கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகுட்பட்ட பல ஊர்களில் டெங்கு நோய் பரவி வருவதை நாம் அறிவோம். இப்பிரதேசத்தில் கல்முனை முஸ்லீம் பிரிவு, நிந்தவூர், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரிவிற்குள் மிக அதிகமான டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட நோயாளர்கள் அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை உட்பட ஏனைய வைத்தியசாலைகளில் மேலதிக சிகிச்சை பெற்று வருகின்றார்கள். வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. சமாளிப்பதும் வைத்தியசாலைகளிற்கு மிக கஷ்டமாக இருக்கின்றது.
டெங்குவை தடுப்பதற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கவும் சுகாதார அமைச்சு பல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
நேற்று கொழும்பில் டெங்கு தடுப்பு பிரிவு பிரதி அமைச்சர் பைசால் காசீம் அவர்களது அழைப்பின்பேரில் அவசரமாக கூடியது. அதனைத்தொடர்ந்து கொழும்பில் இருந்து ஒரு உயர்மட்ட குழு இன்று விமானம் மூலம் கமுனைக்கு வந்து பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், பிரதேச சபை செயளாலர்களுடனான கலந்துரையாடலை மேற்கொண்டு உடனடியாக எடுக்கப்பட வேண்டிய பல திட்டங்களை வரைந்தது.
இக்குழுவுடன் பிரதி அமைச்சர் பைசால் காசீமும் வருகை தந்திருந்தார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வணிக சேகர உட்பட பிரதேசத்தின் வைத்தியசாலைகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இங்கு உரையாற்றிய பிரதி அமைச்சர்:-
“சுகாதார திணைக்களம் மட்டுமன்றி சமூக மட்டத்தில் இயங்குகின்ற அனைத்து நிறுவனங்களும், ஸ்தாபனங்களும் இந்த டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் முழு மூச்சாக ஈடுபடவேண்டும், எமது அமைச்சு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றது. அத்துடன் சாய்ந்தமருது, நிந்தவூர் வைத்தியசாலைகளை நோயாளர்களுக்கு தேவையான சிகிச்சையினை வழங்கக்கூடியவாறு தயார்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் எடுக்க வேண்டும். அதற்குரிய மேலதிக நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கின்றோம்” என்று கூறினார்.
நுளம்புகளினை குறைப்பதற்காக புகை விசிறும் ஐந்து உபகரணங்களையும் அமைச்சர் நிகழ்வின் இறுதியில் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளரிடம் கையளித்தார்.
மு.இ.உமர் அலி.