நல்லாட்சியை தூக்கி தோளில் சுமப்பவர்கள் பாரம் தாங்க முடியாமல் தள்ளாடுகின்றனர்.

முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தலாய் இருந்த பொதுபல சேனாவை மஹிந்த கண்டிக்க தவறினார், என்பதற்காக அவரது ஆட்சியை கவிழ்த்து மஹிந்தவை அன்று வீட்டிற்கு அனுப்பியது எவ்வளவு பெரிய தவறு என்பதை இன்று முஸ்லிம் சமூகம் சிந்திக்கும் நிலைக்கு நல்லாட்சி கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

அண்மையில் ஞானசார தேரர் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வெளியிட்ட கருத்தானது. நல்லாட்சியை கொண்டுவந்து தங்களுடைய காரியங்களை நிறைவேற்ற துடித்த ஆட்டுத்தோல் போற்றிய சில ஓநாய்களுக்கு தற்போது பெரும் சவாலையும் ஏற்படுத்தியிருக்கிறது.

புறையோடிப்போய் கிடந்த பயங்கர வாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமலும், வெளிநாட்டு சக்திகளுக்கு கட்டுப்பட்டவர்களாகவும், பல ஆயிரக்கணக்கான உயிர்களை யுத்தத்தில் காவு கொடுத்துவந்த இலங்கை அரசாங்கங்களும், ஆட்சி செய்த தலைவர்களுக்கும் மத்தியில், எந்த விதமான சக்திகளுக்கும் அடிபணியாது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பூரணமாக பயன்படுத்தி யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இந்த நூற்றாண்டின் கதாநாயகன் மஹிந்தவை இனிமேலும் தோற்கடித்து ஆட்சியை கைப்பற்ற முடியாது என்ற, தோல்வி பயத்தில் இருந்தவர்கள், இனவாத சித்தாந்தமுடையவர்களை இணைத்துக்கொண்டு சிறுபான்மை சமூகத்தின் மத்தியில் விஷ ஜந்துக்களாக உலாவ விட்டதன் மூலம் முஸ்லிம்களை மஹிந்தவுக்கு எதிரானவர்களாக மாற்றவேண்டும், என்ற திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டார்கள் என்ற உண்மையை, இப்போது முஸ்லிம் சமூகம் படிப்படியாக உணர தொடங்கியிருகின்றது.

அன்று மகிந்தவுக்கு எதிராக கூவித்திரிந்த முஸ்லிம் தலைமைகள் இன்று நல்லாட்சியை தோளில் சுமந்து கொண்டு பாரம் தாங்க முடியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றார்கள். தேசியப்பட்டியல் என்றும் அமைச்சுப் பதவிகள் என்றும் உட்கட்சி பூசல் என்றும் புதைந்து கிடக்கிறார்கள். யாராவது தப்பித் தவறியேனும் வாய் திறந்தால் இவர்களின் வாய்களுக்கு நல்லாட்சி பூட்டுப் போட்டு சாவியை தூர வீசி எறிந்தும் விடுகிறது. அவர்களும் கொண்டு வந்த நல்லாட்சியை எதிர்த்து பேச முடியாமலும் ஆதரித்து பேச முடியாமலும், எல்லாக் காலத்திலும் அவர்கள் அவர்களுடைய கட்சியை காப்பாற்றிக் கொள்ளும் பதவிகளை தக்கவைத்துக்கொள்வதிலுமே முணைப்புக் காட்டுகிறார்களே தவிர சமூகம் இன்று நாதியற்று நடுத்தெருவில் அரைநிர்வாணமாக அழைவது பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.

மஹிந்தவை குற்றவாளியாக சித்தரித்த நல்லவர்கள் எல்லாம் இன்று நல்லாட்சிற்குள் தஞ்சம் அடைந்து கொண்டு அன்று மஹிந்த செய்ததாக கூறப்படும் அட்டூளியங்களை விட அதிகமாக நயவஞ்சகமாக வெளிப்படையாக செய்கிறார்கள். ஆனால் இந்த நல்லாட்சி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை மஹிந்தவை நீதிக்கு முன் குற்றவாளியாக கொண்டுவர அவர்களால் முடியவில்லை. காரணமும் புரியவில்லை, மஹிந்த நாட்டைவிட்டு தப்பி ஓடவும் இல்லை... உண்மையில் யார் தவறுகளுக்கு பொறுப்புடையவர்கள் என்பதை இவர்களை அறியாமல் எமக்கு காட்டித்தந்து கொண்டிருக்கிறார்கள்.

