அப்துல் கபூர்-
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் இலண்டன் ஹட்டர்ஸ் பீல்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயற்படவுள்ளதாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் பல்கலைக்கழகத்தின் ஆளணியினரை விழிப்புணர்வூட்டும் நிகழ்வு அண்மையில் பல்கலைக்கழகத்தின் ஆளணி அபிவிருத்தி நிலையத்தில் ஏசியா பவுண்டேஷன் திட்ட ஆலோசகர் எம்.ஐ. வலீத் ஏற்பாட்டில் ஹட்டர்ஸ் பீல்ட் பல்கலைக்கழக குழுவினரோடு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பிடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களின் பங்குபற்றுதலோடு இடம்பெற்றது.
ஹட்டர்ஸ் பீல்ட் பல்கலைக்கழகமானது இலங்கையில் உள்ள சில தேசிய பல்கலைக்கழகங்களோடு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஏற்கனவே தொடர்புகளை ஏற்படுத்தி பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்களினை நடைமுறைப்படுத்தி வருகின்றது. ஆனால் இவ்வருடம் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தோடு இணைந்து செயற்பட வாய்ப்பு கிடைத்தமை மிகவும் பயனுறுதிவாய்ந்ததாக கருதவேண்டியுளளது. ஏன்எனில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தினை அண்டியுள்ள பிரதேசங்கள் அடிக்கடி இயற்கை அனர்த்தங்களுக்கு உட்படுவதால் அதனை முகாமை செய்து கொள்ளுவதற்கு பல்கலைக்கழகம் பாரிய பணியாற்ற வேண்டியுள்ளது.
இப்பல்கலைக்கழகத்தின் எத்துறைசார் விரிவுரையாளர்களும் ஆய்வுக் கட்டுரைகளை எமது நிறுவனத்திற்கு அனுப்புவதன் மூலம் அது தொடர்பில் தெரிவு செய்யப்டுகின்ற ஆய்வுகளுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் என ஹட்டர்ஸ் பீல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டிலான்தி அமரதுங்க தெரிவித்தார்.
இச்சந்திப்பில் பேராசிரியர்கள் பீடாதிபதிபதிகள் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இலங்கை உள்ளுராட்சி அதிகார சபைகளின் சம்மேளனத்தின் தேசிய இணைப்பாளர் ஹேமன்தி குணசேக மற்றும் ஏசியா பவுண்டேஷன் திட்ட ஆலோசகர் எம்.ஐ. வலீத் என பலரும் கலந்து கொண்டனர்.