"ஆளுமை விருது" பெற்ற சமூக சேவையாளன்..!

றிபாஸ்டீன்,அய்ஷத்-
பாலமுனை இப்னுஷீனா கனிஷ்ட வித்தியாலயத்தில் 2017.01.07 இல் இடம் பெற்ற இளம் கவிஞர் பாலமுனை முபீத்தின் "மரணத்தை கீறும் பேனா" கவிதை நூல் வெளியீடும் கௌரவிப்பு நிகழ்வும் அமைச்சர் அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் உட்பட பல அமைச்சர்களும், அரசியல்வாதிகளும், கல்விமான்களும், கவிஞர்களும், பொதுமக்களும் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. 

இங்கு பாலமுனை மண்ணிற்கு பெருமை சேர்த்த பலருக்கும் "ஆளுமை விருது" வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் சிறந்த சமூக சேவையாளருக்கான சிறப்பு "ஆளுமை விருது" பாலமுனை சமூக சேவை ஆய்வு சபை, மரண உபகார நிதியத்தின் இஸ்தாபகரும் அதன் அமைப்பாளரும் பொதுச் செயலாளருமான அல்ஹாஜ் ஐ.பீ.எம்.ஜிப்ரி அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. 

இன்று பணத்துக்கும், பதவிக்கும், புகழுக்கும், அரசியலுக்குமென சமூக சேவை சீர்கெட்டுப்போன காலத்தில் "நிச்சயமானதும் நிரந்தரமானதுமான மறுமைக்கு உழைத்து இறை திருப்தி அடைந்திடுவோம்" என்ற மகுடத்துடன் தன்னையும் தனது அமைப்பையும் வழி நடாத்தும் இவர் இன்றைய சமூகத்தில் பலரது கண்களுக்கு தென்படாத தனித்துப் பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரமே.

இஸ்மாலெவ்வை பரிகாரி முகம்மது ஜிப்ரி எனும் பெயருடைய இவர் 1958.02.02 இல் ஆதம்லெவ்வை பரிகாரி இஸ்மாலெவ்வை பரிகாரி, உதுமாலெவ்வை பரிகாரி அலிமாக்கண்டு தம்பதிகளுக்கு மகனாக பாலமுனையில் பிறந்தார். தரம் 01-08 வரை பாலமுனை ரோமன் கத்தோலிக்க மிசன் பாடசாலையில் (தற்போதய அல்ஹிதாயா வித்தியாலயம்) கற்றதோடு பின்னர் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கையிலும் 03 வருடங்கள் கலை பயின்றார். 1979-1991 காலப்பகுதியில் வாழைச்சேனை தேசிய கடதாசிக் கூட்டுத்தாபனத்திலும், 1991-1997 காலப்பகுதியில் வீதிப் பராமரிப்பு அதிகார சபையிலும் கடமையாற்றி பின்னர் 1998-2002 காலப்பகுதியில் சவூதிஅரேபியாவிலும் தொழில் புரிந்தார். தற்சமயம் சுயதொழில் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

சிறுவயதிலேயே சமூக சேவையின் மீது ஈர்ப்புடைய இவர் 1982 இல் அம்பாரை மாவட்ட லிபிய மக்கள் காங்கிரஸின் சமூகசேவைத்துறை செயலாளராக செயற்பட்டது முதல் தனது சமூகசேவைப் பயணத்தை ஆரம்பித்து தனது வாழ்நாளிலே அதிகளவான நேரத்தை தனது சொந்தத் தேவையிலும் அதிகமாக சமூக சேவைக்காக செலவிட்டு வருகின்றார். 

1984 இல் SSRB - சமூக சேவை ஆய்வு சபையினை தோற்றுவித்து 33 வருடங்களாக இன்றும் அதன் அமைப்பாளராகவும், பொதுச்செயலாளராகவும் திறம்பட வழிநடாத்தி, அவ்வமைப்பினூடாக பலதரப்பட்ட சேவைகளையும் புரிந்தது வருகின்றார். 1984 இல் பாலமுனையில் முதலாவது பிரயாணிகள் தங்குமிடம் நிறுவப்பட்டமை, 1985 இல் அங்கவீனர்களுக்கான விசேட உதவித்திட்டம் என்பன இவரின் அன்றைய முயற்சிகளில் என்றும் எம்மால் மறக்கமுடியாதவை.

பாலமுனையில் பாராட்டு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், கல்வி நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்வதில் இவரது பங்களிப்பும் இரசனையும் அவரை மேலும் பல படிகள் எங்களிலிருந்து தனித்து உயர்த்தி நிற்கும். இவர் அமைத்த பல பாராட்டு விழாக்களில் ஓய்வுபெற்ற கிராம சேவை உத்தியோகத்தர் இஸ்ஸதீன் விதானை அவர்களுக்கு ஒழுங்கு செய்த தனி கௌரவிப்பு விழா என்றும் சிறப்புடையது. அதில் கௌரவிக்கப்பட்டவர் சார்பாக இவர் "கிராம நேசன்" எனும் ஒரு நூலையும் எழுதி வெளியிட்டிருந்தார். மேலும் இவர் இலங்கை கிராமோதய சபை நல்லிணக்க விசாரணைக்குழுவின் முறைப்பாட்டுப் பதிவாளராகவும் 1986-1991 சேவையாற்றியிருந்தார்.

இவரது சேவைகள் தனிச்சிறப்பு மிக்கதாகவும், போற்றப்படவும் முக்கிய காரணம், ஜனாஸா தொடர்பாக இவர் ஆற்றி வரும் சேவையே. சமூக சேவை ஆய்வு சபையின் முதன்மை நோக்கமான ஜனாஸா தொடர்பான சேவைகளை நிறைவேற்ற "மரண உபகார நிதியம்" எனும் உப அமைப்பையும் இதனூடு தோற்றுவித்து 1984 முதல் இன்றுவரையில் 33 வருடங்களாக செயற்பட்டுவருகிறார். இதனூடாக வைத்தியசாலைகளில் மரணமாகும் அம்பாரை மாவட்ட முஸ்லிம் கிராமங்களைச் சேர்ந்த ஜனாஸாக்களை வீடு கொண்டு சேர்க்கும் வாகன சேவை, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை பிரதேசங்களில் ஜனாஸாக்களை குளிப்பாட்ட, கபனிட, அடக்கம் செய்ய தேவையான பொருட்களை இலாபமற்ற முறையில் இலகுவில் பெறத்தக்கதாக 24 மணி நேரமும் விற்பனை செய்தல், பாலமுனை ஜனாஸா அடக்கஸ்தல பராமரிப்பு, மழைக்கால ஜனாஸா அடக்க மேடை விசேட திட்டம், குளிப்பாட்டல், கபனிடல் விசேட பயிற்சி வகுப்பு போன்ற இன்னும்பல சேவைகளையும் வழங்கிவருகின்றார்.

2007 இல் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாச்சார விழாவிலும் இவரது சமூகசேவைப் பணிக்கா விருது வழங்கி கௌரவிக்கப்ட்டிருந்தார். இவரது இத்தகைய பணிகள் மேலும் சிறக்கவும், ஈருலகிலும் இறையருள் கிட்டவும் வல்லோன் அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -