எம்.ரீ.ஹைதர் அலி-
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி அல்-அனீக்கா முன்பள்ளி பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று விழா நிகழ்வு 2016.12.25 ஆந்திகதி - ஞாயிற்றுக்கிழமை மீராவோடையில் அமைந்துள்ள அந்நூர் மஸ்ஜித் கேட்போர்கூடத்தில் அல்-அனீக்கா முன்பள்ளி பாலர் பாடசாலையின் தலைவரும், பதுரியாநகர் சனசமூக நிலையத்தின் செயலாளருமான மௌலவி எஸ்.எல். மாஹிர் (ஸலபி) தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறுக்...
ஐந்து வயதுடைய இச்சிறார்கள் இவ்வாறான நிகழ்வுகளில் எந்த விதமான மேடைகூச்சங்களும் இல்லாமல் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்படுகின்ற விடயங்களை நேர்த்தியாக தங்களது திறமைகளை மேடைகளில் வெளிக்காட்டுவதை பார்க்கின்றபோது மிகவும் சந்தோசமாவுள்ளது.
இவ்வாறான பாலர் பாடசாலையின் நிகழ்வுகளிலோ அல்லது ஏனைய தங்களது பிள்ளைகள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளிலோ அதிகமாக காணப்படுபவர்கள் இந்த தாய்மார்கள். தன்னுடைய பிள்ளையின் திறமையினை நான் நேரில் சென்று பார்க்க வேண்டும் தனது பிள்ளையை பாராட்டவேண்டுமென்ற எண்ணங்கள் தந்தைமார்களை விட தாய்மார்களுக்கே அதிகம் உள்ளது.
ஆனால் தனது பிள்ளை ஒரு நிகழ்வில் திறமைசாலியாக பலரால் போற்றப்பட்டால் அதற்கு உரிமை கூறுபவர்கள் தந்தைமார்கள். இருந்தபோதும் தந்தைமார்கள் தன்னுடைய வீட்டுப் பொறுப்புக்களை சுமப்பதன் காரணமாக தங்களது பிள்ளைகளுடன் அதிக நேரத்தினை செலவிட அவர்களால் முடிவதில்லை. ஆனால் கூடுதலாக தன்னுடைய பிள்ளைகளுடன் அதிக நேரத்தினை வீடுகளில் செலவிடுபவர்கள் தாய்மார்கள் என தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து உரையாற்றுகையில் வறுமை என்பது எந்த மாணவர்களின் கல்விக்கும் தடையாக அமைந்துவிடக்கூடாது. எவ்வாறான ஒரு சூழ்நிலையிலும் கல்வியினை தொடர்வதை நிறுத்தி விடக்கூடாது. வறுமை என்பது கல்விக்குத் தடையான ஒரு விடயமுமல்ல. என்பதனை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இருந்தபோதும் பாடசாலை கல்வியுடன் மாத்திரம் எமது பிள்ளைகளை வளர்த்து விடாமல் எமது பிள்ளைகளுக்கு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் வழிகாட்டுதல்களை உரிய விதத்தில் வழங்கி நல்லொழுக்கத்துடன் சேர்ந்ததாக கல்வியுடன் கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டிய ஒரு கட்டாய தேவைப்பாடு எமது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் காணப்படுகின்றது. அத்தகைய ஒரு சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்குரிய எங்களாலான அனைத்து விதமான முயற்சிகளையும் முன்னெடுக்கவுள்ளோம் என தனதுரையில் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு ஏனைய அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் சிறுவர் விளையாட்டு மற்றும் திறன்கள் விருத்தி இணைப்பாளர் மௌலவி. எம்.எச். முபாறக் (சிறாஜி), கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.முகைதீன், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகதத்தர் எச்.எம்.அமீர், மாகாண சபை உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ரீ.ஹைதர் அலி, ஓட்டமாவடி-03 கிராம அபிவிருத்திச் சங்கத்தலைவர் என்.எம். இஸ்மாயில் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இறுதியில் பிரதம அதிதியினால் பாலர் பாடசாலை மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.