எம்.ரீ.ஹைதர் அலி-
தொலைக்காட்சி நாடகங்களை நாம் பார்த்துக்கொண்டு எமது பிள்ளைகள் மாத்திரம் கல்வியில் கவனம் செலுத்த வேண்டுமென்று எதிர்பார்க்க முடியாது பாலர் பாடசாலை நிகழ்வில் ஷிப்லி பாறுக்.
நல்லொழுக்கம் மற்றும் சிறந்த கல்வியுடன் கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய ஒரு கட்டாய தேவைப்பாடு எமது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
குழந்தைகளின் சோலை இஸ்லாமிய பாலர் பாடசாலையின் விடுகை விழாவும் கலை நிகழ்வும் 2016.12.24ஆந்திகதி - சனிக்கிழமை ஏறாவூர் அல்-ஜிப்ரிய்யா வித்தியாலயத்தின் கேர்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்:-
அரசியல் அதிகாரங்கள் மற்றும் பொருளாதர பலங்களுக்கு அப்பால் நல்லொழுக்கம் மற்றும் சிறந்த கல்வியுடன் கூடிய ஒரு சமூகத்தின் மூலமே மாத்திரம்தான் எமது முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகளை வென்றெடுக்க முடியும். அத்தகைய சிறந்த எதிர்கால நட்பிரஜைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் உற்பட சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பல்வேறு அர்பணிப்புகளைச் செய்யவேண்டியுள்ளது.
அத்தோடு, நாம் எமது வீடுகளுக்குள் தொலைக்காட்சி நாடகங்களை பார்த்துக்கொண்டு எமது பிள்ளைகள் மாத்திரம் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. ஆகவே நாங்கள் எங்கள் பிள்ளைகளின் கல்விக்காக சில தியாகங்களை செய்ய வேண்டும்.
மேலும் எமது பிள்ளைகளுக்கு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் வழிகாட்டுதல்களை உரிய விதத்தில் வழங்க வேண்டும். அவ்வாறன மார்க்க நெறியுடன் கூடியவர்களாக எமது பிள்ளைகளை வளர்க்கும் போதே அவர்களிடத்தின் சிறந்த ஒழுக்க விழுமியங்கள் உருவாகும். அத்தகைய ஒரு சிறந்த சமூகத்தை கட்டியளுப்புவதற்குரிய எம்மாலான அனைத்து விதமான முயற்சிகளையும் முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு சோலை இஸ்லாமிய பாலர் பாடசாலையின் நிருவாக சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டதோடு, பிரதம அதிதியினால் பாலர் பாடசாலை மாணவர்களுக்கான நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.