காலஞ்சென்ற முன்னாள் பிரதமரும் மூத்த அரசியல்வாதியுமான ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடலுக்கு பாராளுமன்றில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று காலை 10:30 மணியளவில் அன்னாரின் பூதவுடல் பாராளுமன்ற கட்டிடத் தொகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இதன் போது சபாநாயகர் கரு ஜயசூரிய, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்றில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினர் முன்னாள் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ரத்னசிறி விக்ரமநாயக்க சுகயீனம் காரணமாக தனது 83ஆவது வயதில் நேற்று கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் உயிரிழந்தார். அன்னாரின் இறுதிக்கு கிரியைகள் பூரண அரச மரியாதையுடன் எதிர்வரும் 31ஆம் திகதி ஹொரனையில் நடைபெறவுள்ளது. அதேவேளை எதிர்வரும் 30ஆம் திகதி அரசாங்கத்தினால் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் தேசிய கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.