எம்.ஜே.எம்.சஜீத்-
பலவந்தமாக 1990ஆம் ஆண்டு வெளியேற்றப்பட்ட அப்பாவி விவசாயிகளின் காணிகளை மீட்டெடுப்பதற்கு விவசாய அமைச்சர் இதய சுத்தியுடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை வரவு செலவுத்திட்டத்தில் விவசாய அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாத்தில் (21) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் கிழக்கு மாகாணமானது யுத்தத்தினால் மாத்திரமல்ல இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்ட ஒரு மாகாணமாகும். இந்த மாகாணத்தினுடைய விவசாயத்துறையை கட்டியெழுப்புவது எல்லோர் மீதும் கடமையாகும்.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கட்டுக்கெலியா, சேனைமடு, கொக்குத்தீவு போன்ற பிரதேசங்களில் 1990ஆம் ஆண்டு சுமார் 1500 ஏக்கர் காணிகளில் விவசாயம் செய்து வந்தனர். அக்காலப்பகுதியில் அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக அந்த விவசாயிகள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
அப்போது அந்த விவசாயிகள் தங்களது வயல் நிலங்கள், கால்நடைகள், உடு துணிகள், ஆவணங்கள் போன்றவற்றை விட்டுவிட்டு தங்களது உயிரைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்புப் படையினா ஊடாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அந்த விவசாயிகளிடம் சிலருக்கு சுவர்ண பூமி உறுதிப்பத்திரங்களும், சிலருக்கு காணி அனுமதிப்பத்திரங்களும் இருந்தும் அவர்கள் மீள அந்தப்பகுதிக்குச் சென்று விவசாயம் செய்ய முற்படுகின்ற போது ஏறாவூர் பிரதேச செயலக அதிகாரிகள் அங்கு சென்று இது மேச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் ஆகவே நீங்கள் விவசாயத்தில் ஈடுபட முடியாது என்கின்றனர்.
குறிப்பாக ஏறாவூர் பிரதேச செயலாளரினால் அந்த விவசாயிகளுக்கு ஒரு கடிதமும் வழங்கப்பட்டுள்ளது. அந்தக்கடிதத்தில் மேற்குறித்த காணிகள் மேச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அந்தக் காணிகள் தொடர்பான ஆவணங்கள் வைத்திருப்போர் அவைகளை ஒப்படைக்கும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையிலே நானும் சட்டத்தரணிகளும் பிரதேச செயலாளரை சந்தித்து அந்த விவசாயக் காணிகளுக்குரிய ஆவணங்களை பிரதேச செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளோம்.
நாங்கள் கடந்த காலங்களில் அமைச்சராக இருந்த போது மேச்சல் தரை விடயத்தில் ஒரு முடிவினை எடுக்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது. ஆனால் இன்னும் மேற்குறித்த காணிகளை மேச்சல் தரையாக வர்த்தமானியில் அறிவிக்கவில்லை ஆகவே விவசாய அமைச்சர் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் மேச்சல் தரை தொடர்பில் ஆராய்வதற்கு அந்தப்பிரதேசத்திற்கு குழுவொன்று வந்து அக்காணிகளைப் பார்வையிட்டனர். அப்போது இந்தக்காணிகள் விவசாயம் செய்யப்பட்டதெனவும், இதனை மேச்சல் தரைக்கு ஒதுக்க முடியாது எனவும் அவர்கள் ஒப்புதல் வழங்கினர்.
அவ்வாறு மேச்சல் தரைக்கு அந்தக்காணிகள் தேவையேற்பட்டால் அந்த விவசாயிகளுக்கு மாற்றீடாக காணிகளை வழங்க வேண்டும். இவ்வாறே மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்திலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் இப்போது நாட்டிலே ஏற்பட்டிருக்கின்ற நல்ல சூழலில் மேற்குறித்த விவசாயிகள் அந்தப்பிரதேசங்களுக்குச் சென்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.