இச்சம்பவம் நேற்றுமுன்தினம் பகல் 1மணியளவில் கல்முனையில் இடம்பெற்றுள்ளது.
கல்முனையையடுத்துள்ள சேனைக்குடியிருப்பைச்சேர்ந்த முத்துலிங்கம் வில்வராணி(வயது47) என்ற இளம் குடும்பப்பெண்ணிடமிருந்தே இச்சங்கிலி பறித்தெடுக்கப்பட்டிருந்தது.
எனினும் இப்பறிப்புத்தகவலை கேள்வியுற்ற பாண்டிருப்பு நடமாடும் பொலிஸ் காலரண் பொறுப்பதிகாரி சப்இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் அனோஜன் அங்கிருந்த இளைஞர்களுடன் சினிமாப்பாணியில் சுமார் 8கிலோமீற்றர் விரட்டிச்சென்று கோட்டைக்கல்லாற்றில் வைத்து மடக்கிப்பிடித்தார்.
நிந்தவூரைச்சேர்ந்த அபூபக்கர் ஜிப்ரின் என்பவரே இவ்விதம் சங்கிலியைப்பறித்துச்சென்ற திருடனாவார்.திருடன் பயணித்த கறுப்புநிற பல்சர் மற்றும் பறித்தெடுத்த சங்கிலி என்பன மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:
நேற்றுமுன்தினம் சேனைக்குடியிருப்பைச்சேர்ந்த முத்துலிங்கம் வில்வராணி(வயது 47) என்ற இளம் குடுபபெண் கல்முனை ஆதாரவைத்தியசாலைக்குச் சென்றுவிட்டு வீடுதிரும்பும் வழியில் பாண்டிருப்பிலுள்ள மகளின் வீட்டுக்குச்செல்ல எண்ணி கல்முனை ஆதாரவைத்திய சாலைக்கருகிலுள்ள வீதியால் சென்றுகொண்டிருக்கும் பொழுது பின்னால் மோட்டார்சைக்கிளில்வந்த நபரொருவர் திடீரென அந்தப்பெண்ணின் கழுத்திலிருந்த சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல்வேகத்தில் பறந்தார்.
தெய்வாதீனமாக அங்கிருந்த இளைஞர்கள் சிலர் உடனடியாக தகவலை பாண்டிருப்பு காவலரண் பொலிஸ்பொறுப்பதிகாரிக்கு அறிவித்தனர்.
மறுகம் அவர் விரைந்து அங்குவந்து இளைஞர்களுடன் திருடன் சென்ற பாதையில் மிகவேகமாக பயணித்தனர்.மருதமுனையை தாண்டிக்கொண்டிருந்த சமயம் திருடன் முன்னால் வேகமாகச்செல்வதைக்கண்ணுற்ற குழுவினர் வேகமாக விரட்டிச்சென்றனர்.
திருடனும் தனது சக்திக்குப்பால் மோட்டார்சைக்கிளை செலுத்தியுள்ளார். எனினும் விடாமல் விரட்டிச்சென்ற குழுவினர் கோட்டைக்கல்லாற்றில்வைத்து திருடனை மடக்கிப்பிடித்தனர்.
பொலிஸ் அதிகாரி பாலசிங்கம் அனோஜன் திருடனையும் அவரது மோட்டார்சைக்கிளையும் கல்முனைப்பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
அவரிடமிருந்து 66ஆயிரம் ருபா பெறுமதியான தங்கச்சங்கிலியும் கைப்பற்றப்பட்டது.கல்முனைப்பொலிசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
நீதிபதியின் அனுமதியோடு பொலிஸ் தடுப்புக்காவலில் தற்போது திருடன் மேலதிக விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளான்.