மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இசையமைப்பாளர் வர்சன் பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளார். இந்த பாடல் குறித்த முழு விவரத்தையும், பாடலையும் கீழே பார்ப்போம்.
முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ந் தேதி சென்னையில் காலமானார். இவரது உடல் நேற்று முன்தினம் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள்பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் பொதுமக்கள் பலரும் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மறைந்த புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களுக்கு இசையமைப்பாளர் வர்ஷன் 'அம்மா...' எனத் தொடங்கும் பாடலை இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடலுக்கு கவிஞர் அஸ்மின் வரிகள் எழுதியுள்ளார். மேலும் ஜெயலலிதாவிற்கு சமர்ப்பணம் செய்து தமிழ் சினிமா கலைஞர்களால் வெளியிடப்படும் முதல் இரங்கல் பாடல் இது.
இசையமைப்பாளர் வர்ஷன் இதற்குமுன் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'புறம்போக்கு' படத்திற்கு இசையமைத்தவர். பாடலாசிரியர் அஸ்மின், விஜய் ஆண்டனியின் 'நான்' திரைப்படத்தில் 'தப்பெல்லாம் தப்பேயில்லை' என்ற பாடலை எழுதியவர். இவர்கள் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'அம்மா...' இரங்கல் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
இந்த பாடல் பாடிய வர்ஷனின் குரல், அச்சு அசல் இளையராஜா குரல் போல் இருப்பதால் இளையராஜா தான் இந்த பாடலை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார் என்று இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் இந்த பாடல் மிகவும் பிரபலமானது. ஆனால் இந்த பாடலை வர்ஷன் பாடியிருக்கிறார் என்றதும் அனைவருக்கும் ஒரு ஆச்சர்யமும் அதிர்ச்சியும் எழுந்தது.
அஸ்மின் வர்சன் இருவருடைய திரையுலக பயணத்துக்கு இந்த பாடல் ஒரு படிக்கட்டாக அமையும் என்பது மட்டும் உண்மை.