வாழைச்சேனை பிரதேச சபையை மக்கள் இழுத்து மூடி ஆர்ப்பாட்டம் - வீடியோ




அஹமட் இர்ஷாட்-

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதி கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபைக்கு சொந்தமான 1967 ம் ஆண்டு தொடக்கம் வாழைச்சேனை பழைய பிரதேச சபை கட்டிடம் அமைந்திருந்த தற்போதைய சந்தை தொகுதி அமைந்துள்ள இடமானது பிரதேச சபைக்கு சொந்தமானது எனவும், அதற்கு பிரதேச சபையின் செயலாளரும் சபை நிருவாகமும் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு இடை நிறுத்தப்பட்டுள்ள சந்தை தொகுதி கட்டிடத்தினை உடனடியாக அமைத்து தருமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தியின் தலைமையில் மக்கள் இன்று 25.01.2017 புதன் கிழமை காலை ஆறு மணி தொடக்கம் பிரதேச சபையின் பிரதான கதவினை இழுத்து மூடி சபையின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களை உள்ளே செல்ல விடாமல் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த சந்தை கட்டிட தொகுதி அமையப்பெற்று வந்த காணியானது 58 வருடங்களுக்கு மேலாக வாழைச்சேனை பிரதேச சபையினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. தற்பொழுது சட்டரீதியான முறையில் பிரதேச சபையினால் காணியானது நிர்வகித்து வருகின்ற நிலையில் தமிழ் சமூகமும் முஸ்லிம் சமூகமும் ஒற்றுமையுடன் குறித்த சந்தை தொகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரமேதாச உள்ளூராட்சி அமைச்சராக இருந்த வேளையில் வாழைச்சேனை பிரதேச சபைக்கான கட்டிடம் அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. அதிலேயே பிரதேச சபை இயங்கியமை என்பதும் எல்லோரும் அறிந்த வரலாறாகவும் உள்ளது.

கடந்த 2002ம் ஆண்டு வாழைச்சேனை தமிழ் முஸ்லிம் இன கலவரத்தின் பொழுதே அக்கட்டிடம் தீக்கரையாக்கபட்டு வாழைச்சேனை பிரதே சபையானது மர்ஹும் அமைச்சர் அஸ்ரபின் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் நிதி ஒதுகீட்டின் மூலம் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் கட்டிக்கொடுக்கப்பட்ட புதிய நூலக கட்டிடத்திற்கு இட மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையிலே பல வருடங்களாக குறித்த பழைய கட்டிடம் அமைந்திருந்த காணியில் பிரதேச சபைக்கு வரிப்பணத்தினை செலுத்தி தற்காலிகமாக அமைக்கப்பட்டிருக்கும் கடைத்தொகுதிகளில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிம், முஸ்லிம் வர்த்தகர்களின் அவல நிலையினை கருத்தில் கொண்டு பிரதேச சபையானது நிரந்தமான சந்தைக்கட்டிட தொகுதியினை பல மில்லியன் ரூபாய்கள் செலவில் நிர்மாணிக்க தொடங்கியது.

ஆனால் முஸ்லிம் தனி நபர்கள் குறித்த காணியானது தங்களுக்கு சொந்தமானது என பொலீஸ், உள்ளூராட்சி தினைக்களம், முதலமைச்சரின் அலுவலகம், உள்ளூராட்சி அமைச்சு, முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களங்களில் முறைப்பாடு செய்துள்ளமையினால் குறித்த காணியில் அமைக்கப்பட்டு வந்த பொது சந்தைக்கட்டிட தொகுதியானது இடை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே குறித்த சந்தைக்கட்டிட தொகுதியின் கட்டுமான பணிகளை எதற்காக பிரதேச சபையானது இடை நிறுத்தியுள்ளது என மக்கள் பிரதேச சபை நிருவாகத்தினை தெளிவு படுத்துமாறு வேண்டி இன்று பிரதேச சபையின் பிரதான கதவுகளை இழுத்து மூடி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த நிலையில் இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் வாழைச்சேனை பிரதேசத்தில் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்ற தமிழ், முஸ்லிம் உறவுகளுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தக்கூடியது என்ற காரணத்தினாலும், பிரதேச சபையின் செயலாளராக கடையாற்றுகின்ற எஸ்.எம்.சிஹாப்தீன் அரசியல் அழுத்தங்கள் காரணமாக சந்தைக்கட்டிட தொகுதியினை இடை நிறுத்தியுள்ளதாகவும் பிரதேச மக்களினால் குற்றம் சுமத்தப்பட்டவாறே இருந்து வருகின்றது. இதனை கருத்தில் கொண்ட பிரதேச சபையின் செயலாளர் குறித்த விடயத்தினை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கு தெளிவு படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்ற பிரதேச சபை அலுவலகத்திற்கு முன்னால் வாழைச்சேனை பொலீஸ் உத்தியோகதர்களுடன் விஜயம் செய்ததுடன் புதிய பொது சந்தை கட்டிட தொகுதி இடை நிறுத்தப்பட்டமைகான நியாய பூர்வமான காரணங்களை தெளிவுபடுத்தினார்.

அத்தோடு மேலும் தனது கருத்தினை தெரிவித்த பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.ஷிஹாப்டீன் குறித்த பிரச்சனை சம்பந்தமாக தனது மேல் அதிகாரிகளின் ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும், மேற்கொண்டு எவ்வாறான நடவடிக்கைகளை தாங்கள் எடுக்க இருக்கின்றோம் என்பது சம்பந்தமாகவும் விளக்கமளித்தார். அதனோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், வியாழேந்திரன், முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பிரதேச அரசியல்வாதிகள் எல்லோரினதும் ஒருமித்த கருத்திற்கு அமைவாகவும், முதலமைச்சரினால் ஏற்படுத்தப்பட்டுள்ல சட்ட ஆலோசனை குழுவின் அறிக்கை கிடைத்ததன் பின்னர் குறித்த காணியானது பிரதேச சபைக்கே சொந்தமானது என்பதில் ஒருக்கிணைந்து செயற்பட்டு மீண்டும் மிக விரைவில் சட்ட ரீதியான முறையில் கட்டிட நிர்மாண பணிகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரச தனியார் ஊடகங்கள் முன்னிலையில் தெளிவுபடுத்தினார்.

அதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுமூகமான முறையில் கலைந்து சென்றதுடன் பிரதேச சபையின் அலுவலக நடவடிக்கைகளும் வழமைக்கு திருப்பின. மேலும் குறித்த ஆர்ப்பட்டம் நடந்தமை சம்பந்தமான நேரடி உண்மை நிலவரமும், பிரதேச சபை செயலாளரின் கருத்துக்கள் மற்றும் சந்தை கட்டிடம் அமைக்கப்படுகின்ற பிரதேசத்தில் உள்ள வர்த்தகர்களின் கருத்துக்கள்,அடங்கிய காணொளியானது எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -