தமிழ் மக்களிடத்தில் அதிகாரங்கள் இருந்தும் எந்தப் பிரயோசனமும் இல்லை - ஷிப்லி பாறுக்



எம்.ரீ.ஹைதர் அலி-
யுத்தம் முடிவடைந்த பிற்பாடும் சிறுபான்மை மக்களுக்கெதிரான அடக்கு முறைகளுக்கான தீர்வொன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சிறுபான்மை மக்கள் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்திய போதும் ஆட்சி மாற்றம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் கடந்த நிலையில் சிறுபான்மை மக்களுக்கான தீர்வுகள் எதுவும் இதுநாள்வரை கிடைக்கப்பெறவில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.

வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட கொத்தியாபுல பிரதேச மக்களுக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று அண்மையில் கொத்தியாபுல பலநோக்கு கூடுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

கடந்த யுத்த காலங்களின் போது அதிகளவான எமது உறவுகள் இடம்பெயர்ந்திருந்தனர், இந்த நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று இரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரை இத்தகைய இடம்பெயர்ந்த மக்களுக்கான மீள்குடியேற்ற நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படவில்லை.

தமிழ் மக்களிடத்தில் அரசியல் அதிகாரம் மற்றும் நிருவாக அதிகாரம் போன்ற அனைத்து அதிகாரங்களும் உள்ள போதிலும் அந்த அதிகாரங்களினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த வகையான பிரயோசனமும் கிடைக்கப்பெறவில்லை. சமூகம் சார்ந்த விடயங்களில் இவ்வாறான பின்தங்கிய பிரதேசங்கள் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்ற ஒரு நிலையினையே நாம் காண முடிகின்றது.

இப்பிரதேசம் இன்று கல்வியில் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. நகர்புறங்களுடன் ஒப்பிடும் போது இத்தகைய பிரதேசத்தில் கல்வி கற்கக்கூடிய மாணவர்களுக்கு குறைவான வளங்களே கிடைக்கப்பெறுகின்றது. நகர்ப்புறங்களைப் போன்று பிரத்தியேக வகுப்புக்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புக்களோ கல்விக்காக அதிக பணத்தினை செலவு செய்யக்கூடிய வசதிகளோ இத்தகைய பிரதேச மாணவர்களுக்கு மிகவும் குறைவாகும், 

எனவே இவ்வாறான பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை வளப்படுத்த வேண்டிய ஒரு பொறுப்பு எமக்கு காணப்படுகின்றது. அந்த வகையில் இப்பிரதேச பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக என்னால் முடியுமான முயற்சிகளை மேற்கொண்டு இப்பிரதேச பாடசாலைக்குரிய ஆரம்பப் பிரிவு ஆசிரியர் ஒருவரை பெற்றுத்தருவதற்கு உறுதியளிக்கின்றேன் என தெரிவித்தார். 

மேலும் கொத்தியாபுல, காஞ்சிரங்குடா மற்றும் முதலைக்குடா ஆகிய பிரதேசங்களிலுள்ள மூன்று மைதானங்களை புனரமைப்பு செய்து வழங்குமாறு விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் கௌரவ ஹரீஸ் அவர்களிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க அந்த மைதானங்களை புனரமைப்பு செய்து தருவதாக கூறியுள்ளார். அதற்கமைவாக அந்த மைதானங்களுக்குரிய மதிப்பீடுகளை பெற்று வழங்கும் நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்து வருகின்றோம்.

மேலும் இப்பிரதேசத்திலே அதிகமான வீதிகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றது. அவ்வாறான வீதிகளை இனங்கண்டு அவற்றை புனரமைப்பு செய்வதற்குரிய முழுமையான முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். 

இச்சந்திப்பினைத் தொடர்ந்து கொத்தியாபுல பிரதேசத்தில் உள்ள புனரமைப்பு செய்யப்பட வேண்டிய வீதிகள் மற்றும் மைதானங்களையும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் பார்வையிட்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -