தனியார் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேற்றம்

வுனியா, ஓமந்தை சோதனைச்சாவடி அமைந்திருந்த பகுதியில் இருந்து நேற்று (14) மாலை முதல் இராணுவம் வெளியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

பொங்கலுக்கு முன்னர் குறித்த இடங்கள் விடுவிக்கப்படும் என அரசாங்கம், ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த யுத்த காலத்தில் ஜயசிக்குறு இராணுவ நடவடிக்கையைத் தொடர்ந்து வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்குமான நுழைவாயிலாகவும் மக்களையும் பொருட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச்சாவடியாகவும் இருந்த இப்பகுதி 21 பேருக்கு சொந்தமான 24 ஏக்கர் காணியாக காணப்பட்டிருந்தது.

இந்நிலையில் யுத்தம் நிறைவடைந்தன் பின்னர் இக்காணின் உரிமையாளர்கள் தொடச்சியாக தமது காணிகளை மீள் ஒப்படைக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது இராணுவம் அப்பகுதியில் இருந்து வெளியேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட போது குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்த போதிலும் இராணுவம் அப்பகுதியில் நிலைகொண்டிருந்தது. தற்போது இராணுவம் தமது தேவைக்காக அமைத்திருந்த கட்டிடங்களை அகற்றி வருவதுடன் தளபாடங்களையும் அப்புறப்படுத்துவதற்கான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையில் குறித்த காணியின் உரிமையாளர்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ள நிலையில் சில தினங்களில் இக்காணிகள் உத்தியோகபூர்வமாக கையளிப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, அண்மையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இப்பகுதி காணி உரிமையாளர்களுக்கும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா அரச அதிபர் ரோஹண புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார் ஆகியோருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இப்பகுதியில் இருந்து முழுமையாக இராணுவம் வெளியேறி பொதுமக்களின் காணியை விடுவிக்க வேண்டும் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

அத்துடன், இதற்கு பதிலீடாக இராணுவத்தினருக்கு ஏ9 வீதியில் புளியங்குளம் பகுதியில் மாற்று காணி வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.தினகரன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -