ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இனவாதிகளின் கருத்துக்களை பிரசாரம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் குறறம் சாட்டியுள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போது பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரதேரர் முஸ்லிம்கள் தொடர்பாக ஒரு மோசமான இனவாதக் கருத்தை கருத்தை வெளியிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தைத் தகர்க்கும் இந்த மோசமான கருத்து அடங்கிய வீடியோவை ஜனாதிபதி ஊடகப்பிரிவு சகல ஊடகங்களுக்கும் வழங்கியிருந்தது. ஒரு சிறுபான்மை இனத்தின் மீது அபாண்டமாக வெளியிடப்பட்ட கருத்தை ஜனாதிபதி ஊடகப் பிரிவு மக்கள் மயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முஜீபுர் றஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
முஜீபுர் றஹ்மான் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.
29.12.2016
திரு. மைத்திரிபால சிரிசேன
அதிமேதகு ஜனாதிபதி,
இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசு
கொழும்பு 01.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,
இனவாதிகளின் கருத்துக்களை பிரசாரம் செய்யும் தாங்களின் ஜனாதிபதி ஊடக பிரிவு தொடர்பாக.
கடந்த 22.12.2016 அன்று, தொல்பொருள் பெருமதிவாய்ந்த வரலாற்றுத் தளங்களைப் பாதுகாப்பது தொடர்பாக தாங்களின்; உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் முஸ்லிம்கள் தொடர்பாகவும் மற்றும் இஸ்லாமிய போதனைகள் தொடர்பாகவும் உண்மைக்கு புறம்பான இனவாதக் கருத்துக்களை உங்கள் முன்னிலையில் வெளியிட்டிருந்தார்.
இந்நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக மோசமான நச்சுக்கருத்துக்களை பரப்பி வரும் ஞானசார தேரர் தொல்பொருள் பெருமதிவாய்ந்த வரலாற்றுத் தளங்களை அழிப்பதற்கு முஸ்லிம்களுக்கு இஸ்லாம் போதனை செய்வதாக அபாண்டமான இனவாத ரீதியிலான கருத்தை வெளியிட்டிருந்தார்.
இந்த நாட்டில் வாழும் ஒரு சிறுபான்மை இனத்திற்கெதிராக ஞானசார தேரரினால் தாங்களின் முன்னிலையில் முன்வைக்கப்பட்ட இந்த நச்சுக் கருத்து அடங்கிய வீடியோ பதிவை தாங்களது ஜனாதிபதி ஊடகப் பிரிவு சகல ஊடகங்களுக்கும் வெளியிட்டும் இருக்கிறது. தாங்கள் இந்நாட்டில் நல்லிணக்கம் கொண்ட நல்லாட்சியை உருவாக்க செயலாற்றும் இத்தருணத்தில் தாங்களது ஊடகப் பிரிவு நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் ஞானசார தேரரின் இனவாதக் கருத்தை நல்லாட்சியின் அரசாங்க வளங்களைப் பயன்படுத்தி அரச அங்கீகாரத்தோடு மக்கள் மயப்படுத்திக்கொண்டிருக்கிறது.
தாங்களது ஊடகப் பிரிவு வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ இனவாதிகளுக்கு உறுதுணையாய் அமையப்போகிறது என்பது மட்டும் தெளிவாகிறது. நல்லாட்சிக்கும் நல்லிணக்கத்திற்கும் பொருத்தமில்லாத இந்த செயற்பாடு தொடர்பாக உங்கள் ஊடகப் பிரிவு மீது விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறும் தயவாய் வேண்டுகிறேன்.
இவ்வண்ணம்-
முஜீபுர் றஹ்மான்,
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்,
கொழும்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்.