எம்.எல்.லாபிர்-
வடக்கு மாகாணசபையின் 22-12-2016 வரவு செலவுத்திட்ட விவாதங்கள் இடம்பெற்றுவரும் இன்றைய அமர்வில் கௌரவ அஸ்மின் அய்யூப் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்களின் விஷேட வேண்டுகோளுக்கு அமைவாக மேற்படி கண்டனத்தீர்மானத்திற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. இத்தீர்மானதினை வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான கௌரவ கேசவன் சயந்தன், கௌரவ இம்மானுவேல் ஆர்னோல்ட், கௌரவ எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் முன்வைத்து கருத்துக்களை முன்வைத்தனர்.
அத்தீர்மானத்தின் சுருக்க வடிவம் வருமாறு:-
சிரியாவின் அலப்பே, மியான்மானிர் ரொஹிங்கியா மற்றும் யெமன் தேசங்களிலும், மற்றும் உலகின் மூலைமுடுக்குகளிலும் தினமும் மனிதப் பேரவலங்கள் தொடர்ந்த வண்ணமேயிருக்கின்றன. 2009களிலே எமது தேசம் எதிர்நோக்கிய மனிதப் பேரவலத்திற்கு ஈடான மற்றுமொரு நிகழ்வாகவே இவை அமைந்திருக்கின்றன.
நாம் மிக நவீனமான காலத்திலே வாழ்கின்றோம், உலகை உள்ளங்கைகளுக்குள் பொத்திப்பிடிக்கின்ற காலத்தில் வாழ்கின்றோம், சோசியல் மீடியா யுகத்தில் வாழ்கின்றோம், உலகின் எந்த மூளைமுடுக்குகளிலும் நடக்கும் நிகழ்வுகள் உடனுக்குடன் எம்மை வந்தடைகின்றன. உலக வல்லரசுகள் உலக அமைதிக்காக அயராது உழைக்கின்றார்கள், சர்வதேச சட்டங்களும், உடன்படிக்கைகளும் உலகில் மனித அவலத்தை இல்லாமலாக்கவேண்டும் என்ற நோக்கோடு தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்றன, பிரச்சினைகளை இராஜதந்திர ரீதியில் தீர்த்து வைப்பதற்கும், அவற்றை இராஜதந்திர ரீதியில் அணுகுவதற்கும் பல்வேறு முயற்சிகள் நடக்கின்றன, இருந்தும் நாம் இப்போது வாழ்கின்ற உலகில் இவ்வாறான மோசமான நிகழ்வுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன என்பது மன வேதனையை அளிக்கின்றது.
இன, மத, மொழி, நிற, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதமும் மனிதாபிமானமும் காக்கப்படவேண்டும் எனபதுவே எம் எல்லோரதும் எதிர்பார்ப்பாகும். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக நாம் வாழ்கின்ற இதே காலத்தில் என்னிலடங்காத மனித அவலங்கள் தொடர்ந்தும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. உண்மைகளை எடுத்துறைத்து, மனிதாபிமானத்தை காத்து, உலக அதிகாரப்போட்டியில் மனிதத்தைப் பலிக்கடாவாக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தி மனிதப்பேரவலங்களை இல்லாமலாக்க உலகம் கரிசணைகொள்ளவேண்டும், அதற்கான காத்திரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
இதனை 22-12-2016 அன்றைய அமர்விலே வலியுறுத்தி உலகிற்கான செய்தியாக இதனை முன்வைக்கின்றோம்.