க.கிஷாந்தன்-
நுவரெலியா – கந்தபளை பார்க் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், தொழில் திணைக்களங்கள் என பலரிடமும் கூறியும் இதுவரை தீர்வுக் கிடைக்காத பட்சத்தில் ஆதங்கம் கொண்ட பார்க் தோட்ட தொழிலாளர்கள் 500ற்கும் மேற்பட்டோர் கந்தபளை நகரில் வீதிக்கு இறங்கி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
26.12.2016 அன்று காலை 10.45 மணியளவில் இத்தோட்ட தொழிலாளர்கள் இத்தோட்டத்தின் பிரதான இடத்திலிருந்து பதாதைகளை ஏந்தியவண்ணம் கோஷங்களை எழுப்பியவாறு நகரிற்கு வந்துள்ளனர்.
நகரின் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் ஒன்றுக்கூடிய மக்கள் ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். இதன்போது தோட்ட அதிகாரியை வெளியேற்ற வேண்டும். அதற்காக ஒரு மாத காலம் எடுத்தாலும் பரவாயில்லை. பிச்சை எடுத்தாலும் பரவாயில்லை. அதிகாரியை வெளியேற்றியே தீர்வோம் என்ற ஒருமித்த குரலை எழுப்பினர்.
நுவரெலியா - கந்தபளை பார்க் தோட்ட தொழிலாளர்கள் அவர்களின் வாழ்வாதார உரிமை தொடர்பில் தோட்ட நிர்வாகத்திடம் முன்வைத்துள்ள 20 அம்ச கோரிக்கைகளை தோட்ட நிர்வாக அதிகாரி ஊதாசினப்படுத்தியுள்ளார்.
கடந்த 20 நாட்களுக்கு மேலாக சரியான தீர்வினை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பார்க் தோட்டத்தைச் சேர்ந்த கந்தபளை டிவிசன் மற்றும் எஸ்கடேல், பார்க் ஆகிய தோட்டப்பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட 886 தோட்ட தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முன்வைக்கப்பட்டுள்ள 20 அம்ச கோரிக்கைகளில் முக்கிய கோரிக்கையான தோட்ட நிர்வாக அதிகாரியை வெளியேற்றும்படியும், தோட்ட நிர்வாகத்தினால் இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மீளவும் பெற்றுத்தர அத்தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
தோட்டத்தின் நிர்வாக அதிகாரி இராணுவ அடக்குமுறைக்குள் அத்தோட்ட தொழிலாளர்களை அடக்கி வைத்திருப்பதாகவும், தொழிலாளர்கள் பிரச்சினைகளை தீர்க்காது ஊதாசினப்படுத்தி வருவதாகவும், தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தொழிலாளர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளில் இவ்விடயம் முக்கிய அம்சமாக இருந்தாலும் தோட்ட நிர்வாக அதிகாரி தோட்ட தொழிலாளி ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து தொழிலாளி ஒருவரை தாக்கியதாகவும், தோட்ட தொழிலாளர்களுடைய பிள்ளைகளுக்கு இலவசமாக வழங்க கூடிய போஷாக்கு உணவினை வழங்க மறுத்துள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் கோஷம் எழுப்பினர்.
அதேவேளை தோட்டத் தொழிலாளர்களுடைய மருத்துவம், இலவச வாகன போக்குவரத்து, கர்ப்பிணி தாய்தார்களுக்கான சலுகைகள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிதி உதவிகள் போன்றவற்றை இம்மக்களுக்கு வழங்காது புறக்கணித்து வருவதாகவும் அம்மக்கள் சுட்டிக்காட்டினர்.
தோட்டத்தில் படித்த இளைஞர்கள் அதிகமாக காணப்பட்டாலும் அவர்களுக்கு தோட்ட நிர்வாக காரியாலயத்தில் தொழில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள நிலையிலும் தொழில் வழங்காமை இருப்பதையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் கோஷம் இட்டு தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பில் அரசியல்தலைமைகள் தொழிற்சங்கவாதிகள் தொழில் திணைக்கள அதிகாரிக்ள கவனத்திற்கு கொண்டு வந்தும் இதுவரையும் உரிய தீர்வு கிடைக்காத பட்சத்தில் இன்று வீதிக்கு இறங்கியுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
எனவே உடனடியாக தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று நாம் வாக்களித்த அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது தொழிலாளர்கள் கோரிக்கை ஒன்றினையும் முன்வைத்துள்ளனர்.