Mohamed Nizous
அந்த
நடுக்கத்தை நினைத்தால்
இன்னும் நடுங்குகிறது
இதயத்துக்குள்.
ஒன்பதைத் தாண்டி
உலுக்கிய குலுக்கம்.
கடலைத் தீண்டி
காவு கொண்ட கலக்கம்.
கடலை தின்ற படி
கடலை ரசித்து வாழ்ந்தவரின்
உடலைக் காவு கொண்ட
உப்பு நீரின் கோரம்.
அலை கொண்ட கடல்
ஆளை கொன்ற கடலாகி
அழவைத்து
தொழ வைத்த நிகழ்வு.
பன்னிரண்டு வருடங்கள்
பறந்து போன பின்னும்
தண்ணீரின் தாக்கம் தந்த
கண்ணீர்கள் காயவில்லை.
ஒண்ணாக இருந்து அதில்
மண்ணாகிப் போனவரின்
அன்னையரும் குடும்பமும்
அழுகிறார்கள் இன்னமும்.
ஒரு நாள் வரும்
உலகம் அழியும்
அதன்
ஒத்திகை காட்டப் பட்ட்து
புத்தி பெறுவதற்கே.
திரும்பிய திசையெல்லாம்
துரும்பாய் கிழித்து வீசிய
அந்த அலைகள்
திரும்பியும் வருமா
தெரியாது.
ஆனால்
மரணங்களும் ரணங்களும்
மாறி மாறி வரும்.
கரணங்களும் பணங்களும்
கைவிட்டுப் போகும்.
சுனாமி
சொல்லி விட்டுப் போன
இறுதிச் செய்தி
இதுதான்...!