மஹிந்தவை முஸ்லிம்களுக்கு வேண்டத்தகாதவராக்கி அவர் அவரது ஆட்சிக்காலத்தில் செய்யாத, சொல்லாத விடயங்களை எல்லாம் இன்றுள்ள ஜனாதிபதி மைத்திரி அவர்கள் சொல்வதையும் தமது அதிகாரத்தின் மூலம் சர்வ சாரதரணமாக முன்னெடுத்து செல்வதையும், நிறைவேற்றுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.

தனது வெற்றிக்காக உழைத்த சிறுபான்மையர் சமூகத்தை குறிப்பாக முஸ்லிம்களை ஒரு பொருட்டாக கூட ஜனாதிபதி மைத்திரி அவர்கள் நினைவில் கொள்ளாமையானது நல்லாட்சி அரசின் மீது முஸ்லிம்கள் கொண்டுள்ள நம்பிக்கையை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் நாங்கள் மஹிந்தவுடன் உறவு வைக்க துவங்கினால் நல்லாட்சி துடுப்பில்லாமல் நட்டாத்தில் நிற்கும் என்பதை நல்லாட்சியும் உணரவில்லை நமது முஸ்லிம் தலைமைகளும் இதுவரை சிந்திக்க வில்லை என்றே கூற வேண்டியுள்ளது.

உலக சரித்திரத்தில், வீரத் தலைவர்களின் பெயர்ப்பட்டியலில் தனது பெயரையும் பதித்துக் கொண்ட மஹிந்தவினால் மாத்திரமே இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்பதை திட்டவட்டமாகவே கூற முடியும். அதற்கு பல நாட்டு தலைவர்களின் தோற்கடிப்பும், பின்னரான காலப்போக்கில் அந்நாட்டு மக்களின் தேடலும் உதாரணமாக அமைகின்றன. அப்படிப் பல தலைவர்கள் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் மக்களால் கொண்டுவரப்பட்டு நாடும் நாட்டு மக்களும் வெற்றிகண்ட வரலாறுகளும் நிறையவே இருக்கிறது.

பயங்கரவாதத்தை வைத்து அரசியல் செய்த இடுப்பெலும்பு இல்லாதவர்கள் இனவாதத்தை கையில் எடுத்து ஆட்சியில் கோலோச்ச துடிக்கிறார்கள். அதை இந்த நல்லாட்சியும் தனது இருப்புக்காக பாலூற்றி வளர்க்கிறது. இதன் காரணமாக முஸ்லிம்கள் நாம் எமது பலத்தை மீண்டும் ஒருதடவை நிரூபிக்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறது.

எனவே எடுப்பார் கைப்பிள்ளையாக அதிகாரத்தில் இருப்பவர்களை நம்பி முஸ்லிம்கள் தொடர்ந்து பயணிக்க முடியாது. உணர்ச்சிகளை தூக்கி வீசிவிட்டு அறிவார்ந்த சமூகமாக முஸ்லிம் சமூகம் எப்போது சிந்திக்க தொடங்குகின்றதோ அப்போதுதான் முஸ்லிம் சமூகம் சுபீட்சம் பெரும் என்பதே நிதானமாக சிந்திப்பவர்களின் முடிவாக இருக்கும்.

அந்தவகையில் எமது முஸ்லிம் தலைமைகள் கட்சி பேதங்களை மறந்து சமூகத்தின் பொதுவான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க ஒற்றுமையுடன் முன்வர வேண்டும். அப்படி அவர்கள் முன்வராவிட்டால் முஸ்லிம் சமூகம் நாங்கள் இனிவரும் எந்த தேர்தலாக இருந்தாலும் பசப்பு வார்த்தைகளை ஏற்காமல் நல்லாட்சிக்கு பாடம் புகட்ட வேண்டும்.

அஹமட் புர்க்கான்
கல்முனை...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -