மாடிவீட்டில் நிம்மதியற்ற வாழ்க்கை..!

க.கிஷாந்தன்-
லிந்துலை திஸ்பனை தோட்டத்தில் மாடி வீடுகளில் வாழும் மக்கள் பல்வேறுப்பட்ட சுகாதார பிரச்சினைகளை சந்தித்து வருவதாக இங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 05 மாத காலமாக இக்குடியிருப்பு பகுதியில் உள்ள வடிக்கான் நிரம்பி வடிவதால் பல அசௌகரியங்களை இம்மக்கள் சந்திப்பதாக தெரியவருகின்றது.

லயன் அறைகளில் வாழ்ந்த இம்மக்களுக்கு 2005 ம் ஆண்டு காலப்பகுதியில் லயன்கள் உடைக்கப்பட்டு மாடி வீடுகள் அமைத்து கொடுக்கப்பட்டது. மாடி வீட்டில் நிம்மதியாக குடியேறிய இம்மக்கள் இன்று வாய்விட்டு சொல்லமுடியாத நிலையில் மனவேதனையுடன் பல துயரங்களுடன் வாழ்வதாக புலம்புகின்றனர்.

மழைக்காலங்களில் வீதி சேரும் சகதியுமாகவும் வீட்டின் முன்புறத்தில் உள்ள வடிக்கான்கள் மழை நீர் நிரம்பி வடிவதால் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதன் காரனமாக சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை சுகாதார பிரச்சினைகளை சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இத்தோட்டத்தில் உள்ள 54 வீடுகளை கொண்ட குடியிருப்பு பகுதியில் வாழும் சுமார் 125 இற்கு மேற்பட்ட நபர்கள் தங்களின் வீட்டின் முன் உள்ள வடிக்கான்களில் மூன்று அடி உயரம் வரை மண் நிரம்மியுள்ளதால் மழை நீர் கான்களில் தேங்கியுள்ளது. இதனால் மழை நீர் வீதியில் வடிந்தோடுகின்றது.

இப்பிரதேசத்தில் உள்ள சிறுவர்கள் சுகாதாரரீதியாக பாதிக்கபட்டுள்ளதுடன் சிலர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிள்ளைகளின் பெற்றோர்கள் மூலம் தெரியவருகின்றது. அத்தோடு மாடிவீட்டில் உள்ள மலசல கூடங்கள் மழைக்காலங்களில் நீர் நிரம்பி வடிவதால் மலசல கூடத்தினை பயன்படுத்த முடியாமல் பெண்கள் சிறுவர்கள் முதியோர் என பலரும் பாரிய இடர்களை சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தோட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தபோதிலும் இவ்விடயத்தில் தோட்ட நிர்வாகம் அக்கறை காட்டவில்லை என இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதேவேளை மலையக அரசியல் வாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகளிடம் இப் பிரச்சினைகள் தொடர்பாக முறைப்பாடுகள் செய்தபோதிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அசமந்தபோக்கில் இருப்பதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

இம்மக்கள் வாழும் பகுதிக்கு அடிக்கடி பொது சுகாதார அதிகாரிகள் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் விஜயம் செய்து சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு எதிராக வழக்கு பதிவுசெய்வதாகவும் இதனால் தாம் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதாக இங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீரப்பதற்கு அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -