முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முதலமைச்சரின் கருத்து சிறுபிள்ளைத்தனமானது

பாறுக் ஷிஹான்-
டமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அண்மையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை சிறுபிள்ளைத்தனமானது என யாழ் மாநகரசபையின் முன்னான் உறுப்பினரும் யாழ் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனையின் தலைவருமான மௌலவி பி.ஏ.எஸ்.சுப்யான் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வடமாகாணசபை எடுத்துள்ள நடவடிக்கைகள் எனும் தலைப்பிலான விடயங்களை ஆராயும் போது இக் கருத்துக்கள் முதலமைச்சரின் சிறுபிள்ளைத்தனமான வியாக்கியானத்தை எமக்கு காட்டுகின்றது.

இக் கருத்துக்கள் முதலமைச்சரின் தனிப்பட்ட கருத்தா? அல்லது வடமாகாண சபையின் கருத்தா? அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தா? அல்லது தமிழ் மக்கள் பேரவையின் கருத்தா? இதனை உரியவர்கள் தெளிவுபடுத்துவதன் மூலம் பல்வேறு சந்தேகங்கள் சமூகங்கள் மத்தியில் எழுவதைத் தவிர்க்க முடியும். இதனை உரியவர்கள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.

மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட செயலகங்களின் மூலமும் பிரதேச செயலாளர்களின் மூலமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளையும் மத்திய அரசின் அமைச்சுக்களே மேற் கொள்கின்றன.

மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கும் மாகாண சபைகளின் நடவடிக்கைகளுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படாதிருப்பதற்காக ஒருங்கிணைந்த மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களை இரண்டினதும் இணைத் தலைவர்களைக் கொண்டு நடத்தப்படுகின்றன.

மத்திய அரசு தனது அமைச்சுக்களின் மூலம் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்த்திற்கு நிதிகளை நேரடியாக ஒதுக்கியிருக்கிறது என்பதை நாம் மறுப்பதிற்கில்லை. ஒதுக்கும் நிதிகள் போதாது என்ற குற்றச்சாட்டுக்களும் உண்டென்பதையும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு மத்திய அரசு மேற்கொண்ட வேலைத்திட்டங்களை வடமாகாண முதலமைச்சர் வடக்கு மாகாண சபை நிதி ஒதுக்கி மேற் கொண்டது போன்று வடக்கில் மீள்குடியேறிய மக்களின் விபரங்களை மாவட்ட செயலகங்களின் மூலம் திரட்டி முன் வைத்து இவ்விடயத்தில் தமிழ் சமூகத்தை பிழையாக வழிநடத்த முற்படுவதுடன் நாட்டு மக்களையும் ஏமாற்ற எடுக்கும் நடவடிக்கையாகவே உள்ளது.

வடமாகாண முஸ்லிம்களின் கேள்வியாதெனில் வடக்கு மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரத்திற்குட்பட்ட நிலையில் தனது வடமாகாண நிதியினைக் கொண்டு தனது அமைச்சுக்கள் மூலம் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்காக எத்தனை வீட்டைக் கட்டிக் கொடுத்துள்ளனர்? எத்தனை பேர்களுக்கு காணிகள் வழங்கியுள்ளனர்? இந்த விபரங்களை முதலமைச்சர் விபரமாகத் தரவேண்டும் என்பதாகும்.

உண்மையில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது அமைச்சுக்களின் நிதியின் மூலம் வீடுகள் அமைத்து தமிழ் மக்களுக்கு வழங்கியுள்ளதை நாங்கள் அறிந்துள்ளோம். இதனை வரவேற்கின்றோம். இவற்றில் எத்தனை வீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளார்?

இது போன்றுதான் காணிகள் கையளிப்புக்களும் ஒவ்வொரு பிரதேச செயலாளரிடமும் முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கு காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடும் முதலமைச்சர் வடமாகாண சபையின் தனது அமைச்சின் மூலம் இது வரையில் வடமாகாணத்தில் முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளின் விபரங்களை மாவட்ட ரீதியாகவும் பிரதேச செயலாளர் ரீதியாகவும் புள்ளி விபரங்களுடன் பகிரங்கமாக வெளியிட்டு முஸ்லிம்களுக்கு உதவமுடியுமா?

இன்றைய அரசியல் சூழ்நிலையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையே நம்பிக்கைகள் கட்டியெழுப்ப வேண்டியது அவசியமும் காலத்தின் கட்டாயத் தேவையாகவும் உள்ளது. இதற்கு இரண்டு பக்கங்களிலும் முயற்சிகள் தேவைகளென்பது மறுக்க முடியாததாகும் சர்வதேச சமூகமும் வடக்கில் 95% வாழும் தமிழ் மக்கள் வடக்கில் சிறுபான்மையாக 5% வாழும் முஸ்லிம் மக்களை எவ்வாறு நடத்துகின்றார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை சர்வதேச சமூகத்தில் நம்பிக்கை வைத்துள்ள தமிழ் தலைவர்களும் தமிழ் மக்களும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டியது முக்கியமாகும்;.

இந் நாட்டில் பெரும்பான்மை சிங்கள் சமூகத்திடம் சம உரிமைகோரும் தமிழ் சமூகம் தன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசத்தில் வாழும் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்கு சம உரிமையை வழங்கி முன்னுதாரணமாக ஏன் நடந்து கொள்ள முடியாதுள்ளது என்பதைத் தமிழ் தலைவர்களும் சமூகமும் சிந்திக்க வேண்டும்.

முஸ்லிம்கள் அன்றும் இன்றும் என்றும் தமிழ்மொழியையும் தமிழ் மக்களையும் நேசிக்கின்றனர். ஐக்கியமாக ஒன்றுபட்டு வாழவும் விரும்புகின்றனர். ஆனால் இதற்கான வாசல் கதவினை தமிழ் மக்களே திறக்க வேண்டும்.

உண்மையில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றத்திலும் முஸ்லிம் மக்களுடனான சுமூகமான நட்புறவை வளர்ப்பதிலும் அக்கறையுடனும் கரிசனையுடனும் ஈடுபடும் ஒரு சில தமிழ் அரசியல் தலைமைகளையும் அதிகாரிகளையும் மக்களையும் இச்சந்தர்ப்பத்தில் பாராட்டாமலிருக்க முடியாது.

அவர்களின் இவ்வாறான நல்ல செயற்பாடுகளே முஸ்லிம் மக்களுக்கு ஓரளவேணும் மன ஆறுதலை அளித்துக் கொண்டுயிருக்கின்றது என்றால் அது மிகையானதல்ல என யாழ் மாநகரசபையின் முன்னான் உறுப்பினரும் யாழ் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனையின் தலைவருமான மௌலவி பி.ஏ.எஸ்.சுப்யான் மேலும் தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -