2017ம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட விவாத நேரத்தில் வடக்கு மாகாணத்தின் தமிழ், முஸ்லிம் சிங்கள மீள்குடியேற்றம் தொடர்பில் வடக்கு மாகாணசபை தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளை நழுவவிட்டது, இதற்கான முழுமையான பொறுப்பையும் முதலமைச்சரே ஏற்கவேண்டும் என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக முன்வைத்திருந்தேன். அதேபோன்று சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரான கௌரவ ஜவாஹிர் அவர்களும் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் மக்களுக்கான காணி விநியோக விடயத்தில் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
மேற்படி இரண்டு குற்றச்சாட்டுகளையும் மறுத்த முதலமைச்சர் அவர்கள், முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தொடர்புல் 75%ற்கும் அதிகமான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்து விட்டன என்றும், தமிழ் மக்களே பாதிக்கப்பட்டிருக்கான்றார்கள் என்றும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார், குறிப்பாக 27-12-2016 அன்றையதினம் முதலமைச்சர் அவர்களால் ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையிலும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் பொய்யான தரவுகளை முன்வைத்து வருகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதோடு ஒரு சில பிழையான தரவுகளையும் தன்பக்க நியாயத்தை மேலும் உறுதிசெய்யும் நோக்கோடு இணைத்துள்ளார்.
முதலமைச்சர் மேற்படி தரவுகளை தன்னுடைய பொறுப்பில் இருக்கின்ற மாகாணசபை சார்ந்த நிறுவனங்களிடம் இருந்து பெற்றுக்கொண்டாரா அல்லது மத்திய அரசாங்கத்தின் பொறுப்பில் இருக்கின்ற மாவட்ட செயலகங்கலில் இருந்து பெற்றுக்கொண்டாரா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று நான் பகிரங்கமாகக் கோரிக்கை விடுக்கின்றேன். அவருடைய அறிக்கையில் வெளியிடப்பட்டிருக்கின்ற தரவுகள் அனைத்தும் பொய்யானவையாகும். உதாரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1990களில் இடம்பெயர்ந்த முஸ்லிம் குடும்பங்கள்416 என்றும் மீள்குடியேற்றத்திற்கு விண்ணப்பித்தோர் 739 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளோர் 739 என்றும் சுட்டிக்க்காட்டப்பட்டுள்ளது ஆனால் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரின் தரவின் பிரகாரம் 2262 குடும்பங்கள் மீள்குடியேறுவதற்காக விண்ணப்பித்துள்ளார்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒட்டு மொத்த வடக்கு மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் வடக்கு மாகாணசபையும் முதலமைச்சரும் எவ்விதமான காத்திரமான பங்களிப்புகளை நல்கவில்லை மாற்றமாக தமக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகள் அனைத்தையும் கைவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன்; இந்தக் குற்றச்சாட்டை மறைப்பதற்காக முதலமைச்சர் அவர்கள் தமிழ் முஸ்லிம் முரண்பாட்டு நிலையை மூலதனமாக்கியிருப்பதாகவே நான் கருதுகின்றேன். இது முற்றிலும் தவறான அணுகுமுறையாகும். ஒரு தவறு சுட்டிக்காட்டப்பட்டால், அல்லது ஒரு குறைபாடு சுட்டிக்காட்டப்பட்டால் எவ்வித காய்தல் உவத்தலுமின்றி குறித்த குறைபாடு தொடர்பில் தரவுகளை சேகரித்து, அதுதொடர்பான கருத்துக்களை பல்வேறு தரப்பினரிடமும் இருந்து பெற்றுக்கொண்டதன் பின்னர் கருத்துக்களை வெளியிடவேண்டுமேதவிர தன்னுடைய சொந்த விருப்புகளுக்காக தம்மைச் சூழ இருக்கின்றவர்களின் வழிகாட்டுதலின்பேரில் கருத்துக்களை முன்வைப்பது மிகவும் கொடிய தவறாகும்.
அதுமாத்திரமன்றி கடந்த காலங்களில் வடக்குக்கிழக்கில் தமிழ் முஸ்லிம் உறவு நிலைகளில் ஏற்பட்ட தவறான நடவடிக்கைகள் காரணமாக இன்று தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக எதிர்நோக்கும் பாரிய சவால் எதுவென்று எல்லோருக்கும் தெரியும். குறிப்பாக தமிழ் மக்களின் தலைவர்கள் தமது தவறுகளை உணர்ந்து அவற்றுக்காக பகிரங்கமாக மனம்வருந்தி, மன்னிப்புக்கேட்டு, இதன் பின்னர் அவ்வாறான தவறுகள் இடம்பெறாது என்பதாக கருத்துக்களை முன்வைத்துவரும் இந்நிலையில். குறித்த நல்லிணக்க செயற்பாடுகளை குழப்பியடிக்கும் செயற்பாடுகளாகவே முதல்வரின் இந்தக் கருத்துக்கள் அமைந்துள்ளன.
மத்திய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வடக்கு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகள் ஒருசிலர் முன்வைக்கும் வேற்றுமைக் கருத்துக்களையும், தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மீதான அவநம்பிக்கைகளையும் முதலமைச்சரின் கருத்துகள் மேலும் நியாயப்படுத்துவதாகவே அமையும். அதுமாத்திரமன்றி வடக்கில் ஒருவிதமான முரண்பாட்டுநிலையுடன் கூடிய சமூக அமைப்பை நிரந்தரமாக்குவதற்கும் இவரின் கருத்துகள் வழிசெய்யும். எனவை இக்கருத்துகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்படல் அவசியமாகும்.
வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முதல்வர் முன்வைக்கும் கருத்துக்கள் தரவுகள் அனைத்துமே மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படல் அவசியமாகும். வடக்கு மாகாணசபையில் முழுநாள் விவாதமொன்று நடாத்தப்பட்டு வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான நிலைப்பாடுகளும் கருத்துக்களும் தெளிவுபடுத்தப்படல் அவசியமாகும் என்று நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன்.
தகவல் எம்.எல்.லாபிர்-