திருகோணமலை மாவட்ட கன்னியா வெந்நீருற்றுப் பகுதியில் குடியிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களது மீள்குடியேற்றத்தில் புறக்கணிப்புகள் இருப்பதாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் குற்றஞ்சாட்டினார்.
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் கடந்த வியாழக்கிழமை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற போது இக்குற்றசாட்டை முன்வைத்த அவர் இந்த முஸ்லிம்களை உடன் மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களும் கடந்த கால வன்செயல்களினால் இடம்பெயர்ந்திருந்தனர். எனினும் இவர்கள் இதுவரை மீள்குடியேற்றப்படவில்லை. கிழக்கு மாகாணசபை மற்றும் கச்சேரி புனர்வாழ்வுப் பகுதியினால் வெளியிடப்பட்டுள்ள மீள்குடியேற்றத் திட்டத்திலும் இவர்களது விபரம் எதுவும் உள்ளடக்கப்படவில்லை.
மாறாக திருகோணமலை பட்டனமும் சூழலும் பகுதியில் இடம்பெயர்ந்த சகல மக்களும் மீள்குடியேற்றப்பட்டு விட்டதாக இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது பாரிய புறக்கணிப்பாகும். நியாயமாகச் செயற்பட வேண்டிய அதிகாரிகளின் இந்தப் புறக்கணிப்புகள் குறித்து நான் மிகவும் கவலை அடைகின்றேன் என்று அவர் குறிப்பிட்டார்.
இதன் போது அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார உடனடியாக இந்த முஸ்லிம்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் மீள்குடியேற்றத்திட்டத்தில் இந்த மக்களது விபரங்களை சேர்க்குமாறும் பிரதேச செயலாளருக்கும் மீள்குடியேற்றத்திற்குப் பொறுப்பான உதவி மாவட்ட செயலாளருக்கும் பணிப்புரை விடுத்தார்.