எம்.வை.அமீர், யு.கே.காலிதீன்-
சாய்ந்தமருதில் வைத்தியத்துறையில் சிறந்து விளங்கிய வைத்திய கலாநிதி எஸ் நஜிமுதின் இலக்கியத்துறையிலும் தனது காலை ஆழப்பதித்து பல்வேறு கவிதைத்தொகுப்புக்களைத் தந்திருந்தார். அந்தவகையில் கவிஞர் எஸ் நஜிமுதினின் “இமைகள் மூடாதிருக்கும்...” எனும் கவிதைத்தொகுதி வெளியீட்டு விழா சாய்ந்தமருது சீ பிரீஸ் வரவேற்பு மண்டபத்தில் 2016-12-23 ஆம் திகதி தமிழ் மருத மாமணி ஏ.பீர்முஹம்மட் தலைமையில் இடம்பெற்றது.
லக்ஸ்டோ ஊடக வலையமைப்பின் முழு ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி மைமூனா பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அதேவேளை கவிஞர் நவாஸ் சௌபி நூலாசிரியரைப்பற்றியும் கவிஞர் பாலமுனை முஹா நூல் நயம் தொடர்பாகவும் கவிஞர் தீரன் ஆர்.எம்.நௌஷாட் கவிவாழ்த்து ஒன்றையும் வழங்கினார்.
நூலின் முதற் பிரதியை தொழிலதிபர் எம்.எச்.எம்.இப்ராஹிம் பெற்றுக்கொண்ட அதேவேளை முதன்மைப்பிரதிகளை வைத்திய கலாநிதி சஹிலா இஸ்ஸடீன் மற்றும் எழுத்தாளர் அதிபர் எம்.எல்.ஏ.எம்.கையூம் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.
சமாதானத்துக்கும் சமூக அபிவிருத்திக்குமான மையத்தின் தலைவர் எம்.எம்.உதுமாலெப்பை மற்றும் கவிஞர்கள் எழுத்தாளர்கள் ஊடகவியலாளர்கள் என பல்வேறு துறைகளையும்சார்தோரும் பங்குகொண்டிருந்த இந்நிகழ்வின்போது லக்ஸ்டோ ஊடக வலையமைப்பின் சார்பில் கவிஞர் வைத்திய கலாநிதி சமூக சிந்தனையாளர் எஸ் நஜிமுதினுக்கு அவ் அமைப்பின் தலைவர் தேசதோய அபிமானி மருதூர் ஏ.எல்.அன்ஸார் தலைமையில் நிகழ்வில் பங்குகொண்டிருந்த அதிதிகளால் “தேச அபிமானி” என்ற கௌரவ விருது ஒன்றும் வழங்கிக்கெளரவிக்கப்பட்டது.
இறுதியில் ஏற்புரை வழங்கிய கவிஞர் வைத்திய கலாநிதி எஸ் நஜிமுதின், தன்னை எழுதத்தூண்டிய சூழ்நிலைகள் பற்றிக் குறிப்பிட்டதுடன் மண்டபம் நிறைந்தவர்களின் வருகையானது எதிர்காலத்தில் தன்னை இன்னும் எழுதுவதற்குத் தூண்டும் என்றும் தெரிவித்தார்.