பொது பல சேனாவின் கடிதத்திற்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும். – பதில் வழங்க தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் தருவதற்கு நாம் தயார் - ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு தவ்ஹீத் ஜமாஅத் கடிதம்
உலமா சபைத் தலைவர் சகோ. ரிஸ்வி முப்தி அவர்களுக்கு!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!
நாட்டில் இனவாதம் மீண்டும் தலையெடுத்துள்ள இந்நிலையில் கடந்த 18.11.2016 திகதியிடப்பட்டு பொது பல சேனா அமைப்பிலிருந்து அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு ஒரு கடிதம் அனுப்பப் பட்டிருந்தது. குறித்த கடிதம் ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டு சமூக வலை தளங்களிலும் பரப்பப்பட்டது.
பொது பல சேனாவினால் உலமா சபைக்கு அனுப்பப்பட்டிருந்த குறித்த கடிதத்தில் புனித திருமறைக் குர்ஆனில் இடம் பெற்றுள்ள சில முக்கிய வசனங்களுக்கு விளக்கம் கோரப்பட்டிருந்ததுடன் சில நபி மொழிகளுக்கும் விளக்கம் தரும்படி கோரியிருந்தார்கள்.
பொது பல சேனாவின் கடிதத்திற்கு கட்டாயம் முறையான பதிலளிக்க வேண்டும்.
ஏக இறைவன் மூலம் மனித குலத்திற்கு வழிகாட்டியாக அனுப்பப்பட்ட இறைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறைவனிடம் இருந்து வஹி மூலம் அறிவிக்கப்பட்ட புனித குர்ஆன் தொடர்பில் உலகில் அனைத்து பகுதிகளிலும் கேள்விகள் எழுப்பப் படுகின்றன, விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன. அவை அனைத்துக்கும் அவ்வப்போது இஸ்லாமிய அறிஞர்கள் பதிலளித்து வருகிறார்கள்.
இலங்கையிலும் கடந்த சில வருடங்களாக குர்ஆன் தொடர்பிலும், நபியவர்கள் தொடர்பாகவும், இஸ்லாத்தை கடுமையான முறையில் விமர்சனம் செய்தும் மாற்று மத நண்பர்களினால் கேள்விகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு நாம் பதிலளிக்காத நிலையில் “எமது கேள்விகளுக்கு இஸ்லாத்தில் பதிலில்லை” இஸ்லாம் பயங்கரவாத மார்க்கம் என்ற தோற்றப்பாட்டை சாதாரண பௌத்த மக்கள் மத்தியில் உண்டாக்கி விடும். ஆகவே மாற்று மதத்தவர்கள் இஸ்லாம் தொடர்பில் முன் வைக்கும் கேள்விகளுக்கு அழகிய பதில்களை வழங்க வேண்டியது எமது கடமையாக உள்ளது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாடு முழுவதும் “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” என்ற தலைப்பில் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளின் மாற்று மத நண்பர்களை அழைத்து இஸ்லாம் பற்றி அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அர்த்தமுள்ள சந்தேகங்களுக்கு குர்ஆன் மற்றும் நபியவர்களின் வழிகாட்டல் மூலம் அர்த்தமுள்ள பதில்களை மாற்று மத நண்பர்கள் திருப்திப்படும் வகையில் வழங்கி வருகிறோம். நாடலாவிய ரீதியில் மாற்று மத மக்கள் மத்தியில் இந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
அந்த வகையில் தற்பொது பொது பல சேனா அமைப்பு சார்பில் உலமா சபைக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் புனித குர்ஆனின் வசனங்களுக்கான விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன. இவற்றுக்கு உரிய முறையில் பதிலளிப்பது இலங்கை வாழ் இஸ்லாமிய சமுதாயத்தின் கடப்பாடாக உள்ளது.
இதுவரை காலமும் இனவாதத்தை மாத்திரமே நம்பியிருந்த பொது பல சேனா அமைப்பினர் தற்போது கேள்வி கேட்டு பதில்களை பெற்றுக் கொள்ள முனைகிறது என்ற வகையில் அவர்களின் கடிதத்தை புறக்கணிக்காமல் கட்டாயம் பதிலளிக்க வேண்டும்.
கடிதம் தெளிவில்லை என்பது முறையான பதில் அல்ல.
பொது பல சேனாவினால் ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு கடிதம் அனுப்பப்பட்ட செய்தி சமூக ஊடகங்களில் பரப்பட்ட நேரத்தில் “குறித்த கடிதத்திற்கு நாம் பதிலளிப்போம்” என்று ஜம்மிய்யாவின் செயலாளர் குறிப்பிட்டதாக செய்திகள் இணையதள செய்தி ஊடகங்களில் பார்க்கக் கிடைத்தது.
இதே நேரம் கடந்த 30.11.2016 அன்றைய விடிவெள்ளி பத்திரிக்கையில் “பொது பல சேனாவின் கடிதம் யாருக்குறியது என்று தெளிவுபடுத்தப்படாமல் அனுப்பப்பட்டுள்ளது. தலைவருக்கா?, செயலாளருக்கா? என்ற விபரம் அதில் இல்லை. ஆகவே அது தொடர்பில் நாம் பொது பல சேனாவிடம் விளக்கம் கோர இருக்கிறோம்.” என்ற கருத்துப்பட ஜம்மிய்யாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் அளித்த விளக்கம் வெளியிடப்பட்டிருந்தது.
ஒரு கடிதத்தை பொறுத்த வரையில் அது எந்த அமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பப்பட்டதோ அந்த அமைப்பு குறித்த கடிதத்திற்கு பதில் வழங்க வேண்டும். தலைவருக்கா? செயலாளருக்கா? என்றில்லா விட்டாலும் ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு என்று தெளிவாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் போது அது உங்கள் அமைப்பின் காரியாலயத்திற்கே கிடைக்கப் பெற்றிருக்கும் போது “கடிதம் தெளிவில்லை விளக்கம் கோர இருக்கிறோம்” என்கிற பதில் பொருத்தமற்றதாகும்.
கடிதத்தில் கேட்க்கப்பட்டுள்ள கேள்விகளில் தெளிவின்மை இருப்பின் அது தொடர்பில் விளக்கம் கோர வேண்டும். தெளிவில்லாத கேள்விக்கு முறையான பதில் அளிக்க முடியாது என்பதினால் விளக்கம் கோருவது கட்டாயமாகி விடும். ஆனால் பொது பல சேனாவினால் தற்போது ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு அனுப்பப் பட்டுள்ள கடிதத்தை பொறுத்த வரையில் அதில் கேள்விகளில் தெளிவில்லாமல் இருக்கிறது என்று ஜம்மிய்யா எங்கும் சொல்ல வில்லை. தலைவருக்கா? செயலாளருக்கா? என்று குறிப்பிட வில்லை என்று தான் உலமா சபையின் தலைவர் தெரிவித்திருக்கிறார்.
தலைவருக்கா? செயலாளருக்கா? என்று குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஜம்மிய்யதுல் உலமாவுக்கு என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்கள். அத்துடன் குறித்த கடிதம் உங்களுக்கு கிடைத்துமிருக்கிறது. அப்படியிருக்கையில் அதற்கு பதிலளிக்காமல் இருக்கும் விதமான காரனங்களை ஊடகங்களுக்கு தெரிவிப்பது உரிய பதிலாக இருக்காது.
பொது பல சேனாவினால் அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபைக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் புனித அல்-குர்ஆன் மற்றும் நபிமொழிகள் தொடர்பில் விளக்கம் கோரப்பட்டுள்ளது. குறித்த கடிதம் உலமா சபைக்கு முகவரியிட்டு அனுப்பப்பட்டாலும் அதன் உள்ளடக்கம் முஸ்லிம்களின் புனித குர்ஆன் தொடர்பானதாகும். அதற்கு பதிலளிப்பது ஜம்மிய்யாவின் மட்டுமல்ல அனைத்து முஸ்லிம்களினதும் கட்டாயக் கடமையாகும்.
இதே நேரம், குறித்த கடிதத்தில் பொது பல சேனாவின் தரப்பிலிருந்து கேட்க்கப்பட்டுள்ள கேள்விகள் பதிலளிக்க முடியாத கேள்விகளுமல்ல. முறையாகவும் தெளிவாகவும் பதிலளிக்க முடியுமான சாதாரண கேள்விகள் தான்.
மாத்திரமன்றி, தற்போது ஜம்மிய்யதுல் உலமா சபையிடம் பொது பல சேனாவினால் கேட்க்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் கடந்த வருடம் நவம்பர் மாதம் கொழும்பு சுகததாச உள்ளரங்கத்தில் நாம் வெளியிட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பிலேயே பதில்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதும் மேலதிக தகவலாகும். மாற்று மத நண்பர்கள் குர்ஆனில் இருந்து எழுப்பும் சந்தேகங்களுக்கு உரிய பதில்களை ஏற்கனவே நாங்கள் வெளியிட்ட குர்ஆன் சிங்கள மொழியாக்கத்தில் தெளிவாக விளக்கியிருக்கிறோம்.
பொது பல சேனாவின் கடிதத்திற்கு உரிய பதிலை வழங்குவதற்கு குர்ஆன் மற்றும் நபியவர்களின் வழிகாட்டல் படி முழுமையான அறிவு ரீதியிலான மற்றும் மொழி ரீதியிலான அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் ஜம்மிய்யதுல் உலமாவுக்கு தருவதற்கு தவ்ஹீத் ஜமாஅத் தயாராகவுள்ளது.
(கட்டாயம்) தலைவர் உள்ளிட்ட நிர்வாக சபையினரை நேரில் சந்திக்க விரும்புகிறோம்.
ஆகவே, குறித்த கடிதம் தொடர்பில் ஜம்மிய்யதுல் உலமா சபையின் தலைவர் சகோ. ரிஸ்வி முப்தி, செயலாளர் சகோ. முபாரக் மதனி உள்ளிட்ட தலைமை நிர்வாக சபையினரை நேரில் சந்திந்து கலந்துரையாடல் நடத்த தவ்ஹீத் ஜமாஅத் விரும்புகிறது.
இக்கலந்துரையாடல் உலமா சபையின் தலைவர் சகோ. ரிஸ்வி முப்தி மற்றும் செயலாளர் சகோ. முபாரக் மதனி உள்ளிட்டவர்கள் கட்டாயம் பங்குபெற வேண்டும் என்பதுடன் வேறு நபர்களை வைத்து பேசுவதினூடாக முறையான ஒரு காரியத்தை பிரயோஜனம் அற்றதாக ஆக்கி விட வேண்டாம் என்றும் அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்.
கடிதத்திற்கு பதிலளிக்காமல் புரக்கணிப்பதையே பதிலாக்க வேண்டாம்.
ஏற்கனவே பல தடவைகள் சமுதாயப் பிரச்சினைகள் தொடர்பில் உலமா சபையின் தலைவர் உள்ளிட்ட நிர்வாக சபையினரை தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நாம் சந்திக்க முயற்சித்து உத்தியோகபூர்வமாக கடிதம் அனுப்பிய போதும் உலமா சபையினர் எம்மை சந்திக்க நேரம் ஒதுக்க வில்லை. கடிதம் மூலம் உத்தியோகபூர்வமாக அனுகிய போதெல்லாம் பெரும்பாலும் தலைவர் நாட்டில் இல்லை என்கிற ஒரு பதில் எமக்கு வாய் வார்த்தையாக தரப்பட்டது. தலைவர் வந்தவுடன் தொடர்பு கொள்வோம் என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை ஒரு முறை கூட எமது கடிதங்களுக்கு பதில் அளிக்கப்படவும் இல்லை. சந்திக்க நேரம் தரப்படவும் இல்லை என்பதை இங்கு தெளிவாக குறிப்பிட விரும்புகிறோம்.
இஸ்லாத்தின் அடிப்படை கொள்கை விஷயத்தில் தனித்துவமாக இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எவ்வித விட்டுக் கொடுப்புமில்லாமல் பிரச்சாரம் செய்து வரும் தவ்ஹீத் ஜமாஅத், சமுதாயப் பிரச்சினைகளில் மற்ற அமைப்பினருடன் இணைந்து செயல்படுவதற்கு தயாராகவே இருக்கிறது. ஆனால் எம்மை வேண்டுமென்றே புரக்கணித்து விட்டு “தவ்ஹீத் ஜமாஅத்தினர் சமுதாயப் பிரச்சினைகளில் இணைந்து செயல்படுவதில்லை” என்று குற்றம் சாட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும்.
இறுதியாக கடந்த 09.11.2016 அன்று ஜம்மிய்யதுல் உலமா சபை, தேசிய சூரா சபை, முஸ்லிம் கவுன்ஸில் உள்ளிட்ட “முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு” உறுப்பினர்கள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகத்துடன் சிரேஷ்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் தலைமையில் அவருடைய வீட்டில் ஒரு சந்திப்பை நடத்தினார்கள். குறித்த சந்திப்பில் சமுதாயப் பிரச்சினைகளில் தவ்ஹீத் ஜமாஅத் மற்ற அமைப்பினருடன் இணைந்து செயல்பட தயாராக இருந்தும் ஜம்மிய்யதுல் உலமா சபையினரால் தெளிவாக புரக்கணிக்கப்பட்டுள்ளார்கள் என்பது ஏக மனதாக ஒப்புக் கொள்ளப்பட்டது.
அதன் பின்னரும் கூட இனிமேல் சமுதாயப் பிரச்சினைகளில் தவ்ஹீத் ஜமாஅத்தை இணைத்து செயல்படுவது என்றும், தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக எவ்விதமான அறிக்கைகளையும் வெளியிடுவது இல்லை என்றும் தெளிவாக முடிவெடுத்து விட்டு 11.11.2016 அன்று எடுத்த முடிவுக்கு மாற்றமான ஒரு அறிக்கையை வெளியிட்டு இணைந்து செயல்படுவதற்கான இறுதி வாயிலையும் மூடியது ஜம்மிய்யதுல் உலமா உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் தான் என்பதையும் இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம்.
குறிப்பு:
நாம் பல முறை ஜம்மிய்யதுல் உலமா சபையை சந்திக்க உத்தியோகபூர்வமாக கடிதம் மூலம் முயற்சித்தும் எமக்கு எவ்வித பதில்களும் உலமா சபை சார்பில் தரப்பட வில்லை. இந்த கடிதத்தையும் வழமை போல் பதிலளிக்காத கடிதமாக மாற்றி விட வேண்டாம்.
இதற்கு இன்றிலிருந்து (22.10.2016) எதிர்வரும் 02.01.2017 ம் திகதிக்கு முன் சுமார் 10 நாட்களுக்குள் உத்தியோகபூர்வமாக உரிய பதிலை எமக்கு அனுப்பி வைக்குமாறு அன்பாய் வேண்டிக் கொள்கிறோம்.
அன்புடன்,
ஆர். அப்துர் ராசிக் B.Com (Special),
பொதுச் செயலாளர்,
தவ்ஹீத் ஜமாஅத் - SLTJ