எம்.ஜே.எம்.சஜீத்-
தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கப் போகின்றோம் எனக்கூறிக்கொண்டு அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம், தமிழ் பிரதேசங்களில் வாழும் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி நல்லாட்சி அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாமென கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.
அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் அமைச்சர் தயா கமகே, பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ மன்சூர், மற்றும் கோடிஸ்வரன், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை ஆகியோரின் இணைத்தலைமையில் நேற்று (29) அம்பாரை கச்சேரியில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த யுத்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் காணப்பட்ட தொல்பொருள் இடங்களை முஸ்லிம், தமிழ் மக்களே பாதுகாத்தனர். தற்போதும் அந்த தொல்பொருள் புராதன இடங்கள் பாதுகாப்பாகவே உள்ளது.
தற்போது அம்பாரை மாவட்டத்திலுள்ள தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கப் போகின்றோம் எனக்கூறிக்கொண்டு பௌத்தர் ஒருவர் இல்லாத தழிழ், முஸ்லிம் பிரதேசங்களில் திடிரென சிலைகளை வைக்கின்ற போது அப்பிரதேசத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் நிம்மதியிழந்து பரம்பரையாக வாழ்கின்ற தங்களது இடங்கள் பரிபோகும் என அச்சப்படுகின்ற நிலைமை உருவாகியுள்ளது.
எனவே தொல்பொருள் இடங்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக அதிகாரிகளே மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியல்வாதிகளும், பௌத்த மதகுருமாறும் கையில் எடுப்பதனை அனுமதிக்க முடியாது. இதுதொடர்பில் சம்மந்தமில்லாதவாகள் தலையிடுகின்ற போதே வீன் பிரச்சினைகள் ஏற்பட்டு இனங்களுக்கிடையிலான ஒற்றுமை சீர்குழைகின்றது.
அம்பாரை மாவட்டமானது மூவின மக்களும் ஐக்கியமாகவும், புரிந்துணர்வோடும் வாழும் ஒரு மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் வாழும் சிங்கள மக்கள் முன்னாள் அமைச்சர் மர்ஹ_ம் அஷ்ரப் அவர்களுக்கும், முன்னாள் அமைச்சர்களான ஏ.எல்.எம் அதாஉல்லா மற்றும் பேரியல் அஷ்ரபுக்கும் குறிப்பாக எனக்கும் தேர்தல்களின் போது வாக்குகளை வழங்கி எங்களது வெற்றிக்கும் பங்களிப்புச் செய்துள்ளனர்.
அதேபோன்றுதான் இம்மாவட்டத்திலுள்ள முஸ்லிம்களும் முன்னாள் அமைச்சர்களான பீ. தயாரத்ன, சரத்; வீரசேகர, இப்போதைய அமைச்சர் தயா கமகே ஆகியோருக்கும் வாக்களித்து அவர்களின் வெற்றிக்கும் பங்களிப்புச் செய்துள்ளனர். கடந்த பொதுத் தேர்தலில் கூட அம்பாரை மாவட்ட முஸ்லிம், தமிழ் மக்கள் சுமார் இருபதனாயிரம் வாக்குகளை தயா கமகேவுக்கு வழங்கியுள்ளனர்.
இவ்வாறான சூழ்நிலையில் அரசியல் தலைவர்களாகவும், மாவட்டத்தலைவர்களாகவும் இருக்கின்ற நாம் அம்மாவட்டத்தில் வாழும் முஸ்லிம், தமிழ் மக்களின் விடயங்களில் நீதியாக நடந்துகொள்வதுடன் அவர்களின் மனங்களை வெள்ளக்கூடிய வகையில் எமது செயற்பாடுகள் அமைய வேண்டும்.
இன்றைய அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அமைச்சர் தயா கமகே அம்பாரை மாவட்டத்திலுள்ள தொல்பொருள் இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். ஆகவே அந்த இடங்களை எல்லையிடுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளைப் பணித்தார். கடந்த அபிவிருத்திக் கூட்டத்திலும் அமைச்சர் தயா கமகே கல்முனை தொடக்கம் பொத்துவில் வரையான 12ஆயிரம் ஏக்கர் கரையோரப் பிரதேச காணிகள் தீகவாபி விகாரை புனித பூமிக்குட்பட்டதெனவும் தெரிவித்தார்.
குறிப்பாக அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் சிறுபான்மை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும் இல்லையெனில் நாம் எதிர்பார்க்கும் இனங்களுக்கிடையிலான நல்லுறவை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.