எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ஒன்றன் பின் ஒன்றாக இடி முழக்கத்தோடு, இந்த நல்லாட்சியின் கீழ் இன்று முஸ்லிம்களுக்கு அடிக்கு மேல் அடி விழுகின்றது. முஸ்லிம்களுக்கு ஏற்படுகின்ற இன்னல்களைத் தீர்க்க வேண்டும்,பரிகாரம் தேட வேண்டும், பள்ளிவாசல்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து முஸ்லிம் எம்.பிக்கள் அரசை நாடி கேட்டு வருகின்றனர். ஜனாதிபதியிடம் சொல்லுகின்ற விடயத்தை பிரதம அமைச்சரிடம் போய்ச் சொல்லுமாறு ஜனாதிபதி கூறியதாகவும் பிரதம அமைச்சரிடம் முறையிடும் போது அந்த முறையீட்டை ஜனாதிபதியிடம் போய் முறையிடுமாறும் பிரதம அமைச்சர் கூறி, மாறி மாறி சமுதாயத்தை பந்தாடுகின்றனர் என்ற விசமத்தனமான, மிகவும் துக்கரமான விடயங்களை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து நாங்கள் தினமும் கேட்ட வண்ணம் இருக்கின்றோம் என என முன்னாள் முஸ்லிம் கலாசார அமைச்சரும் முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலதிபருமான ஏ.எச்.எம்.அஸ்வர் தெரிவித்தார்.
வில்பத்து தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையிலே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ளதாவது,
அழுகிற பிள்ளைக்கு விட்டுவிட்டாவது தாய் பாலூட்டினால்தான் அந்தப் பிள்ளை அழுகையை நிறுத்தும். அழுகிற பிள்ளையின் தலையைத் தடாவி அன்பு செலுத்துவதாக பாசாங்கு செய்து, தொடர்ந்து பாலூட்டாமல் இருந்தால் அந்தக் குழந்தை இந்த உலகத்தை விட்டே பிரிந்துவிடும். இப்படியான ஒரு பரிதாபகரமான ஒரு நிலையில்தான் இன்று அரசிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் முகங் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகியிருக்கின்றனர் எனவே இன்று முஸ்லிம்களுக்கு எதிராக அரசின் தலைமைத்துவ நடவடிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. வில்பத்து வனப் பகுதியை விரிவு படுத்த வர்த்தமானியில் அறிக்கை விடுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருப்பதானது, அது கண்டிக்கப்பட வேண்டிய விடயம் எனவும், தவறான ஒரு முடிவு எனவும் றிஷாத் பதியுதீன் அமைச்சர் கூறியிருக்கின்றார். இது தவறான தரவுகளின் மூலமாக எடுத்த முடிவாகும். இதன் பின்னணியில் முஸ்லிம் விரோத தீய சத்திகள் பலவாறாக இயங்குகின்றன.
வில்பத்துப் புலிகளால் (மிருகங்களால்) விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள்தான் தஞ்சம் தேடி வந்து புத்தளம் வட பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழுகின்றார்கள். அவர்களுக்குரிய வாழ்வாதார வசதிகளை றிஷாத் பதியுதீனுடைய அமைச்சு செய்து வருவது இலங்கையின் அனைத்து முஸ்லிம்களுடைய பாராட்டையும் பெறுகின்றது. இன்னும் அமைச்சரவையில் இருக்கின்ற ஒரு முக்கிய அமைச்சருக்கு எதிராக இந்த நடவடிக்கையை அரசின் தலைமைத்துவம் எடுப்பதையிட்டு நாங்கள் அதிர்ச்சி அடைகின்றோம்.
இந்தச் செயல் பூர்வீகக் காணிகளை அரசாங்கம் அபகரிப்பதாகும். புத்தளத்திற்கு வடக்கே உள்ள பிரதேசத்தை நான் நன்கு அறிவேன். அது பெரும்பாலான காணி நிலங்கள் வில்பத்து பாதுகாப்பு வலயத்துக்குள் உட்படாத காணிப் பிரதேசங்களாகும்.
புத்தளத்தில் இருந்து காடுகளின் ஊடாக மன்னார் மாவட்டத்துக்கு செல்லும் போது இடிந்து பாழடைந்த பள்ளிவாசல் மட்டுமல்ல, ஏனைய வணக்கஸ்தலங்களையும் கண்டிருக்கின்றோம். புலிகளால் (மிருகங்களால்) விரட்டப்பட்ட பிரதேசத்திலிருந்து மக்களை வெளியேற்றி மீண்டும் அந்த மிருகத்துக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக என்று சொல்லுவது, வடிகட்டிய முட்டாள்தனமான ஒரு செயலைத்தான் இந்த அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இதை எப்படி உலகம் சும்மா பார்த்து,பொறுத்துக் கொண்டிருக்கும்.
எனவே குட்டக்குட்ட குனிந்து கொண்டு கேட்பதை விட்டுவிட்டு அதிலிருந்து வெளியேறி எதிர்காலத்தில் உருவாகவிருக்கின்ற மஹிந்த ராஜபக்ஷ தலைமை அரசாங்கத்தோடு இணையுமாறு முஸ்லிம் முற்போக்கு முன்னணி அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அமைச்சர்களையும் கேட்டுக் கொள்வதாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.