அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில் தீவிரவா சக்திகள் - அமைச்சர் ஹக்கீம்

சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் அகழ்வாராய்ச்சி என்ற போர்வையில், பௌத்த வழிபாட்டுத் தளங்கள் அங்கு காணப்பட்டதற்கான நினைவுச் சின்னங்களும், தடையங்களும் இருப்பதாக கூறிக்கொண்டு சில பேரினவாத தீவிரவா சக்திகள் மேற்கொண்டு வரும் முஸ்தீபுகளினால் இனங்களுக்கிடையிலான முறுகல்களும், விரிசல்களும் அதிகரிப்பதற்கான அச்சம் நிலவுவதாகவும், இந்த பரபரப்பான நிலைமையை அரசாங்கம் உரிய முறையில் தலையிட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டியது அவசியமென்றும் தம்மைச் சந்தித்த பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நெஸெபி பிரபு விடத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டினார். 

பிரபுக்கள் சபையின் உறுப்பினர் நெஸெபி பிரபு செவ்வாய்க்கிழமை (03) நண்பகல் 12.00 மணியளவில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை அவரது இல்லத்தில் சென்று சந்தித்து கலந்துரையாடியபோது தற்பொழுது கிழக்கில் நிகழ்ந்து வரும் சம்பவங்கள் தொடர்பிலும், பொதுவாக வடகிழக்கின் காணிப் பிரச்சினைகள் பற்றியும் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிளிக்கும் பொழுதே அவர் இதனைத் தெரிவித்தார். தமது முன்னைய இலங்கை விஜயத்தின் போது பிரஸ்தாப பிரபு அமைச்சர் ஹக்கீமைச் சந்தித்து உரையாடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ஹக்கீம் இது தொடர்பில் பிரபுவிடம் மேலும் கூறியதாவது, 

கோர உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டு சுமுகமாக நிலைமைக்கு மீண்டு கொண்டிருக்கின்ற சூழ்நிலையிலும் சிறுபான்மையினர் எதிர்நோக்கிவரும் காணிப் பிரச்சினை என்பது பூதாகாரமாக உருவெடுத்திருப்பது துரதிருஷ்டமானது.

முன்னொருபோதும் இல்லாதவாறு சிறுபான்மை மக்கள் நூற்றாண்டு காலங்களாக பாரம்பரியமாக வசித்து வரும் பிரதேசங்களில் தமது வழிபாட்டுத்தலங்கள் இருந்துள்ளன எனக்கூறிக்கொண்டு அரசாங்கத்தை திசைதிருப்பும் வகையில் சமயம் சார்ந்த தீவிர சிந்தனைப் போக்குள்ள ஒரு சாரார் தடையங்களைத் தேடிக்கண்டு பிடிக்கும் கைங்கரியத்தில் இறங்கியிருக்கின்றார்கள்.

இதைத்தவிர பரம்பரை பரம்பரையாக செய்கை பண்ணப்பட்டு வந்த விவசாய நிலங்கள் விஷயத்தில் பொதுவாக வடகிழக்கில் பிரச்சினைகள் இருந்து வருகின்றன. இவை பற்றி நாம் அரசாங்கத்தின் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு சென்றிருப்பதோடு, பல்வேறு மட்டங்களில் பேச்சு வார்த்தைகளையும் நடத்தியிருந்தோம். ஆனால் பிரச்சினைகள் உரிய முறையில் தீர்க்கப்படாமலேயே இருக்கின்றன.

வில்பத்து வனப்பிரதேசத்திற்கு அண்மையில் முன்னர் பரம்பரையாக வசித்த முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்பட்ட பொழுது அதற்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதாகவும், ஒரு சாரார் வில்பத்து வனப்பிரதேசத்தை மீண்டும் விஸ்தரித்து வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கு முற்படும் அளவிற்கு ஜனாதிபதியை தவறாக வழிநடாத்தியிருப்பது பற்றியும் அமைச்சர் கவலை தெரிவித்தார்.

இடம்பெயர்ந்த வடகிழக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிளிக்கும் போது, யுத்தம் முடிந்த பின்னரும் கூட அதனால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்றுவதில் மந்தகதியிலேயே நடைபெறுகின்றது. 

ஆனால் அரசாங்கமும், மீள்குடியேற்றம் தொடர்பான அமைச்சும் இந்த விடயத்தில் கரிசனையாகவே இருக்கின்றன. எதிர்பார்த்தபடி வெளிநாடுகளிலிருந்து இதற்காக போதியளவு நிதியுதவிகள் கிடைப்பதில்லை. இந்தியா ஐம்பதாயிரம் வீட்டுத் திட்டமொன்றை செய்து வருகின்றது.

இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறும் போது தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாக நேரிடுகின்றது. பொதுவாக வடக்கு முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் வியாபாரம், தையல் தொழில், விவசாயம் போன்றவற்றில் பாரம்பரியமாக ஈடுபட்டு வந்தவர்கள் என்ற காரணத்தினால் இதனால் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். அத்துடன், 25ஆண்டுகள் இடம்பெயர்ந்து வாழக்கின்ற சூழ்நிலையில் பரம்பரை தலைமுறை இடைவெளியின் விளைவினால் இளைஞர்களும், யுவதிகளும் பொருளாதார சமூகப் பிரச்சினைகளுக்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளது. 

பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக வேறு சட்டம் கொண்டு வரப்படுவது பற்றி மேற்கு நாடுகளில் கவலை வெளியிடப்படுவதால் அது தொடர்பில் என்ன கூறவிரும்புகின்றீர்கள் எனக்கேட்டதற்கு, 

அது தொடர்பான சட்டவரைவை பரிசீலிக்கும் பணி பாராளுமன்றத்தில் மேற்பார்வைக்குழுவொன்றிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இதன்போது தமது நாட்டில் ஐஆர்ஓ அமைப்பை அந்த அரசாங்கம் எவ்வாறு கையாண்டதெனவும் பிரபு தெரிவித்தார். 

இந்தக் கலந்துரையாடல் 45 நிமிடங்கள் வரை நீடித்தது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -