கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை ஆகிய நிருவாக பிரிவுகளுக்கு உட்பட்ட கள்ளிச்சை முஸ்லிம் கிராமமானது 1990ம் ஆண்டைய உச்ச கட்ட யுத்தத்திற்கு பின்னர் தென்னிந்திய தமிழ் திரைப்படமான சிட்டிசன் திரைப்படைத்தில் அத்திப்பட்டி எனும் கிராமம் வரைபடத்திலிருது காணாமல் போனது போன்று காண்பிப்பதனை ஒத்ததாகவே கள்ளிச்சை கிராமமும் காணாமல் போயுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள் சமபந்தமாகவும் இடம் பெயர்ந்த முஸ்லிம் குடியிருப்புக்கள் சம்பந்தமாகவும் தொடர்ந்தேர்ச்சியாக பல முக்கிய செய்திகளை சமூகத்திற்கு வெளிக்கொண்டு வந்து ஆவணப்படுத்தும் சமூக சிந்தனையுடனான முயற்சியில் இறங்கியுள்ள சாட்டோ-வை.எல்.மன்சூர் தெரிவிக்கின்றார்.
மேலும் யுத்ததினால் பாதிக்கப்பட்டு தற்பொழுது ஜெயந்தியாய மற்றும் மாஞ்சோலை ஆகிய கிராமங்களில் தற்காலிகமாக இடம் பெயர்ந்து வசித்துவரும் மக்களின் குறைகள் ஒரு புறமிருக்க, கள்ளிச்சைக்கு சமாந்தரமாக வெளியேறிய வடமுனை, ஊத்துச்சேனை போன்ற தமிழ் கிராமங்கள் மீள் குடியேற்றப்பட்டு இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடுகள் அமைக்கப்பட்டு மக்கள் தமது வாழ்க்கையை கொண்டு நடாத்திய போதிலும் இன்னும் முஸ்லிம்களின் கள்ளிச்சை மீள் குடியேற்றம் கேள்விக்குறியாகவே உள்ளது. கள்ளிச்சை கிராமத்தில் கடந்த காலங்களில் 136 குடும்பங்கள் வாழ்ந்து வந்த போதிலும் கடந்த யுத்த காலத்தில் 1990ஆம் ஆண்டு பயங்கரவாத அச்சுறுத்தலினால் இக்கிராமத்தை விட்டு தங்களது உடமைகளை இழந்தவர்களாக வெளியேறி ஜெயந்தியாய, அத்துக்கலை, திவ்லான மற்றும் மாஞ்சோலை போன்ற கிராமங்களில் தற்காலிகமாக மீள்குடியேறியதோடு, வெளியேறிய 136 குடும்பங்களில் அகதி முகாமில் வாழ்ந்த 50 குடும்பங்களுக்கு 1994ஆம் ஆண்டு மகாவலி அபிவிருத்தி திட்டத்தினூடாக ஜெயந்தியாவில் வீட்டுத்திட்டம் மற்றும் வயற்காணிகள் வழங்கப்பட்டு அங்கு அம்மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.
ஆனால் மீதமுள்ள 86 குடும்பங்கள் இன்றுவரை எதுவித காணிகளோ அல்லது தாங்கள் ஆரம்ப காலத்தில் வாழ்ந்த கிராமமான கள்ளிச்சை கிராமத்திற்கோ அல்லது அதற்கு பதிலீடாக வேறு இடங்களிலோ மீள்குடியேற்றப்படவில்லை என்பது கல்குடா சமூகமும் அதிலும் முக்கிய மாவட்டத்தின் அரசியல் தலைமைகளும், ஓட்டமாவடி பிரதேச சபை முக்கியமாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய விடயமாகும்.. மேலும் 2011ஆம் ஆண்டு கள்ளிச்சை கிராமத்திலிருந்து வெளியேறி மீதமுள்ள 86 குடும்பங்களில் 15 பேருக்கு மாத்திரம் 12 கூரைத்தகடுகளும், 8 சீமெந்து பக்கற்றுகளும் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்டு கள்ளிச்சைக் கிராமத்தில் தற்காலிக குடிசைகள் அமைக்கப்பட்டன.
இருந்தபோதும் கோறளைப்பற்று தெற்கு, கிரான் பிரதேச செயலகத்தின் கள்ளிச்சை கிராமத்திற்கு பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தருக்கு கள்ளிச்சை கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்த மீதமுள்ள 86 குடும்பங்களின் விபரப்பட்டியல் வழங்கப்பட்டுள்ளதோடு, கிராம சேவை உத்தியோகத்தரினால் மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் கூறைத்தகடு மற்றும் சீமெந்து பக்கற்றுகள் வழங்கப்பட்ட 15 குடும்பங்களுக்கு மாத்திரம் வீடுகள் வழங்கப்படுமெனவும் மீதமுள்ளவர்களுக்கு பின்னர் வீடுகள் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.
இருந்தபோதும் தற்பொழுது கள்ளிச்சையில் வழங்கப்படும் 15 நபர்களுக்கான வீட்டுத்திட்டத்தில் 15 நபர்களுக்குமுள்ள காணிகள் வெவ்வேறு இடங்களில் குறைந்தது 500 மீற்றர் தூரங்களில் இருப்பதனால் அக்கிராமத்திற்குச் சென்று வீட்டுத்திட்டம் வழங்கப்படவுள்ள 15 குடும்பங்களும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதற்கான காரணமாக தற்பொழுது இக்கள்ளிச்சை கிராமமானது அடர்ந்த காடுகளாகவும் யானைகளின் தங்குமிடங்களாகவும் மாறியுள்ளன என்பதேயாகும். இவை இரண்டையும் நிவர்த்தி செய்து மொத்தமாக மீதமுள்ள 86 குடும்பங்களுக்கும் ஒரே நேரத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்படுமானால் எதுவித அச்சங்களும் அற்றவர்களாக ஒரே நேரத்தில் இக்கிராமத்தில் குடியேற இடம் பெயர்ந்த மக்கள் தயாராக உள்ளனர். அத்தோடு,கள்ளிச்சை கிராமத்தில் சம்சுல் உலூம் ஜூம்ஆ பள்ளிவாயல், கள்ளிச்சை விவசாய அமைப்பு, கள்ளிச்சை மாதர் சங்கம், கள்ளிச்சை கிராம அபிவிருத்தி சங்கம், கள்ளிச்சை சனசமூக நிலையம், மீனவர் சங்கம் மற்றும் கள்ளிச்சை பாடசாலை என்பன காணப்பட்டதனையும் அதற்கான சான்றுகள் இன்றுவரை அழியாது பாதுகாப்பாக இருப்பதனையும் அக்கிராமத்திற்கு அரசியல்வாதிகள், அரச நிருவாகிகள் நேரில் சென்று பார்வையிட்டால் கானக்கூடியதாக இருக்கும்.
இக்கல்லிச்சை கிராமத்தில் வருடந்தோரும் தொழில்களை மேற்கொள்வதற்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, சேனைப்பயிர்ச்செய்கை மற்றும் களியினால் மேற்கொள்ளக்கூடிய தொழில்கள் என்பவற்றுக்கான வளங்கள் இக்கிராமத்தில் காணப்படுகின்றன. இக்கிராமத்தில் வாழ்ந்த 136 குடும்பங்களில் மீதமுள்ள 86 குடும்பங்கள் இக்கிராமத்தில் மீள்குடியேற்றப்படுவார்களாயின் இவர்களுக்கான தொழில் வாய்ப்புக்களையும் இக்கிராமத்திலே பெற்றுக்கொள்வார்கள்.
சுமார் அன்னளவாக 2000 நபர்கள் இக்கிராமத்தில் தொழில்களை மேற்கொள்ளலாம். மேலும், இக்கிராமத்தில் பன்னையாளர்களினால் ஒருநாளைக்கு 1000 லீட்டர் பால் விநியோகிக்கப்படுவதோடு, இக்கிராமத்தில் 360 ஏக்கர் விவசாய பயிர்ச்செய்கைக்கான நிலங்கள் காணப்படுகின்றன. அதில் கள்ளிச்சை குளத்தினால் மாத்திரம் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படும் வயல் காணிகள் 140 ஏக்கர்களாக காணப்படுகின்றது.
அத்தோடு கள்ளிச்சைக் குளத்தை அகலமாக்கி, ஆழமாக்கி புனர்த்தானம் செய்யப்பட்டால் மாதுறு ஓயா வடிச்சல் நீரை சேமித்து வைத்து தேவையான காலங்களில் நீர்ப்பாசனம் செய்வதற்கு உதவியாக இருக்கும்.புணாணை மேற்கு விவசாயக் கண்டங்களுக்கு மேற்குப் புறத்தில் கள்ளிச்சைக் குளம் அமைந்துள்ளது. ஆகவே மேற்கூறப்பட்ட கள்ளிச்சை கிராமத்திலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட முஸ்லிம்களை மீழ் குடியேற்றுவதற்கு எனவே இந்த நல்லாட்சியில் மாவட்டத்தினை பிரதி நிதித்துவப்படுத்துகின்ற அனைத்து அரசியல் தலைமைகள், அரச நிருவாகிகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், இஸ்லாமிய அமைப்புக்களை சார்ந்த பொது நிறுவனங்கள் என்பன தங்களாலான முயற்சிகளை மேற்கொள்வது காலத்தின் கட்டாய கடமையாகும். மேலும் ஜனாதிபதியின் கைவசம் உள்ள மகாவலி வன இலாக, வனவிலங்கு அமைச்சுக்களின் மூலம் தீர்வுகளை அரசியல் தலைமைகளும், அரச நிருவாகிகளும் பெற்றுகொடுக்க முடியும்.