எம்.ஜே.எம்.சஜீத்-
எமது பிள்ளைகளின் கல்வியில் பெற்றோர்கள் ஆர்வம் செலுத்தி பாடசாலையுடன் நெருக்கமான தொடர்புகளை பேனுவதனூடாகவே சிறந்தோர் கல்விச் சமூகத்தை உருவாக்க முடியுமென ஐக்கிய தேசியக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் எம்.ஏ.ஹசன் அலி தெரிவித்தார்.
சம்மாந்துறை ஜெஸ்மீன் பாலர்பாடசாலையின் 4ஆவது பரிசளிப்பு விழா (20) அண்மையில் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் எமது பிரதேசங்களில் தமது பிள்ளைகளின் கல்வியில் தாய்மார்களே அதிக அக்கரை செலுத்தி வருகின்றனர். குறிப்பாக தமது பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்திற்கு பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் நின்றுவிடாது பாடசாலைகளோடும், ஆசிரியர்களோடும் தொடர்புகளை பேனுவதனூடாகவே நாம் சிறந்ததோர் கல்விச் சமூகத்தை உருவாக்க முடியும்.
ஜெஸ்மீன் பாலர்பாடசாலை சிறார்களின் நிகழ்ச்சிகள் அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளது. இப்பாடசாலை ஆசிரியர்கள் சிறந்த முறையில் மாணவர்களைப் பயிற்றுவித்துள்ளார்கள். இப்பாலர் பாடசாலை பல வளக்குறைபாட்டுடன் கிராமப்புரத்தில் அமைந்திருந்தாலும், மும்மொழிகளிலும் பயிற்றுவிக்கப்பட்டு தங்களது ஆற்றல்களை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பாராட்டுகின்றேன்.
குறிப்பாக எமது பிரதேசத்தின் பெண்களுடைய கல்வி அபிவிருத்தி தொடர்பில் கடந்தகால அரசியல்வாதிகள் கவனம் செலுத்த தவறியுள்ளனர். தற்காலத்திலும் அவ்வாறான நிலமைகளே காணப்படுகிறது. எமது பிரதேச பெண்களின் கல்வியில் ஒரு புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சம்மாந்துறை அல்-மர்ஜான் மகா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். அண்மையில் கல்வி அமைச்சரையும் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளேன்.
சம்மாந்துறை பிரதேசத்தில் முஸ்லிம் பெண்கள் கல்லூரி ஒன்றினை அமைப்பதற்கு உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரினதும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றேன். எதிர்காலத்தில் சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்குவதற்கு கட்சி பேதமின்றி அனைவரும் கைகோர்த்து செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.