காரைதீவு நிருபர் சகா-
நாடறிந்த எழுத்தாளர் புகழ்பூத்த கல்விமான் மறைந்த அருட்சகோ.கலாநிதி எஸ்.ஏ.ஐ.மத்தியு அடிகளார் தொகுத்த செல்வி.நேசராணி தங்கராசா இரசாயனவியல் ஆசிரியையின் 26 வருட கால சேவையை பாராட்டும் சிறப்பு மலர் வெளியீட்டு விழா நாளை 26ம் திகதி திங்கட்கிழமை காலை 10:30 மணியளவில் கல்முனையில் நடைபெறவுள்ளது.
கல்முனை கார்மேல பற்றிமா தேசிய கல்லூரி கிளனி மண்டபத்தில் மாணவர் மீட்பு பேரவையின் தலைவர் எந்திரி.எஸ்.கணேஸ் தலைமையில் நடைபெறும்.
விழாவிற்கு பிரதம அதிதியாக இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கலந்துகொள்வார்.
விஷேட அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான த.கலையரசன் மு.இராஜேஸ்வரன் ஆகியோர் கலந்து சிறப்பிப்பார்கள்.
இந்நிகழ்வை விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா நெறிப்படுத்தி தொகுத்து வழங்குவார்.
மறைந்த எழுத்தாளர் கலாநிதி மத்தியு எழுதிய 56வது நூல் இதுவாகும். இந்நூல் கல்முனை கார்மேல்பற்றிமா தேசிய கல்லூரியில் இரசாயனவியல் ஆசிரியையாக 26 வருடங்கள் சேவையாற்றிய காரைதீவைச் சேர்ந்த செல்வி.நேசராணி தங்கராசா பட்டதாரி ஆசிரியை ஓய்வு பெற்றதை முன்னிட்டு எழுதப்பட்டுள்ளது.
இந்நூலில் அவரிடம் பயின்ற மாணவர்கள் அவருடன் கற்பித்த சக ஆசிரியர்கள் என பல தரப்பட்டவர்களின் கட்டுரைகள் கவிதைகள் இடம்பிடித்துள்ளன. பற்றிமாக்கல்லூரியிலிருந்து பல வைத்தியர்கள் பொறியியலாளர்கள் உருவாவதற்கு அடிப்படைக்காரணிகளில் இவ்வாசிரியையும் ஒருவராவார்.
கிழக்குப்பல்கலைக்கழகத்தில் பயின்று விஞ்ஞான பட்டதாரியாக வெளியேறிய இவரை இனங்கண்டு பற்றிமாவில் இணைத்தவர் முன்னாள் அதிபர் அருட்சகோ.மத்தியு அடிகளார் ஆவார்.
அருட்சகோ மத்தியு அடிகளார் மரணிக்க முன்பு இறுதியாக எழுதிய நூல் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.