முஸ்லிம் பண்பாட்டு கட்டிடத் தொகுதி: திறப்பு விழாவும் மறைக்கப்பட்ட உண்மைகளும்

க்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக் காலத்திலிருந்த முஸ்லிம் சமய, கலாசார அமைச்சு தற்போது நல்லாட்சியிலும் உள்வாங்கப்பட்டிருப்பது முஸ்லிம் மக்களின் வாக்குப் பங்களிப்புக்கு ஒரு பிரதியுபகாரம்; என்றுகூட சொல்லலாம். மஹிந்த ஆட்சிக் காலத்தில் பௌத்த சாசன அமைச்சின் கீழிருந்த முஸ்லிம் கலாசார திணைக்களம் தற்போது, தனியான அமைச்சின் கீழ் சுயாதீனமாக செயற்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம் கலாசார திணைக்களத்துக்கு தனியானதொரு கட்டிடம் நேற்று திறந்துவைக்கப்பட்டது. இந்த கட்டிடத் தொகுதிக்கு எவ்வாறு அமைச்சரவை அனுமதி கிடைத்தது, நிதியொதுக்கீடு எவ்வாறு கிடைத்தது என்பது தொடர்பில் மறைக்கப்பட்ட சில உண்மைகளை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.

முஸ்லிம் கலாசார திணைக்கள கட்டிடம் உருவான வரலாறு மிகவும் பழமையானது. இந்தக் கட்டிடத்துக்கான காணியை பெறுவதற்கு மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப், அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, மர்ஹூம் அலவி மௌலானா ஆகியோர் பங்களிப்புச் செய்துள்ளனர். இதற்கு மேலதிகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.

முஸ்லிம் கலாசார திணைக்களத்துக்கு இவ்வாறான பாரியதொரு கட்டிடத்தை நிர்மாணிக்க வேண்டுமென்ற சிந்தனை இன்று, நேற்று உருவானதல்ல. இதன் வரலாறு 1978 வரை பின்னோக்கி செல்கின்றது. இந்த கட்டிடத்தை அமைப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை எதுவும் வெற்றியளிக்கவில்லை. 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தக் கோரிக்கை வலுப்பெற்ற நிலையிலும் எதுவும் நடைபெறவில்லை. இவ்வாறான நிலையில், சந்திரிகா அம்மையாரின் ஆட்சிக்காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் இந்தக் கட்டிடம் தொடர்பாக வேண்டுகோள் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கோரிக்கைகள் எல்லாம் கிடப்பிலேயே போடப்பட்டன.

2001ஆம் ஆண்டு மாவனல்லை இனக்கலவரத்தை தொடர்ந்து ரவூப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ், பொதுஜன ஐக்கிய முன்னணி ஆட்சியை கவிழ்த்து ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியமைத்தது. இந்த ஆட்சி அமைவதற்கு மூலகர்த்தவாக இருந்த ரவூப் ஹக்கீம் மீது ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருந்த நற்பெயர் காரணமாக நீண்டகால இடைவெளியின் பின்னர் முஸ்லிம் சமய, கலாசார அமைச்சு ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை பயண்படுத்திய ரவூப் ஹக்கீம், முஸ்லிம் சமய, கலாசார திணைக்களத்துக்கான தனியான கட்டிடத்தை அமைப்பதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றதுடன் அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்தார்.

முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் பலரினதும் கனவாக இருந்த இக்கட்டிடத்தை அமைப்பதற்கான வரைபடம் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்டபோது, அதில் முஸ்லிம் மக்களின் பல்வேறு தேவைப்பாடுகளும் உள்வாங்கப்பட்டன. தொழுகையறை, இஸ்லாமிய நூல்நிலையம், இஸ்லாமிய நூதனசாலை, நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு மண்டபம், விருந்துபசார மண்டபம் மற்றும் வாகன தரிப்பிட வசதி உள்ளிட்ட சகல வசதிகளும் உள்;ளடக்கப்பட்ட பல மாடிக் கட்டிடமாக வடைபடம் தயாரிக்கப்பட்டது.

இதற்கான செலவு அமைச்சரவை ஒதுக்கீட்டு தொகையையும் விட பல மடங்கு அதிகமாக இருந்தமையால், சவூதி அரேபியா அரசுடன் தொடர்புகொண்டு மேலதிக நிதியை பெறுவதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேற்கொண்டார். இதன் தொடர்ச்சியாக 2004ஆம் ஆண்டு நடைபெற்ற இக்கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் சவூதி மஜ்லிஸ் சூரா சபாநாயகர்; செய்ஷ் ஸாலிஹ் அல்ஹுமைத் கலந்துகொண்டார்.

இன்று சகல வசதிகளையும் கொண்டு பிரமாண்டமாக நிமிர்ந்துநிற்கும் முஸ்லிம்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் கூபாவுடனான இக்கட்டிடத் தொகுதியின் பங்களிப்பு முஸ்லிம் காங்கிரஸ் உடையது. அன்று இவ்வாறானதொரு ஆரம்பத்தை இட்டிருக்காவிடின், இன்று இவ்வாறானதொரு பிரமாண்ட கட்டிடம் உருவாவதற்கான எவ்வித சாத்தியமும் இருந்திருக்காது.

இப்பிரமாண்டமான கட்டிடத்தை அமைப்பதற்கு பல வருடங்கள் செல்லும் என்பதால், நிர்மாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியில் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமய, கலாசார அமைச்சராக இருந்த 2002-2004 காலப்பகுதிக்குள் தற்காலிகமாக இரண்டு மாடிக் கட்டிடத்தை 50 இலட்சம் ரூபா செலவில் உடனடியாக நிர்மாணித்தார். இக்கட்டடத்துக்கான முழுப்பணமும் அவரின் அமைச்சிலிருந்தே ஒதுக்கீடு செய்யப்பட்டது.

(இங்குள்ள படத்தில் ரவூப் ஹக்கீமின் வழிகாட்டலில் வரையப்பட்ட, தற்போதைய கட்டிடத்தின் வெளித் தோற்றமும் தற்காலிக நிர்வாகத் தொகுதிக்காக ஒதுக்கப்பட்ட இடமும் தெளிவாக காட்டப்பட்டுள்ளன. இப்படம் முஸ்லிம் கலாசார திணைக்களத்தினால் 2004ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கைநூலில் இருந்து பெறப்பட்டதாகும்.)

இவ்வேளையில் முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த அஷ்ஷெய்ஹ் எம்.ஐ. அமீர் (தற்போதைய அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்) அப்போதைய சிரேஷ்ட உதவிச் செயலாளராக இருந்த மர்ஹூம் யூ.எல்.எம். ஹால்தீனின் பங்களிப்பும் இதில் சுட்டிக்காட்டப்பட வேணடும்.

2002-2004 ஆண்டு காலப்பகுதியில் அமைச்சரவை மூலம் இக்கட்டிடத் தொகுதி அமைப்பதற்காக 286 மில்லியன் நிதியொதுக்கீடு செய்யப்பட்டது. எனினும் பின்னர் ஆட்சி மாறியதால் இந்தக் கட்டிடத்துக்கான நிதி கிடப்பில் போடப்பட்டதுடன், கட்டிடம் அமைக்கப்படுவதற்கான வேலைத்திட்டங்கள் மந்தகதியில் நடைபெற்றன.

பிற்றபட்ட காலப்பகுதியில் முஸ்லிம் கலாசாரத்துக்கு பொறுப்பாக அமைச்சர் ஒருவர் இல்லாத காரணத்தினாலும் இது சம்பந்தமாக சவூதியுடன் யாரும் தொடர்பு கொள்ளாமையினாலும் ஒதுக்கப்பட்ட நிதியைப் பெறுவதில் பல சிக்கல்கள் காணப்பட்டன. இதன்போது முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளராக வை.எல்.எம். நவவி கடமையாற்றினார். பின்னர் 2005, 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் இக்கட்டிடத்துக்கான செலவுத்தொகை மீள் மதிப்பீடு செய்யப்பட்டது. இதன்படி 596 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை அனுமதியும் கிடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2004ஆம் ஆண்டின் பின்னர் வந்த ஆட்சியாளர்கள், முஸ்லிம் சமய கலாசார அமைச்சராக ஒருவரை நியமிக்காது தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்துவந்த நிலையில் இக்கட்டிடத்தை பல்லின சமயங்களுக்கான கலாசார தொகுதியாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சி ரவூப் ஹக்கீம் மற்றும் முஸ்லிம் அமைச்சர்களின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டது. மேலும் மருதானையிலிருந்து பார்க்கும்போது தெளிவாக தெரியும் வகையில் அமைந்த, முஸ்லிம் கட்டிட வடிவமைப்பின் முக்கிய ஆதாரமான கூபாவைக்கூட அகற்றுவதற்கான சதி முயற்சிகளும்; மேற்கொள்ளப்பட்டதாக அறியவருகிறது.

முஸ்லிம் கலாசார திணைக்களத்துக்கான கட்டிடத்துக்காக மெக்லம் வீதியிலுள்ள காணி ஒதுக்கப்பட்டது. அந்தக் காணியிலேயே அமைச்சர் ரவூப் ஹக்கீம் அடிக்கல் நாட்டினார். பின்னர், இந்தக் காணியை பிறிதொரு அமைச்சு உரிமைகோரியது. இதன்போது பல பிரயத்தனங்களுக்கு மத்தியில் அதன் அருகில், டார்லி வீதியிலுள்ள காணியை ரவூப் ஹக்கீம் பெற்றுக்கொடுத்தார். எதிர்காலத்தில் அந்தக் காணியும் பறிபோகலாம் என்ற காரணத்தினால், அவசரமாக அங்கு தற்காலிகமாக இரண்டு மாடிக் கட்டிடத்தை நிர்மாணித்தார். நேற்று திறந்துவைக்கப்பட்ட புதிய கட்டிடமும் டார்லி வீதியிலுள்ள காணியிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படியான பல சதிகளை முறியடித்திருந்தாலும் இக்கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டபோது நிறுவப்பட்ட கல்வெட்டும் 2004ஆம் ஆண்டு நிர்மாணித்து திறந்துவைத்த தற்காலிக கட்டிடத்தின் வாயிற் தொகுதியில் பதிக்கப்பட்டிருந்த கல்வெட்டும் மாயமாகியுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளால் முஸ்லிம் பண்பாட்டு கட்டித்தொகுதி அமைப்பதற்கான ஆரம்ப வரலாறு மறைக்கப்பட்டுள்ளது தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது.


இத்ரீஸ் இயாஸ்தீன்
சட்டபீடம் (இறுதியாண்டு)
கொழும்பு பல்கலைக்கழகம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -