத்தத்தில் வெளிநாட்டு ஆதரவுகளும் தலையீடுகளும் கணிசமான செல்வாக்கினைச் செலுத்துகின்றன. இதன்படி சிரியாவில் செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து ஐக்கிய அமெரிக்கக் கூட்டுப் படைகள் 2014 இலிருந்து தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றன. 2015 செப்டம்பரிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட மேற்கு நாடுகளின் ஆதரவு பெற்ற கிளர்ச்சிக் குழுக்களுக்கு எதிராக ரஷ;யப் படைகளும் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. 

ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகள் அஸாதின் அரசாங்கத்தினை எதிர்த்து வருகின்ற போதிலும் இம்முரண்பாட்டில் தீவிரமான ஈடுபாட்டினைக் காட்டி அதனைக் முடிவிற்குக் கொண்டு வருவதற்கு அந்நாடுகள் முயற்சிப்பதில்லை. 2013இல் அஸாதின் அரசாங்கம் இரசாயன ஆயுதங்களைப் பிரயோகித்தபோது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சிரியாவின் மீதான எமது தலையீட்டிற்கான 'சிவப்புக் கோடு' என அதனை வர்ணித்த போதும் அவ்வாறான தலையீடுகள் எதனையும் ஐக்கிய அமெரிக்கா அப்போது மேற்கொள்ளவில்லை. 

பிராந்திய நலன், உலக அதிகாரப் போட்டி என்ற வரையறைக்குள் நின்றே உலக வல்லாதிக்க நாடுகள் சிரிய உள்நாட்டுப் போரினை பந்தாடுகின்றன. இதனால் போர் முடிவுக்குக் கொண்டு வரப்படும் நிலையன்றி அவற்றினை மேலும் துரிதப்படுத்துவதற்கான முயற்சிகளே திரைமறைவில் மேற்கொள்ளப்படுகின்றன. 

சர்வதேச சமூகத்தின் ஈடுபாட்டுடன் சிரிய மோதலினை அரசியல் பேச்சுக்களினூடாக முடிவிற்குக் கொண்டுவருவதற்காக பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு கட்டமாக 2012ஆம் ஆண்டைய ஜெனீவா உடன்பாட்டினை அமுல்படுத்துவதற்கான கோரிக்கையினை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை சிரிய அரசாங்கத்திற்கு விடுத்திருந்தது. 

இது தொடர்பிலான ஜெனீவா - 02 பேச்சுவார்த்தை 2014 இன் ஆரம்பப் பகுதியில் இடம்பெற்றது. ஐ.நா. விஷேட பிரதிநிதி லக்டர் பிராஹிமி என்பவரின் அனுசரணையுடன் இரண்டு கட்டங்களாக இடம்பெற்ற இப் பேச்சுவார்த்தை, எதிர்த் தரப்புக்களின் கோரிக்கைகளுக்கு சிரிய அரசாங்கம் செவிசாய்க்கத் தவறியதனை அடுத்து முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. 

பிராஹிமியினை அடுத்து ஸ்டெபன் டீ மிஸ்ரூரா ஒரு தொடரான உள்ளூர் யுத்த நிறுத்தத்தினை ஏற்படுத்துவது குறித்த விடயத்தில் அதிக கவனம் செலுத்தியிருந்தார். எனினும் அலப்போவில் கட்டுப்பாட்டு வலயங்களை ஏற்படுத்துவது தொடர்பான அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்ட போதிலும் ஹோம்ஸ் புறநகர்ப் பகுதியில் மூன்று வருடங்களாக இடம்பெற்ற முற்றுகை 2015 டிசம்பரில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டது. 

அதேவேளை, ஐ.எஸ். கிளர்சியாளர்களுடனான போராட்டமும் சிரியாவில் அரசியல் தீர்வினைத் தேடுவதற்கான புதிய ஆர்வங்களை ஏற்படுத்தியது. இதற்கமைய ஐக்கிய அமெரிக்கா மற்றும் ரஷ;யாவின் தலைமையில் அரசாங்கம் மற்றும் எதிர்த் தரப்புக்களை உள்ளடக்கிய பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகள் 2016 ஜனவரியில் ஜெனிவாவில் இடம்பெற்றன. இப்பேச்சுவார்த்தை சிரியாவில் சமாதானத்தினைக் கொண்டுவருவதற்காக ஐ.நா. பாதுகாப்புச் சபையினால் முன்மொழியப்பட்ட சமாதானத்திற்கான பாதை வரைபுத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது.

எனினும் மேற்குறிப்பிட்ட பேச்சுவார்த்தைகள் எதுவும் முழுமையாக வெற்றியளிக்காத நிலையில் சிரிய அரச படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான போராட்டம் இடைவிடாது தொடர்ந்தன. 

தற்சமயம் தலைநகர் டமஸ்கஸ், டெய்ர் அஸ் ஸூர், சிரியாவின் தெற்குப் பகுதி, சிரிய - லெபனானிய எல்லைகளை அண்மித்த பிரதேசம், வடமேல் கரையோரப் பிராந்தியம் என்பவற்றினையே சிரிய அரசாங்கம் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இவை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் குர்தீஸ் படைகள் உள்ளிட்ட கிளர்ச்சியாளர்கள் கட்டுப்படுத்துவதாக அல் ஜெஸீரா செய்திச் சேவை குறிப்பிடுகின்றது. 

