எச்.எம்.எம்.பர்ஸான்-
கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் ஏற்பாட்டில் கொழும்பு அமானத்துத் தஃவாவின் அனுசரணையில் நடந்து முடிந்த மாபெரும் அல்குர்ஆன் மனனப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நேற்று 08.01.2017ம் திகதி ஜம்இய்யாவின் தலைவரும் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக கலாசாரா உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி MA அவர்களின் தலைமையில் ஓட்டமாவடி பிரதேச சபை மண்டபத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மருதமுனை தாருல் ஹுதா மகளிர் அரபுக்கல்லூரியின் அதிபரும் நாடறிந்த இஸ்லாமிய பிரசாரகருமான கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.எம் முபாரக் மதனி மற்றும் ஆசிரியர்கள், உலமாக்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
நடந்து முடிந்த குர்ஆன் மனனப்போட்டியில் நான்கு அரபுக்கலாபீடங்களும், பல பாடசாலைகளைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் உட்பட சுமார் 600 ற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இப்போட்டியானது, எட்டு பிரிவுகளாக நடாத்தப்பட்டது. எட்டுப்பிரிவுகளிலும் 85 வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, பணப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. முதலாமிடத்தைப் பெற்ற வெற்றியாளருக்கு இருபதாயிரம் ரூபாய் பணப்பரிசு வழங்கி வைக்கப்பட்டதோடு, வெற்றியாளர்கள் அனைவருக்கும் பணப்பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன. மொத்தமாக மூன்று இலட்சத்தி ஐநூறு ரூபாய் பணப்பரிசு வெற்றியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.