எஸ்.அஷ்ரப்கான்-
முஸ்லிம் தனியார் சட்டத்தில் குர்ஆன் ஹதீதுக்கு முரண்படும் வகையில் எந்த வித திருத்தத்தையும் செய்யக்கூடாது என கொழும்பு மாவட்ட அனைத்து பள்ளிவாயல்கள் சம்மேளனம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை உலமா கட்சி வரவேற்றிருப்பதுடன் இவ்வாறான தீர்மானத்தை அனைத்து மாவட்டங்களிலுமுள்ள பள்ளிவாயல் சம்மேளனங்களும் நிறைவேற்றி அதனை ஜனாதிபதிக்கும் நீதி அமைச்சுக்கும் அறிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இது பற்றி உலமா கட்சியின் தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்ததாவது,
முஸ்லிம் தனியார் சட்டத்தில் எத்தகைய திருத்தத்தையும் மேற்கொள்ளக்கூடாது என்பதை அதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் உலமா கட்சி வலியுறுத்தி வருகிறது. இதற்கு இடமளித்தால் முஸ்லிம்களின் பல உரிமைகளில் இனவாத அரசாங்கங்கள் கை வைப்பதற்கு வழி அமைத்து விடும் என எச்சரிக்கை செய்து வருகிறோம்.
முஸ்லிம் பெண்ணின் திருமண வயது என்பது அவள் பருவமடைந்து பக்குவமடைதல் என குர்ஆன் நேரடியாக தெரிவிக்கிறது. இது விடயத்தில் பெண்கள் அனைவரும் ஒரே வயதில் பருவமடைவதில்லை என்பதால் பருவமடைந்த பின் அவள் இன்னும் பல வருடம் காக்க வேண்டும் என திருத்துவது குர்ஆனுக்கு முரண்பட்டதாகும். எம்மை பொறுத்த வரை பெண்கள் இளம் வயதில் திருமணம் முடிக்கத்தான் வேண்டும் என யாரும் சொல்லவில்லை. தற்காலத்தில் இள வயது திருமணம் என்பது சமூகத்தின் பிரச்சினையில்லை. மாறாக திருமணம் முடிக்க முடியாத முதிர் கன்னிகளின் பிரச்சினைகளைத்தான் சமூகம் இன்று எதிர் நோக்குகிறது. அதற்கத்தான் தீர்வு தேவை.
எது எப்படியிருப்பினும் இந்தியாவிலும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்கும் முயற்சிகள் எடுக்கப்படும் இந்நேரத்தில் இலங்கையிலும் அதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதன் மூலம் இது விடயத்தில் சியோனிச சக்திகளின் சதி நிறையவே உள்ளது என்பது தெரிகிறது.