அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக காணாமல்போன மீனவர்களை தேடும் நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு மாலைதீவு உப ஜனாதிபதி அப்துல் ஜீஹாத் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். அத்தோடு குறித்த மீனவர்களை ஹெலிகொப்டர் மற்றும் சக்திவாய்ந்த விமானங்கள் ஊடாக மாலைதீவு மற்றும் சர்வதேச கடற்பரப்புக்களில் தேடுவதற்கான உத்தரவை முப்படைத் தளபதிக்கு பாதுகாப்பு அமைச்சர் ஆதம் சரீப் பிறப்பித்துள்ளார்.
மாலைதீவு நாட்டின் உப ஜனாதிபதி அப்துல் ஜீஹாத் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆதம் சரீப் ஆகியோரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் இன்று (9) சந்தித்து காணாமல் போன மீனவர்களை தேடும் நடவடிக்கையினை துரிதப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடினார். இதன்போதே மேற்குறித்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
மாலைதீவு ஹாலிப் தித்துத் தீவிலிருந்து தலைநகர் மாலே நகரை இன்று (9) வந்தடைந்த பிரதி அமைச்சர் ஹரீஸ் பிற்பகல் 2 மணியளவில் மாலைதீவு நாட்டின் உப ஜனாதிபதியை சந்தித்தார். இதன்போது காணாமல்போன மீனவர்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். ஹாலிப் தித்து தீவு கடற்பிரதேசத்தில் காணமல்போன ஆறு இலங்கை மீனவர்களில் நான்குபேர் கடந்த புதன்கழமை இரவு பிரிந்த நிலையில் மாலைதீவு மீனவர்களால் குறித்த தினத்தில் மீட்கப்பட்டுள்ளனர். இதனால் ஏனைய நான்கு மீனவர்களும் மாலைதீவு கடற் பிரதேசத்திலேயே இருக்கக்கூடும் என்ற சந்தேகம் நிலவுவதனால் அவர்களை தேடும் நடவடிக்கையினை துரிதப்படுத்துமாறு பிரதி அமைச்ர் உப ஜனாதிபதியை கேட்டுக்கொண்டார்.
இதன்போது மாலைதீவு அரசு குறித்த மீனவர்களை தேடுவதற்கு எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதி அமைச்சருக்கு உப ஜனாதிபதி எடுத்துக்கூறினார். அத்தோடு மீனவர்களை தேடும் பணியில் மிகுந்த அக்கறை செலுத்துவதாக கூறிய உப ஜனாதிபதி குறித்த நடவடிக்கையினை துரிதப்படுத்துவதற்கான பணிப்புரையினை பிரதி அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைவாக அதிகாரிகளுக்கு வழங்கினார்.
அதேவேளை மாலைதீவு நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஆதம் சரீப்பையும் இன்று (9) மாலை 3.30 மணியளவில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் மாலைதீவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் தொற தெனிய சகிதம் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது மாலைதீவு மீனவர்களால் இலங்கை மீனவர்கள் இருவர் மீட்க்கப்பட்டமைக்கு நன்றி தெரிவித்த பிரதி அமைச்சர் ஏனைய நான்கு மீனவர்களை தேடும் நடவடிக்கையில் மாற்று வழிமுறைகளை கையாள்வது தொடர்பில் கலந்துரையாடினார்.
மாலைதீவு கடலோரப்பாதுகாப்பு படை குறித்த மீனவர்களை தேடும் நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக பாதுகாப்பு அமைச்சர் இதன்போது தெரிவித்தார். மாற்று வழிமுறையினை கையாள்வது தொடர்பில் பிரதி அமைச்சர் ஹரீஸ் கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக குறித்த மீனவர்களை ஹெலிகொப்டர் மற்றும் சக்திவாய்ந்த விமானங்கள் ஊடாக மாலைதீவு மற்றும் சர்வதேச கடற்பரப்புக்களில் தேடுவதற்கான உத்தரவை பிரதி அமைச்சர் முன்னிலையில் முப்படைத் தளபதிக்கு பாதுகாப்பு அமைச்சர் பிறப்பித்தார்.
காணாமல் போன மீனவர்களை தேடும் மாலைதீவு அரசின் நடவடிக்கை தொடர்பில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் கருத்துத் தெரிவிக்கையில் இலங்கைக்கும் மாலைதீவுக்கும் உள்ள நட்புறவின் அடிப்படையில் மனிதாபிமான மீட்பு நடவடிக்கையாக கருதி குறித்த நடவடிக்கைக்கு ஏற்படும் பாரிய செலவினை கருத்திற்கொள்ளாது மாலைதீவு அரசு செயற்படுவதாக தெரிவித்தார். அத்தோடு தம் நாட்டு பிரஜையை தேடுவது போன்று குறித்த மீனவர்களை தேடுவதற்கு மாலைதீவு அரசு எடுத்துவரும் நடவடிக்கை மிகுந்த திருப்தி அளிப்பதாகவும் நம்பிக்கையளிப்பதாகவும் தெரிவித்தார்.
இதேநேரம் தித்துத் தீவில் உள்ள இரண்டு மீனவர்களையும் ஓரிரு நாட்களில் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான சட்ட ரீதியான அத்தனை நடவடிக்கைகளையும் பிரதி அமைச்சர் தூதுவராலயம் ஊடாக பூர்த்தி செய்துள்ளார். அத்தோடு குறித்த மீனவர்களுக்கு தேவையான சகல உதவிகளையும் மாலை தீவு அரசு ஊடாக பிரதி அமைச்சர் பெற்றுக் கொடுத்துள்ளார்.