எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் கன்னியாவில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் மற்றும் கிண்ணியா சூரங்கல் பகுதியில் 15 வயது கர்ப்பிணி கொலை செய்யப்பட்டமையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஆகியோரை ஜனவரி 10ஆம் திகதி வரை விளக்கறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராஜா, இன்று (28) உத்தரவிட்டார்.
திருகோணமலை கன்னியா பகுதியில் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் வாளால் வெட்டிக் கொலை செய்த சந்தேகநபர் ஜனவரி 10ஆம் திகதி வரை விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நவம்பர் மாதம் 13ஆம் திகதி உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்னியா பகுதியைச் சேர்ந்த ராஜலக்ஸ்மணன் (35 வயது) என்பவர் மனைவியான நித்தியா (32 வயது) மகள்மாரான காயத்திரி (10 வயது) சந்தியா (08 வயது)ஆகிய மூவரையும் வாளால் வெட்டிக் கொலைசெய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சூரங்கல் பகுதியில் 15 வயதுடைய கர்ப்பிணியைக் கழுத்து நெரித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரான அதே இடத்தைச் சேர்ந்த பிர்னாஸ் (18 வயது) என்பவரையும் ஜனவரி 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.