மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பொங்கி எழுந்த ஷிப்லி பாறுக் - வீடியோ

எம்.ரீ.ஹைதர் அலி-
ட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 2016.12.26ஆந்திகதி - திங்கட்கிமை நடைபெற்றது. இம்மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் முன்மொழியப்பட்ட விடயங்கள்... 

01. கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நான்கு பேருக்கு பயிர்ச்செய்கை காணிக்குரிய அனைத்துவிதமான அனுமதிகளும் கிடைக்கப்பெற்று மாகாண சபையினூடாக அனுமதிப்பத்திரம் வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ள நிலையில் குறித்த நபர்கள் தங்களது காணிகளில் பயிர் செய்கைகளை மேற்கொள்ள தயாராகவிருந்தனர். 

எனினும் தற்போது அக்காணிகளுக்குள் வேறு நபர்கள் அத்துமீறி பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, இவ்விடயம் தொடர்பாக வாழைச்சேனை மற்றும் வாகரை பொலிஸ் நிலையங்களில் காணி உரிமையாளர்களினால் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதோடு, கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளரினால் இவ்விடயம் தொடர்பாக தான் பரீசிலனைகளை மேற்கொள்வதாகவும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சம்மந்தப்பட்ட காணி உரிமையாளருக்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்றுவரை இப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படாத நிலையில் குறித்த காணியில் தொடர்ந்தும் அத்துமீறிய பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஆகவே இப்பிரச்சினை தொடர்பாக கவனமெடுத்து உடனடியாக உரிய தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

02. டிசம்பர் மாதம் 03ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது பாராளுமன்ற உறுப்பினரான கௌரவ. யோகேஸ்வரன் அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது வாழைச்சேனை கடதாசி ஆலையினை மீண்டும் மீள இயங்க வைக்குமாறு கேட்டுக்கொண்டார். 

இது தொடர்பில் பதிலளித்த கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சர் கௌரவ. ரிசாட் பதியுதீன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்ததாக ஒரு மகஜரை வழங்கினால் அதனூடாக கடதாசி ஆலையினை மீள ஆரம்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.

எனவே மட்டக்களப்பு மாவட்டத்தினை பிரதிநித்தித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து மகஜர் ஒன்றினை வழங்குவதன் மூலம் குறித்த கடதாசி ஆலையினை மீண்டும் மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

03. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குப்பைகளை கொட்டுவதற்கான நிரந்தர தீர்வொன்றினை பெற்றுக்கொடுக்கும் முகமாக UNOPS நிறுவனத்தின் மூலம் திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு இதற்காக கொடுவாமடு பிரதேசத்தில் இடமொன்றும் அவசர அவசரமாக கையளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இதுவரை குறித்த பகுதிகளில் வேலைகள் நடைபெற்றதாக சொல்லப்படுகின்றது.

எனவே இது தொடர்பான உண்மையான நிலவரங்களை கண்டறிந்து தாமதமின்றி இவ்வேலைகளை நிறைவு செய்து வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

04. ஏறாவூர் பற்று பங்குடாவெளி கிராம சேவையாளர் பிரிவிற்குற்பட்ட கொம்பர் சேனை, சங்கத்து வெட்டை மற்றும் முதுரக் காட்டுச்சேனை ஆகிய பகுதிகளில் சுமார் 950 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக பயிர்ச் செய்கையில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இக்குறித்த பகுதிகள் இதுவரைகாலமும் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குள் உள்வாங்கப்படாமையினால் இப்பயிர்ச் செய்கைகளுக்கான போதியளவு நீர் கிடைக்காமை காரணமாக தற்போது விவசாயிகள் தங்களது பயிர்ச் செய்கைகளை கைவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இப்பிரச்சினை தொடர்பாக நான் பல்வேறு முன்னெடுப்புகளை செய்திருந்த போதிலும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் ஒன்றினை மேற்கொள்ளும் பட்சத்தில் இப்பகுதிகளை நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குள் உள்வாங்குவதற்குரிய சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இப்பிரச்சினை தொடர்பாக ஆக்க பூர்வமான தீர்மானம் ஒன்றினை எடுப்பதன் மூலம் குறித்த பகுதிகளின் இருபக்கமும் செல்லும் றுகாமம் வாவி ஆறு மற்றும் பண்டாரக் கட்டு ஆறு ஆகிய ஆற்று நீர்களை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் உடாக பெற்றுக்கொடுத்து அம்மக்களின் வாழ்வாதாரத்தினை முன்கொண்டு செல்ல உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -