ஏறாவூர் சுபைர் MPC க்கு ஏறாவூர் நகரசபை முன்னாள் தவிசாளர் நாசர் மறுப்பறிக்கை


றாவூர் ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தியைத் தடுத்து ஏறாவூர் மண்ணுக்கு துரோகமிழைத்தார் முதலமைச்சர்’’ என்ற கிழக்குமாகாண சபை உறுப்பினர் சுபைர் அவர்களின் ஊடக அறிக்கைக்கு கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளரும் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளருமான அப்துல் நாசர் அவர்களின் பதில் அறிக்கை...

ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்காக அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள் வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் அவர்களிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டதாகவும், பின்பு வைத்திய அத்தியட்சகர் முதலமைச்சரிடம் இச் செய்தியை சொன்னதும் அதனை பெற வேண்டாம் என்று முதலமைச்சர் கூறியதாகவும் மாகாணசபை உறுப்பினரால் தெரிவிக்கப்பட்ட அப்பட்டமான பொய்யை முழுப்பூசணிக்காயை ஒரு பீங்கான் சோற்றுக்குள் மறைக்கின்ற ஊடக அறிக்கையாகவே நான் பார்க்கின்றேன்.

கௌரவ கிழக்குமாகாண முதலமைச்சர் அவர்களைப் பொருத்தவகையில்2015.02.06 இல் முதலமைச்சராக பதவியேற்று மிகவும் வினைத்திறனாகவும் பிரதேச வேறுபாடுகளின்றியும், தமிழ், முஸ்லிம், சிங்களம் என்கின்ற இன வேறுபாடின்றியும் தன்னுடைய முதலமைச்சர் பொறுப்பை காத்திரமான முறையில் செய்துவருகின்றார். இதற்கு ஆதாரம் மாகாணசபையில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இன கட்சி வேறுபாடின்றி அவருக்கான ஆதரவினை வழங்கிவருகின்றனர்.

கடந்தகால மாகாணசபை ஆட்சி முறைமையை விட முற்றிலும் வேறுபட்டு இலங்கை அரசியல் அமைப்பின் 13 வது சீர்திருத்தத்தில் கூறப்பட்ட மாகானசபைக்குரிய அதிகாரங்களை வெற்றுக் கடதாசியில் மாத்திரம் வைத்திராமல் அதனை செயற்பாட்டில் கொண்டுவந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் நன்னோக்கில் மத்திய அரசாங்கத்திடமிருந்து பல பேச்சுவார்த்தைகள், நட்புறவு மற்றும் ஏனைய மாகாண முதலமைச்சர்களின் அனுசரணையுடன் மாகாணத்துக்கேயுரிய அதிகாரங்களைப் பெற்று செயற்பட்டுவருவதனை இம்மாகானமும் மக்களும் நன்கு அறிவார்கள். இதனை மேலும் உறுதிப்படுத்துவதற்காக கிழக்குமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களே இம்முதலமைச்ச்சரின் வினைத்திறனான செயற்பாட்டினை வரவேற்றிருந்தார்.

முதலமைச்சரின் இவ்வாறான பன்முக ஆளுமை நிறைந்த மாகாணத்தின் செயற்பாடுகளை தாங்கிக்கொள்ள முடியாத காழ்ப்புணர்வின் வெளிப்பாடே இவரின் ஊடக அறிக்கையாகும். ஏறாவூர் ஆதார வைத்தியசாலையைப் பொருத்தவகையில் மிக நீண்ட காலமாக ஏனைய ஆதாரவைத்தியசாலைகளோடு ஒப்பிடுகின்றபோது ஆகவும் குறைந்த வளத்துடன் செயற்பட்டுவருவது மாகாண சுகாதார அமைச்சராக இருந்த சுபையிருக்கு தெரியாமல் இருக்கமுடியாது. இதனை அங்கு வைத்தியசேவை பெறுகின்ற மக்களும் வைத்தியசாலை நிருவாகமும் தெளிவாக விளங்கியிருக்கிறார்கள். தான் சுகாதார அமைச்சராக இருந்து குறிப்பிட்ட வேலைகளை மாத்திரமே செய்துவிட்டு வைத்தியசாலையின் பாரிய சேவைகளைச் செய்தவரைப் போல நடிப்பது எமது மக்களுக்குத் தெரியாமலில்லை.

கௌரவ கிழக்குமாகான முதலமைச்சர் அவர்கள் எமது பிரதேசத்தின் நீண்டகால அபிவிருத்தித் தேவைகளையும் குறைபாடுகளையும் இனங்கண்டு மாகாண, மத்திய அரசாங்கத்தின் அமைச்சர்களின் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்று செய்துவருகின்றார். உதற்குப் பக்கபலமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களின் ஒத்துழைப்புடனும் ஆசீர்வாதத்துடனும் இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

 அத்துடன் பிரதமர், ஜனாதிபதி ஆகியோருடன் தனக்குள்ள நட்பின் காரணமாகவும் இவ்வாறான அபிவிருத்திச் செயற்பாடுகளை தன்னுடைய பிரதேசத்துக்கும் கிழக்குமாகாணத்தின் ஏனைய பிரதேசங்களுக்கும் அரசியல் வெட்டுக்குத்துக்களையும் தாண்டி கொண்டுவந்து சேர்க்கின்றார். அந்தவகையில் ஏறாவூரின் பழமை வாய்ந்த பொதுச்சந்தை மற்றும் பெண்சந்தை, ஏறாவூர் நகரசபையின் வளாகத்தில் கலாசார மண்டபமும் சகல வசதிகளையும் உடைய நவீன நூலகமும் நகரசபையின் வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டு கடைத்தொகுதிகளையும் பல பாடசாலைகளுக்கு நீண்டகாலத் தேவைகளாக இருந்த கட்டிட வசதிகளையும்,ஏனைய வீதிகள், வடிகாலமைப்பு, மக்களின் வாழ்வாதாரம், கைத்தொழில்பேட்டைகள், அரச மற்றும் தனியார் துறைகளில் யாரும் வழங்கிடாத அதிகளவிலான வேலைவாய்ப்புக்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள், எமது ஆதார வைத்தியசாலையின் நீண்டகாலத் தேவையாக இருந்த அவசர சிகிச்சைப் பிரிவு மகப்பேற்று மருத்துவமுனை அம்மருத்துவமனைக்கான மின்தூக்கி மற்றும் வைத்தியசாலையின் அறுவைச் சிகிச்சைப்பிரிவு, நோயாளர் விடுதிக்கட்டிடங்கள் அதற்குத் தேவையான வைத்திய உபகரணங்கள், வைத்தியசாலைக் கட்டிடங்களுக்கான கண்காணிப்புக் கமரா கட்டமைப்புக்கள் போன்றவற்றுக்காக பல கோடி ரூபாய் நிதிகளை பெற்று செய்தும், செய்வதற்கான நடவடிக்கைகளிலும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றார். 

கடந்த இரண்டுவருடங்களாக கிழக்குமாகாணத்திலிருந்து கல்விக் கல்லூரி ஆசிரிய நியமனங்களை வெளி மாகாணத்துக்குப் பெற்றவர்களை அவர்களின் சொந்த மாகாணத்துக்கே கொண்டுவந்த சேர்த்த வரலாற்றுப் பெருமையும் கௌரவ முதலமைச்சரையே சாரும்.

இவ்வாறான அபிவிருத்திச் செயற்பாடுகள் எமது பிரதேசத்தில் நீண்டகால தேவைகளாக இருந்தபோதிலும் முதலமைச்சருக்கு முன்னிருந்த இந்த அரசியல் வாதியினால் அதிகாரத்தில் இருந்தபோது ஆகக் குறைந்தது சுகாதார அமைச்சராக இருந்துகூட எமது வைத்தியசாலையின் நீண்டகால குறைபாடுகளைத் தீர்க்கமுடியாமல் போனது கவலையான விடயம்தான். ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு சில வைத்திய உபகரணங்கள் தான் தருவதாகவும், அதற்கான வேண்டுகோள் கடிதத்தினை தருமாறும் கூறியதோடு ‘’இதனை முதலமைச்சர் விடமாட்டாராக்கும் என ? ‘’ என்று ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா வே வைத்திய அத்தியட்சகரிடம் கூறியிருக்கிறார்.

இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள் தன்னுடைய ஹிறா பவுண்டேசனுக்கூடாகவே வைத்திய உபகரணங்களை தருவதாக கூறியிருந்தாலும் ஏற்கனவே ஏறாவூர் ஆதாரவைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் அவர்கள் வைத்தியசாலையின் தேவைகள் பற்றிய BH/ER/GEN/2016 இலக்க 01.09.2016 ஆம் திகதிய கடிதம் ஒன்றினை கடிதம் ஒன்றினை ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களிடம் ஒப்படைத்திருந்தார். இதுபோல அதே வைத்திய அத்தியட்சகர் கௌரவ முதலமைச்சர் அவர்களுக்கு வைத்தியசாலையின் தேவை பற்றிய தன்னுடைய BH/ER/GEN/2016 இலக்க 03.08.2016 ஆம் திகதிய கடிதம் ஒன்றினை ஒப்படைத்திருந்தார். இதனைக் கருத்திற்கொண்ட முதலமைச்சர் அவர்கள் மாகாண, மத்திய அரசாங்கத்தின் நிதிமூலம் இத்தேவைகளை விரைவுபடுத்தி செய்துகொண்டிருக்கிறார்.

 முதலமைச்சர் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுத்து நிதி பெற்றுக்கொண்ட அதே வேலைத்திட்டத்தினை அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களும் தெரிந்துகொண்டே அதற்கு கோரிக்கைக் கடிதம் கோரியிருப்பது இவ்வாறான வீண் பழியை முதலமைச்சரின்மீது சுமத்துவதற்கான கைங்கரியமாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்குள் எழுகிறது. இதைவிட வைத்திய அத்தியட்சகரினால் அவருக்குக் கொடுக்கப்பட்ட வேறுதேவைகளை நிறைவேற்றிக்கொடுக்காமல் அதே விடயத்தை செய்து தருவதற்காக மேலும் ஒரு கோரிக்கைக் கடிதம் கோரியதை சிறுபிள்ளைத்தனமாகவே நோக்கலாம். இது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருக்கும் அங்குள்ள நிருவாகத்தினருக்கும் நன்றாகத் தெரியும்.

இங்கு சுட்டிக்காட்ட வேண்டியது என்னவென்றால் முதலமைச்சர் அவர்கள்2015.02.06 லேயே முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு வைத்தியசாலையின் தேவை பற்றிய கடிதம்01.09.2016 இலேயே கொடுக்கப்பட்டது .ஆகவே முதலமைச்சர் இக்கடிதத்தினை அல்லது கோரிக்கையினை தடுத்திருக்கவில்லையே ? யாருடைய அபிவிருத்தி வேலைகளையும் தடுக்கவோ நிறுத்தவோ அல்லது எமது பிரதேசத்துக்கு வந்த கடந்தகால நிதி ஒதுக்கீடுகளை வெட்டி அவர்களுடைய பிரதேசங்களுக்கு கொண்டு சென்றவர்களைப் போல் முதலமைச்சர் முற்படவில்லை என்பதற்கு இதனை விட என்ன ஆதாரம் இருக்கிறது ? எந்த அதிகாரியையும் பணயக் கைதியாக வைத்து அரசியல் செய்யும் தேவை முதலமைச்சருக்குக் கிடையாது. ஆனால் இவர்களது அதிகாரக் காலத்தில் பல திணைக்களத் தலைவர்களை தம்முடைய வீட்டு வேலைக்காரகளைப் பயன்படுத்தியவர்களும் இந்த மேதாவித்தன அரசியல்வாதிகள்தான். குறை காண்பதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாமல் இவர்கள் திணறுகிறார்கள். 

 எமது பிரதேசத்தில் பல அரசியல்வாதிகளும் அவர்களுடைய கொள்ளளவுக்கு ஏற்ப வேலைத்திட்டங்களை சுதந்திரமாக செய்வதில் எந்தத் தடையும் இல்லை. விரிவு அஞ்சி அதனை இவ்விடத்தில் தவிர்த்து கொள்கின்றேன். மேலதிக தகவல்கள் தேவையாயின் என்னோடு யாரும் தொடர்புகொள்ளலாம். கடந்த காலங்களில் அபிவிருத்தி வேலைகளை தடுத்தவர்கள் யார் ? துரோகமிழைத்தவர்கள் யார் ? என்ற பட்டியல் எம்மிடம் ஏராளமாக இருக்கின்றது. எனவே ஒருவரின் மீது வீண்பழி சுமத்துவதை இவர்கள் உடனடியாக நிறுத்தவேண்டும். அல்லது அவர்களை நோக்கி பதில்கள் நாகரீகமான முறையில் வழங்க தயாராக இருக்கிறோம்.

அப்துல் நாசர்,
முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர்,
முதலமைச்சரின் பிராந்திய அலுவலகம்,
ஏறாவூர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -