ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர்க் கோட்டக் கல்வி அதிகாரியாக சேகுதாவூத் அப்துல் றஸ்ஸாக் உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.எஸ்.டி.எம். அஸங்க அபேவர்தன அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் திங்கட்கிழமை (16.01.2017) மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் தான் கடமைப் பொறுப்பேற்க விருப்பதாக அப்துல் றஸ்ஸாக் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் இந்தப் பிரிவின் கோட்டக் கல்வி அதிகாரியாகக் கடமையாற்றிய ஐ.எல். மஹ்ரூப் சேவையிலிருந்து ஓய்வுபெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு சேகுதாவூத் அப்துல் றஸ்ஸாக் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கோட்டப் பிரிவில் கடந்த 3 மாதங்களாக கோட்டக் கல்வி அதிகாரிக்கான பதவி வெற்றிடம் இருந்து வந்த நிலையில் ஜனவரி 3ஆம் திகதி இதற்கான நேர்முகப்பரீட்சை திருகோணமலை மாகாண கல்விப் பணிமனையில் இடம்பெற்றது.
தற்போது கோட்டக் கல்வி அதிகாரியாக நியமனம் பெற்றுள்ள அப்துல் றஸ்ஸாக் 1988 ஆம் ஆண்டு ஆசிரிய சேவைக்குத் தெரிவாகி; 12 வருடங்கள் ஆசிரியராகவும், 17 வருடங்கள் அதிபராகவும் பணியாற்றியுள்ளார்.
இறுதியாக அல்-முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் 3 ஆண்டுகள் அதிபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் அப்பாடசாலையிலிருந்து 65 மாணவிகள் பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டனர் என்பது இங்கு குறிப்படத் தக்கது.
இது அந்தப் பாடசாலையின் நூறு வருட வரலாற்றில் கல்வி உயர் அடைவு மட்டம் என்று கருதப்படுகின்றது.