கடலலையும் – உணர்வலையும்

2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி காலை ஒரு சில வினாடிகளில் உலகத்தையே உலுக்கி விட்டுச் சென்ற சுனாமி பேரலையின் நினைவாக எழுதப்பட்ட கவிதை..
டிசம்பர் இருபத்தி ஆறு
அன்று
விடுமுறை தினம் என்பதால்
பலர்
வீட்டுக்குள் உறங்கிக் கிடந்தார்கள்.

இன்னும் சிலர்
காலை வேளை என்பதால்
கடற்கரைக்கு
நடை பயில வந்தார்கள்.

குழந்தைகள் விளையாடச் சென்றன
இன்னும் சில
குர்ஆன் மத்ரஸா டியூஷன் வகுப்பென
கரையோர பாடசாலைகளில் காத்திருந்தன.

மீனவர்கள் சிலர்
கடலுக்குச் சென்றார்கள்
மீன்கள் பிடித்து வர..

இப்படித்தான்
எல்லாமே இயல்பாக இருக்கையில்
காலை
ஒன்பது மணி தாண்டியது
பெரும் இரைச்சலோடு
பெருங்கடல்
பின்னே சென்று முன்னே வந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில்
ஒரு
காவியம் நிறைவு பெற்றது
உலக ஓவியத்தில் ஒரு பகுதி
உருக்குலைந்து போனது.

கடல் நீர் மட்டுமல்ல
அதனோடு
நெருப்பும் சேர்ந்து வந்தது

நீரோடு தீ வந்ததை
அன்றுதான்
நிதர்சனமாய் கண்டு கொண்டோம்.

நெருப்பு வந்தால்
நீரைக் கொண்டு அணைக்கலாம்
அந்த நீரே
நெருப்பைக் கூட்டி வந்தால்
எதனைக் கொண்டு அணைப்பது..?
எல்லாமே சூனியமானது

கடல்; அலை கரைக்கு வருவதும்
அதில்
கால் நனைத்து சுகம் காண்பதும்
நாம்
காலங் காலமாய் கண்டு வரும் காட்சிகள்..!

ஆனால் – 

அன்று வந்த அலை
சுனாமி அலை என்பதால்
எம்மையெல்லாம்
சுருட்டிவிட்டுச் சென்றது.
மஹ்ஷர் மைதானத்தை
ஒரு கணம்
நினைவுக்கு கொண்டு வந்தது.

தினமும் கரைக்கு வரும் அலை
அன்று ஏனோ
கடலோரத்து தென்னை பனை
அத்தனையும் அரவணைத்துக் கொண்டது
அடங்காமல்
ஆர்ப்பரித்து மேலெழுந்தது.

எதிர்த்தவை அத்தனையும்
இடித்துத் தள்ளி விட்டு
உடைப் பெடுத்து ஊருக்குள் உட்புகுந்தது

சுனாமி அலைக்கு
முகம் கொடுக்க முடியாமல்
கரையோரம் தரை மட்டமானது
இல்லை
கரையோரம் காணாமல் போனது

மரணம் துரத்துவதை
அப்போதுதான்
மனிதர்கள் உணர்ந்து கொண்டார்கள்

வாழ்க்கையை மறந்து
பெட்டி படுக்கை யின்றி
எட்டிய தூரத்திற்கு
எல்லோரும் ஓடத் தொடங்கினார்கள்

தாயை தொலைத்த பிள்ளை
தந்தையை மறந்த மகன்
கணவனைக்
கண்டு கொள்ளாத மனைவி
இப்படி
குடும்பத்தை ஒதுக்கிவிட்டு
அத்தனை பேருமே
தன் உயிர் போதுமென்று
தலை தெறிக்க ஓடினார்கள்..

அவை
மண்ணறை தாண்டிய
மஹ்ஷர் மைதானத்தை
மனக்கண் முன் கொண்டு வந்தது

எதுவும் முடியவில்லை
சுனாமி சுருட்டி வைத்தவற்றில்
சிலர் சிக்கி செத்து போனார்கள்

கம்பியில் சிக்கியவர்கள்
கட்டிட இடிபாட்டுக்குள்
காணாமல் போனவர்கள்
சுனாமி
வெட்டிய குழிக்குள்
வீழ்ந்து மடிந்தவர்கள் என
விபரங்களை
விளங்கிக் கொள்ள முடியவில்லை

இரும்பு போல்
உறுதியாய் நின்ற கட்டிடங்கள்
கரும்பு போல் கசங்கிப் போயின.
காகிதங்களாய் கரைந்து போயின

குர்ஆன் பிரதிகள்
குழந்தைகளின் பாடப் புத்தகங்கள்
இன்னும் பல ஆவணங்கள்
அத்தனையும்
காகிதக் கப்பலாய்
கடல் நீரோடு கரையொதுங்கின.

பாரிய கிணறுகள்
ஆங்காங்கே
பூமிக்கு வெளியே
தூக்கி வைக்கப்பட்டன..

பூமி பிரட்டப்படும்
எனும்
குர்ஆனிய வசனம்
உண்மை என்பதை உறுதிப்படுத்தியது.

கொங்ரீட் தூண்கள்;> கொழுத்த மரங்கள்
தடம் தெரியாமல்
இடம் மாறிச் சென்றன
எஞ்சி நின்றவற்றுள்
மனித உடலின் எச்சங்கள்
மிச்சமாய்த் தொங்கின

தப்பிக்க வழிதெரியாமல்
தடுமாறித் திரிந்தவர்கள்;
அலையோடு அலையாய்
அள்ளுண்டு போனார்கள்;.

கடல்பசிக்கு இரையானோர்
கரையெங்கும்
தீப் பெட்டியின் குச்சிகளாய்
சேர்த்து வைக்கப்பட்டார்கள்

கரையொதுங்கிய உடல்கள்
கணப்பொழுதில்
ஊதிப் பெருத்து உருக்குலைந்து போனது

அமிலம்பட்ட உடல்களாய்
அவையனைத்தும்
அழுகிப்போய்
தூக்க முடியாமல் தொங்கின.

அன்று
கரையோரம் சிரைச் சேதம் செய்யப்பட்டது.
நிலம் பிளந்து கொண்டதால்
பாரிய கட்டிடங்களெல்லாம்
பதுங்கும் குழிகளாய் மாறின..
பங்கருக்குள் பலர் சங்கமித்துப் போனார்கள்

காணாமல் போனவரை
தேடிச்சென்றவரும்
கரையொதுங்கியவரை
காப்பாற்றச் சென்றவரும்
பேரலையின் நீரலைக்குள்
பெறுமதியற்றுப் போனார்கள்

அலை அடித்த வேகத்தில்
பலர்
ஆடைகளின்றி அம்மணமானார்கள்
மானத்தை மறைத்துக் கொள்ள
ஓடமுடியாமல் இன்னும் சிலர்
நீரோடு
நிர்க்கதியாகிப் போனார்கள்.

வீட்டு முற்றத்தில்
விளையாடிய குழந்தைகள்
அலையோடு தோற்றுப்போய்
கடல் நீரோடு
கரியாகி கரைந்து போனார்கள்.

உணவு தந்த கடல்
எம்மிடம்
உதவி கேட்டு வந்ததா..?
அல்லது
உயிரைக் கேட்டு வந்ததா..?
ஒரு கணம் எண்ணத் தோன்றியது.

வந்த வேலையை முடித்துவிட்டு
வங்கக் கடல் வதிவிடம் சென்றது
பொங்கிய அலைக்குள்
பொசுங்கிப் போனவர்கள்
பிணமாக அன்று
பிரித்தெடுக்கப்பட்டார்கள்.

கரையொதுங்கிய மீன்களைப்போல்
கரையெங்கும்
மனித உடல்கள்
மலிந்து காணப்பட்டன.

கரை தாண்டிய கடல்நீர் வற்றியது
ஆனால்
கரை புரண்ட
மக்களின் கண்ணீரும் செந்நீரும்
இன்னும்
வற்றவுமில்லை காயவுமில்லை.

நன்றியுடன் - மதியன்பன் 26.12.2016

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -