சிங்கள முஸ்லிம் தமிழ் கிறிஸ்தவர் எவராயினும் நோயாளிகள் எனும் போது நாம் நிற்கதியானவர்களே !

இக்பால் அலி -

கரகம புற்றுநோய் வைத்திய சாலைக்கு அடுத்ததாக புற்று நோய் பிரிவொன்று பதுளையில் மாத்திரமே அமைந்துள்ளது. பதுளை மத்திய வைத்திய சாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் மற்றும் நோயாளர்களுடன் வருகை தரும் பொறுப்பாளர்கள் தங்குவதற்கு வசதிகளின்றி பெரும் துன்பங்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக கிழக்கு பகுதிகளிலிருந்து வருபவர்கள் மொழிபிரச்சினைகள் மற்றும் வறிய நிலை காரணமாக பாரிய துயரங்களுக்கு முகங்கொடுக்க நேருகின்றது. இவர்கள் மர நிழல்களிலும் , பஸ் தரிப்பு நிலையத்திலும் இரவு நேரங்களை கழிக்கின்றார்கள். இவர்களின் தேவைகளை கருத்தில் கொண்டு மலையக முஸ்லிம் கவுன்சில் மற்றும் “காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் நிறுவனங்களின் சம்மேளனம் “ ஆகிய தொண்டுநிறுவனங்கள் ஒன்றிணைந்து “UCMC நலன்புரி நிலையம்” எனும் பெயரில் நிலையம் ஒன்றை பதுளை வைத்தய சாலைக்கு அருகில் அமைத்துள்ளார்கள்.

பதுளை மத்திய வைத்திய சாலையின் பணிப்பாளர் எம் கே டி தர்மப்பிரிய அவர்கள் பிரதம அதிதியாகவும் பதுளை முதியங்கன விகாரையின் பிரதம பொறுப்பாளர் முருத்தெனியே தம்ம ரதன தேரோ மற்றும், காத்தான்குடி ஜாமியதுள் பலா கல்லூரியின் பிரதி அதிபரும் காத்தான்குடி காதி நீதிபதியுமான அலியார் அசரத் அவர்களுடன் , பதுளை கதிரேசன் கோயில் பிரதம குருக்களான பால லக்ஷ்மண குருக்கள் , பதுளை ஜஜஸ்ஹில் மஸ்ஜிதுன் நூர் பள்ளிவாயலின் அஷ்ஷைகு இக்பால் (ஹாஷிமி) ஆகிய சமயப் பெரியார்களின் பங்களிப்புடன் மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் நிறுவனங்களின் சம்மேளன பிரதித் தலைவர் எம் ஐ எம் சுபைர் (ஜே பி) அவர்கள், மற்றும் செயலாளர் அஷ்ஷைகு சபீல் (நளீமி) ஆகியோர் உட்பட பதுளை வர்த்தகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரின் பங்கேற்புடனும் இந்த “UCMC நலன்புரி நிலையம்” ஆரம்பித்து வைக்கப் பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரை நிகழ்த்திய முருத்தெனியே தம்ம ரதன தேரோ அவர்கள், “ நோயாளிகளுக்கு உதவுவது என்பது ஜாதி, மத, மொழி நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. எமது சமய நம்பிக்கைபடி பௌத்த போதனைகளின் அடிப்படையில் நோயாளிகளுக்கு சேவகம் செய்வதானது கௌதம புத்தர் பெருமானுக்கு சேவகம் செய்வதற்கு சமமானதாகும். நாம் நோயாளிகள் எனும்போது எமது அரசியல் பலம் , எமது தொழில் அந்தஸ்து ,செல்வாக்கு , பணபலம் ஆகிய எந்தவொரு பலமும் எமக்கு துணை வரப்போவதில்லை. நாம் நிர்கதியான நிலைக்கே தள்ளப் பட்டுவிடுவோம். அவ்வாறான நிற்கதியான நோயாளிகளை இலக்கு வைத்து இந்த மலையக முஸ்லிம் கவுன்சில் UCMC நிறுவனம் இன்று ஆரம்பித்து வைக்கும் “UCMC நலன்புரி நிலையம்” வரலாற்று முக்கியம் வாய்ந்ததாகும்.

எமது முதியங்கன பன்சலை மூலம் முன்னெடுக்கப்படும் இது போன்ற சமூக நல திட்டங்களில் பதுளை முஸ்லிம் மற்றும் இந்துசமய வர்த்தகர்களின் பங்களிப்புகளை நான் இவ்விடத்தில் நினைவு கூற கடமைப் பட்டுள்ளேன். குறிப்பாக ரபீக்ஸ் நிறுவன தலைவர் அல்ஹாஜ் ரபீக் அவர்கள், ஆர் எல் ஜி உரிமையாளர் அல் ஹாஜ் ஜுனைதீன் ,நஜீம்ஸ் உரிமையாளர் அல் ஹாஜ் நஜீம் , கைலாஸ் பெஷன் உரிமையாளர், லங்கா ஹார்ட்வேயார் போன்றவர்கள் எமக்கு என்றும் உதவும் தனவந்தர்களாகும். இன்று உங்களுக்கு இவர்களின் உதவியுடன் காத்தான்குடி சம்மேளனம் உங்களுடன் கைகோர்த்துள்ளது. ஆகவே நீங்கள் இன்று ஆரம்பித்த இந்த நிலையம் மென்மேலும் வளர்ந்து அதன் சேவைகள் மேன்மையடைய எனது ஆசீர்வாதத்தையும் வாழ்த்தினையும் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றும் கூறினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -