எம்.ஜே.எம்.சஜீத்-
கிழக்கு மாகாண சபையில் மீண்டும் மாகாண சபை உறுப்பினராக சுபையிரை அமர்த்துவோம் என மீள் குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ். சுபையிரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களை ஏறாவூர் பிரதேச பொது அமைப்புகளுக்கு கையளிக்கும் நிகழ்வு நேற்று (26) ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிர் அவர்கள் சுமார் 20 இலட்சம் ரூபா நிதிகளை இப்பிரதேச பொது அமைப்புக்களுக்காக ஒதுக்கீடு செய்துள்ளார். பொது அமைப்புக்களுக்கு இந்த நிதிகளைக் கொண்டு நாங்கள் பொருட்களை வழங்குவதன் நோக்கம் அந்த அமைப்பு சிறப்பாக இயங்க வேண்டும் என்பதே ஆகும். விசேடமாக இச்சந்தர்ப்பத்திலே மாகாண சபை உறுப்பினர் சுபையிரை பாராட்டுகின்றேன்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிர் இப்பிரதேச அபிவிருத்தியிலே அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் முயற்ச்சிகளை நாம் பாராட்டியே ஆகவேண்டும். அவர் தொடர்ந்தும் அரசியலிலே இருந்து இப்பிரதேசத்தில் மேலும் பல பணிகளைச் செய்ய வேண்டும். அவருக்கு சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
மிக விரைவில் மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ளது. குறிப்பாக கிழக்கு மாகாண சபை தேர்தலை நடாத்துவதற்கு இப்போது அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த தேர்தலிலும் மாகாண சபை உறுப்பினர் சுபையிரை வெற்றிபெறச் செய்து கிழக்கு மாகாண சபையில் அமர்த்துவோம்.
இன்று முஸ்லிம் சமூகம் தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக எமது நாட்டிலே முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிவருகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வுகானப்பட வேணடுமென எதிர்பார்க்கின்றோம். அவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு கானப்பட வேண்டுமானால் நாம் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.