முதல்வர் ஜெயலலிதா இறந்த செய்தி காரணமாக இறந்தவர்கள் எண்ணிக்கை குறித்து அதிமுக சார்பில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த அக்டோபர் மாதம் 22ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 75 நாட்கள் தொடர் சிகிச்சைக்குப் பிறகு கடந்த 4ஆம் தேதி மாலை திடீர் மாரடைப்பு காரணமாக கவலைக்கிடமான நிலையில், டிசம்பர்-5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு இயற்கை எய்தினார்.
உடல்நலம் தேறி மீண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல்வரின் மறைவு செய்தி பெரும்பாலானவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சோகத்தில் மூழ்கியும், அதிர்ச்சி அடைந்தும், தற்கொலை செய்துகொண்டும் பலர் இறந்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா மறைவின் தாக்கத்தினால் இதுவரை 470 பேர் இறந்துள்ளதாக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வ செய்தி வெளியாகியுள்ளது. இவர்களில் 77 பேர் அவர் இறந்த அதிர்ச்சி தாளாமல் செய்தி கேட்ட இடத்திலேயே உயிரிழந்தவர்கள்.
இறந்தவர்கள் அனைவருமே சென்னை, வேலூர், திருவண்ணாமலை,திருவள்ளூர், கடலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இறந்தவர்களுக்கு அதிமுக சார்பில் தலா 3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2014ல் கைது செய்யப்பட்டபோது கட்சித் தொண்டர்கள் 41பேர் தற்கொலை செய்துகொண்டனர்,மொத்தம் 113 பேர் உயிரிழந்தனர்.
எம்.ஜி.ஆர்:
எம்.ஜி.ஆர் மறைவின் போதும் இதே மாதிரியான நிலையே இருந்தது, அப்போது எம்.ஜி.ஆர் இறுதி ஊர்வலத்தில் மட்டும் 23 பேர் தற்கொலை செய்தனர்.