ஆரம்பத்திலிருந்து கிளர்ச்சிக் குழுக்கள் சிரிய ஆயுத படைகளை எதிர்த்துப் போரிடுவதுடன் ஏனைய ஆயுதக் குழுக்களுடனான போராட்டங்களிலும் அதிக முனைப்புக் காட்டிவருகின்றன. இதனால் ஆரம்பத்தில் பலவீனமடைந்திருந்த சிரிய ஆயுதப் படை தற்சமயம் பலம்பெற முடிந்துள்ளதுடன் கிளர்ச்சிக் குழுக்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை படிப்படியாக இழக்கவும் நேரிட்டுள்ளது.

இதன்படி இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 23ஆம் திகதி முதல் 25 வரை அலப்போ மீது 200 விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. இதுபோன்ற தாக்குதலை தாம் முன்னொருபோதும் பார்த்ததில்லை என்கின்றார் சி.என்.என். செய்தியாளர் ஒருவர். அதேவேளை, டிசம்பர் 13இல் கிளர்ச்சிக் குழுக்களிடமிருந்த அலப்போவின் பெரும்பகுதியினை அரசாங்கப் படைகள் கைப்பற்றியதனை அடுத்து போர் மேலும் உக்கிரமடைந்தது. 

மேற்குறிப்பிட்ட படை நடவடிக்கைகளினால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடியினைத் தீர்ப்பதற்காக துருக்கி மற்றும் ரஷ;யா ஆகிய நாடுகள் யுத்த நிறுத்தத்திற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்தன. இந்நிலையில் சிவிலியன் படுகொலைகளைத் தடுப்பதற்கான வழிவகைகளைக் கண்டறியும் முகமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை அவசரகால அமர்வு ஒன்றினையும் கூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இவற்றின் விளைவாக யுத்த நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டாலும் குறித்த யுத்த நிறுத்தம் ஒரு நாள் மட்டுமே அமுலில் இருந்தது. மீண்டும் வன்முறைகள் வெடித்தன. 

இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி சிரிய இராணுவத்தினர் அலப்போவின் மீது பாரிய இராணுவ நடவடிக்கையினை ஆரம்பித்தனர். இதன் விளைவாக, சிரிய உள்நாட்டுப் போர் மிகவும் நெருக்கடியான நிலையினை எட்டியுள்ளது. ரஷ;ய ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட இவ் இராணுவ நடவடிக்கையின் மூலம் அலப்போ நகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள 90சதவீத நிலப் பரப்பினை சிரியப் படைகள் கைப்பற்றியது. டிசம்பர் 13இல் இது 98 சதவீதமாக அதிகரித்துள்ளதாக சிரிய அரசாங்கம் அறிவித்துள்ளது. 

அலப்போ மீதான முற்றுகை பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கும் அவர்களது வாழ்விடங்கள் அழிக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. தொடர்ச்சியான முற்றுகையினால் அலப்போ மக்கள் பாரிய மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இருப்பினும் பெருந்தொகையான மக்கள் முற்றுகையிலிருந்து வெளிவர முடியாமல் அங்கலாய்க்கின்றனர். முற்றுகையில் அகப்பட்டுள்ள மக்களை வெளியேற்றுவதற்காக செம்பிறைச் சங்கம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பவற்றின் கண்காணிப்புக்களுடன் பேரூந்து சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சில செய்திச் சேவைகள் குறிப்பிடுகின்றன. எனினும் அப்பாவி சிரிய மக்களின் இழப்பீடுகள் நாளாந்தம் அதிகரித்த வண்ணமே உள்ளன. 

அரபு வசந்தத்தின் உந்துதலினால் பஸர் அல் அஸாதின் கொடுங்கோன்மைக்கு எதிராக ஆரம்பித்த சிரிய மக்களின் அமைதிப் போராட்டம் இதுவரை பல இலட்சம் உயிர்களை காவுகொண்டுள்ளது; அய்லான் குர்த்தி, ஒம்ரான் தக்னீஸ் உள்ளிட்ட பல்லாயிரம் சிறுவர்களின் எதிர்காலத்தினைச் சிதைத்துள்ளது; சொந்த நாட்டை விட்டும் விரண்டோடும் அப்பாவி மக்கள் கூட்டத்தினை உருவாக்கியுள்ளது; மொத்தத்தில் அரபு உலகின் அவமானச் சின்னமாக சிரியாவினை இப்போர் மாற்றியுள்ளது. இறுதியாக இக்கட்டுரை எழுதி முடிக்கப்படும் வரை அலப்போவில் அழுகுரல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. 
எம்.ஏ.எம்.பௌசர்,
விரிவுரையாளர்,
அரசியல் விஞ்ஞானத் துறை,
கலை, கலாசார பீடம்,
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -